Published : 07 Aug 2017 12:34 PM
Last Updated : 07 Aug 2017 12:34 PM

சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு: சமாளிக்க 3 மாற்று வழிகள்

மா

த தொடக்கத்தில் நம்முடைய சேமிப்பு கணக்கில் சம்பளம் வந்துவிடும். நாம் செலவு செய்தது போக மீதம் இருக்கும் தொகை மற்றும் அவசரத் தேவைக்காக வங்கி கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கு வட்டி வழங்கப்படுவது வாடிக்கையான விஷயம்தான். ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு வகையான வட்டி விகிதம் வழங்கினாலும் பெரும்பாலான வங்கிகள் 4 % வட்டி வழங்குகின்றன.

கடந்த வாரம் நாட்டின் மிகப்பெரிய வங்கிகளான எஸ்பிஐ மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைத்திருக்கின்றன. இந்த வட்டி குறைப்பினை தொடர்ந்து மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பை அமல்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

சராசரியாக சில்லரை பணவீக்கம் 6 சதவீதம் என எடுத்துகொள்வோம். சேமிப்பு கணக்கு வட்டி 3.5 % என்றால், வங்கியில் வைத்திருக்கும் தொகை மூலமாக நமக்கு 2.50 % அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது இந்த தொகை மிகப் பெரியதாக இருக்கும். இந்த வட்டி குறைப்பை சமாளிக்க நான்கு மாற்று வழிகள் இருக்கின்றன.

வேறு வங்கிக்கு மாறலாம்

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு பொதுத்துறை வங்கிகள் அதிக டெபாசிட்டுகளை பெற்றன. இதன் காரணமாக சேமிப்பு கணக்கு வட்டியை குறைக்க தொடங்கி உள்ளன. ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன. கூடுதல் வட்டி வழங்குகின்றன.

யெஸ் பேங்க் ஒரு கோடி ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 6% வட்டி வழங்குகிறது. கோடக் மஹிந்திரா வங்கியும் 6 % வட்டி வழங்குகிறது. ஆர்பிஎல் வங்கி ஒரு லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 5.5 சதவீத வட்டியை வழங்குகிறது. ஒரு லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான சேமிப்புக்கு 6 % வட்டியை வழங்குகிறது. லஷ்மி விலாஸ் வங்கி 5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு தொகைக்கு 5 சதவீத வட்டியை வழங்குகிறது. தவிர புதிய வங்கிகளில் கணக்கு தொடங்கும் பட்சத்தில் இலவசமாக சில சலுகைகளும் கிடைக்கலாம். உதாரணத்துக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகள், இலவச காப்பீடு, லாக்கர் வசதி, கேஷ் பேக் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஸ்வீப் வசதியை பயன்படுத்தலாம்

3.5 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 5 முதல் 6 % என்பது கூடுதலாக இருக்கலாம். ஆனால் உங்களது சேமிப்பு கணக்கில் அதிக தொகையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால், கிடைக்கும் வருமானத்தை வரிக்கு அதிகம் செலுத்த வேண்டி இருக்கும். ஆண்டுக்கு ரூ.10,000 வரை கிடைக்கும் வட்டிக்கு வரி கிடையாது.

வரியை தவிர்ப்பதற்கு வங்கிகள் வழங்கும் ஸ்வீப் வசதியை பயன்படுத்தலாம். உங்களது சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கும் மேல் இருக்கும் பட்சத்தில் அந்த தொகையை பிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு தொகைக்கு மேல் என்பதை நீங்கள் நிர்ணயம் செய்யலாம். அவசர தேவைக்கு பிக்ஸட் டெபாசிட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும் வங்கிகள் அனுமதிக்கின்றன.

ஸ்வீப் வசதியில் இருக்கும் பாதகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்வீப் வசதியில் சிறப்பான வட்டி விகிதத்தில் முதலீடு செய்ய முடியாது. பெரும்பாலான வங்கிகள் ஒர் ஆண்டு டெபாசிட்டிலேயே ஸ்வீப் வசதியை கொடுக்கின்றன. பெரும்பாலும் ஒரு ஆண்டுக்கான வட்டி மிகமிக குறைவு. மேலும் வருமான வரி வரம்புக்கு ஏற்ப வட்டி தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

மியூச்சுவல் பண்ட்

பணவீக்கம் குறையும் போது வங்கிகள் வட்டியை குறைக்கும். ஆனால் பணவீக்கம் உயரும் போது இதே வேகத்தில் வங்கிகள் சேமிப்புக்கான வட்டியை உயர்த்தாது. ஒரு முதலீட்டாளராக சந்தைக்கு ஏற்ப முதலீடு செய்வதே சரியானதாக இருக்கும். லிக்விட் மற்றும் மணி மார்க்கெட் பண்ட்கள் இதற்கு சரியான தீர்வு. சந்தைக்கு ஏற்ப இந்த பண்ட்களின் வருமானம் இருக்கும். இந்த இரண்டு பண்ட்களும் கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 8 % வருமானத்தை வழங்கி இருக்கின்றன. ஆனால் தற்போதைய வட்டி விகித சூழலில் 6.5% எதிர்பார்க்கலாம்.

மியுச்சுவல் பண்ட் நிறுவனங்களின் செயலிகள் இருக்கின்றன. உங்களது சேமிப்பு கணக்கை, இந்த செயலிகளுடன் இணைத்துக்கொள்ளும் பட்சத்தில் நேரடியாக இந்த பண்ட்களில் முதலீடு செய்ய முடியும். வங்கி சேமிப்பு கணக்கைவிட இந்த பண்ட்களில் வரிச்சலுகை உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்க விகித சரிகட்டலுக்கு பிறகு வரி செலுத்தினால்போதும்.

- aarati.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x