Published : 31 Jul 2017 12:02 PM
Last Updated : 31 Jul 2017 12:02 PM

விரைவில் வருகிறது டாடா டியாகோ பேட்டரி கார்

போ

ட்டி நிறைந்த உலகம் இது. வலிமை உள்ளது எஞ்சும் என்றாலும், போட்டிக் களத்தில் யார் முதலில் களமிறங்குகிறார்களோ அவர்கள்தான் பிரதானமாக அடையாளம் காணப்படுவர். இதை நன்கு உணர்ந்துள்ளது டாடா மோட்டார்ஸ். உலகமே மாற்று எரிசக்தி வாகன உற்பத்தியில் கவனம் செலுத்திவரும் நேரத்தில் இந்தியாவில் பிற நிறுவனங்களுக்கு முன்னோடியாக பேட்டரி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

இந்நிறுவனத்தின் பிரபல மாடலான டியாகோவில் பேட்டரி மாடலை செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

டாடா டியாகோ இவி என்ற பெயரில் இது அறிமுகமாகிறது. நிறுவனத்தின் மற்றொரு மாடலான போல்ட் பிஇவி புரோடோடைப் மாடலில் இது உருவாக்கப்பட்டுள்ளது.டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான இங்கிலாந்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம் (டிஎம்இடிசி) இந்த கார் உருவாக்கத்துக்குப் பெரிதும் உதவியுள்ளது.

குறைந்த அளவு கரியமில வாயு உமிழும் வாகனங்களுக்கான கண்காட்சி இங்கிலாந்தின் மில்புரூக்கில் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியின்போது டாடா டியாகோ இவி அறிமுகமாகும் என்று நிறுவனம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. தனது புதிய பேட்டரி காரின் வடிவமைப்புக்கு டியாகோ மாடலை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

பேட்டரி கார்களுக்கு அரசு அதிகபட்ச சலுகை அறிவித்துள்ள நிலையில் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுவதும் பேட்டரியால் இயங்கும் பஸ்ஸை அறிமுகப்படுத்தியது. வாகனங்கள் வெளியேற்றும் புகையளவைக் குறைத்து சுற்றுச் சூழலைக்காக்கும் அரசின் முயற்சிக்கு உறுதுணையாக முன்னோடி தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ்.

சமீபத்தில் பயோ-சிஎன்ஜி மற்றும் பயோ மீத்தேன் பஸ்ஸையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x