Published : 19 Jun 2017 10:24 AM
Last Updated : 19 Jun 2017 10:24 AM

6-வது தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஃபோக்ஸ்வேகனின் போலோ பிராண்ட் கார்களின் 6-வது தலைமுறை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது.

முதலாவது தலைமுறை போலோ கார்கள் 1975-ம் ஆண்டு அறிமுகமானது. ஏறக்குறைய 42 ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமான பிராண்டாக இந்த மாடல் திகழ்கிறது. இதுவரையில் ஒரு கோடியே 60 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.

முதல் தலைமுறை கார் உருவாக்கப்பட்டபோது அதன் வெளிப்புற நீளம் 351 செ.மீ என நிர்ணயிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த நீளத்தில் எவ்வித மாறுதலும் செய்யப்படாமல் வடிவமைப்பில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஐந்து தலைமுறையாக இது வாடிக்கையாளர்களின் நம்பகமான பிராண்டாகத் திகழ்கிறது.

தொடக்கத்தில் அதிக எடை மிகுந்ததாக இருந்தது. 1980-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட போலோ 1 ஜிடி 700 கிலோ எடை கொண்டதாக வெளிவந்தது.

1987-ம் ஆண்டில் 1.3 லிட்டர் போலோ II கூபே அறிமுகமானது. இதைத் தொடர்ந்து வெளியான போலோ III மாடல் கார் பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடலாக இருந்தது.

மிகுந்த இடைவெளிக்குப் பிறகு நான்காம் தலைமுறை மாடலை 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து நீல நிற 5-வது தலைமுறை போலோ கார் அதிக எரிபொருள் சிக்கனமானதாக 2013-ம் ஆண்டில் வெளி வந்தது. இது சோதனை ஓட்டத்தில் 100 கி.மீ தூரத்தை 4.5 லிட்டர் பெட்ரோலில் கடந்தது.

இப்போது வெளி வர உள்ள 6-வது தலைமுறை மாடல் காரானது பிக்யூ25 பிளாட்பார்மில் தயாராகிறது. ஸ்கோடா ஃபேபியா, சியெட் இபிஸா உள்ளிட்ட மாடல்கள் இந்த பிளாட்பார்மில்தான் தயாராகின்றன. இதில் மாறுதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனம் ஓட்டுபவருக்கு பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்தக் காரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல பொழுது போக்கு அம்சங்களும் இதில் கூடுதலாக இருக்கும் என்று போலோ ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை 6-புதிய மாடல் கார் நிறைவேற்றும் என நிச்சயம் நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x