Last Updated : 31 Jul, 2017 12:04 PM

 

Published : 31 Jul 2017 12:04 PM
Last Updated : 31 Jul 2017 12:04 PM

உயிர் காக்கும் சீட் பெல்ட்!

ட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அக்டோபர் மாதத்திலிருந்து புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதற்கேற்ப கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தயாரிப்பில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ள மிகச் சிறந்த சாலை பாதுகாப்பு விதிகளை இந்தியாவிலும் செயல்படுத்த மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கார் உபயோகிப்பாளர் மட்டுமின்றி பாதசாரிகளின் உயிரைக் காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது.

இதற்கேற்ப கார் தயாரிப்பு நிறுவனங்களும் உயிர் காக்கும் ஏர் பேக், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அதேசமயம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான புகை வெளியீடு மற்றும் பயணிகளின் சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையிலான தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவில் முதலீடு செய்துள்ளன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஹரியாணா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாடல் காரின் பாதுகாப்பு அம்சமும் சோதிக்கப்படுகிறது. அதாவது குறைந்தது 35 முதல் 40 கார்கள் வரை `கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

பொதுவாக கார் பயணிகள் அதாவது ஓட்டுநர் மற்றும் முன்புற பயணி கூட பல சமயங்களில் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் உயிர் காக்கும் ஏர் பேக் வசதி உள்ளதே என்ற அசிரத்தை தான் இதற்குக் காரணம். ஆனால் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் சரிவர வேலைசெய்யும்போது உயிர் காக்கப்படும்.

உலக சுகாதார மையம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில்கூட வாகன விபத்தில் முன்னிருக்கை பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிருந்திருந்தால் 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான உயிரிழப்பை விபத்தின்போது தடுக்க உதவுவது தெரிய வந்துள்ளது. அதே போல சீட் பெல்ட் அணிவதால் மிக மோசமான காயம் அடைவது 25% வரை குறைவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றிருந்தாலும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அதே சமயம் இதை கடுமையாக பின்பற்ற போதிய காவல்துறையினரும் இல்லாதது துரதிருஷ்டமாகும்.

பின்னிருக்கை பயணிகளுக்குக் கூட சீட் பெல்ட் அணிய வேண்டிய வசதி அளிக்கப்பட்டாலும் அதை யாருமே பொருட்படுத்துவதில்லை. விபத்து நடக்கக் கூடாது என்பதே அனைவரது விருப்பமாகும். எதிர்பாராமல் நிகழ்வதே விபத்து. உயிர் காக்கும் ஏர் பேக் இருந்தாலும் முறையாக சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே அது உயிர் காக்கும் என்பதை உணர வேண்டும்.சட்டத்தினால் எதையும் கட்டாயமாக்க முடியாது. வாகனம் பயன்படுத்தும்போது நமது உயிர் மற்றும் மற்றவர்களின் உயிரை மதித்து விதிகளை கடைபிடிப்பதே சிறப்பானதாகும்.

(கட்டுரையாளர் மாருதி சுஸுகி இன்ஜினீயரிங் பிரிவின் செயல் இயக்குநர்)

தொடர்புக்கு: - cv.raman@maruti.co.in


Mr C V Raman

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x