Published : 03 Aug 2015 12:40 PM
Last Updated : 03 Aug 2015 12:40 PM

10 புதிய கார் | ரூ.6,400 கோடி முதலீடு | 12,000 பேருக்கு வேலை - ஜெனரல் மோட்டார்ஸின் உத்தி பலிக்குமா?

கடந்த வாரம் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் மேற்கொள்ள உள்ள முதலீடு குறித்த செய்தி வெளியாகாத நாளேடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். சில நாளேடுகள் பிரதமர் நரேந்திர மோடியை, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் மேரி பாரா சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டன. நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல் கார்களை வெளியிட்டன வணிக செய்தித் தாள்கள்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 6,400 கோடி முதலீடு செய்யப் போவதாகவும், இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய மேரி பாராவின் செய்தி பெரும்பாலானவர்களை ஈர்த்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால் குஜராத்தில் ஹலோல் எனுமிடத்தில் இயங்கிவரும் ஆலையை மூடப் போவதான அறிவிப்பு மட்டும் அரசல் புரசலாக அல்லது அதிக முக்கியத்துவம் இல்லாத செய்தியாக வெளியானது. இதனால் ஹலோல் ஆலையில் பணியாற்றும் 1,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 300 ஒப்பந்த ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக திருப்தி கரமாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரபலமாக இருந்தாலும் ஊழியர்கள் பிரச்சினை இந்த நிறுவன வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததை கடந்தகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு இரண்டு ஆலைகள் உள்ளன. ஒன்று மகாராஷ்டிர மாநிலம் தலேகானிலும் மற்றொன்று குஜராத் மாநிலம் ஹலோலிலும் உள்ளது. ஹலோல் ஆலை 1996-ல் உருவாக்கப்பட்டது. தலேகான் ஆலை 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2003-ம் ஆண்டில் ஒரு தொழில்நுட்ப மையத்தை பெங்களூவில் தொடங்கியது. ஹலோல் ஆலைதான் இந்நிறுவனத்தின் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.

மூடக் காரணம் என்ன?

2010-ம் ஆண்டில் ஹலோல் ஆலையில் தொழிலாளர் பிரச்சினை தலைதூக்கியது. இதனால் மூன்று நாள்கள் உற்பத்தி முடங்கியது. பிரச்சினை தீர்க்கப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் தொழிலாளர் பிரச்சினை உருவானது. ஏறக்குறைய 6 வாரங்கள் ஆலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய வேலைநிறுத்தப் போராட்டம் ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்தது என்றே சொல்லலாம். இந்த ஆலை ஆண்டுக்கு 1.27 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இதிலிருந்தே படிப்படியாக தலேகான் ஆலையின் செயல்பாடுகளை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டது. புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள முதலீடும் இந்த ஆலைக்கு மட்டும்தான்.

இதனிடையே இங்கு தயாரான 1.14 லட்சம் டவேரா வாகனங்களை பழுது நீக்குவதற்காக திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல கடந்த மாதம் 1.55 லட்சம் ஸ்பார்க், பீட், என்ஜாய் ரகக் கார்களை பழுது நீக்குவதற்காக நிறுவனம் திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

சர்வதேச அளவில் பிரபலமான இந்நிறுவனத்துக்கு பழுது காரணமாக கார்களை திரும்பப் பெற வேண்டிய பிரச்சினை நிறுவனத்தின் நம்பகத் தன்மைக்கு சவாலாக அமைந்தது. கார்களின் விற்பனை சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

புதிய அறிமுகம்

பிரதமர் மோடியை சந்தித்த அன்றைய தினமே சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் தங்கள் நிறுவனத்தின் டிரையல்பிளேசர் என்ற எஸ்யுவி ரகக் காரையும், பன்முக உபயோக வாகனமான (எம்பிவி) ஸ்பின் என்ற காரையும் அறிமுகப்படுத்தினார் மேரி பாரா.

டிரையல்பிளேசர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி ரகமான டிரையல் பிளேசர், டொயோடாவின் பார்சூனர் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் எண்டேவருக்குப் போட்டியாக இருக்கும். இதன் விலை ரூ. 18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையாகும்.

புதிய ரக டிரையல் பிளேசர் முற்றிலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு (சிகேடி) முறையில் இங்கு விற்பனை செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டதாக இது வெளிவந்துள்ளது. இது 2,776 சிசி திறன் கொண்டதாகும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் இது வெளிவந்துள்ளது. 18 அங்குல அலாய் வீல், 4,878 மிமீ நீளம் 1,902 மிமீ. அகலம் கொண்டது. 2,845 மிமீ. அகலம் கொண்ட சக்கரங்கள் உள்ளன. இதில் 76 லிட்டர் டீசலை நிரப்பும் வகையில் டேங்க் உள்ளது.

7 பேர் பயணிக்கும் வகையிலான இதில் தொடுதிரை, யுஎஸ்பி போர்ட், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி உள்ளன. ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் எலெக்ட் ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராமிங் (இபிடி) வசதியோடு வந்துள்ளது. மலையேறுவதற்கு ஏற்ற வசதி, பதற்றமான சூழலில் பிரேக் உதவி வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல், இரட்டை ஏர்பேக் ஆகியன உள்ளது இதன் சிறப்பம்சங்களாகும். 7 வண்ணங்களில், புளூ மவுன்டென், சுமித் வொயிட், அனுபர்ன் பிரவுன், பிளாக் சபையர், ராயல் கிரே, சிஸெல் ரெட், ஸ்விட்ச் பிளேடு சில்வர் என இது வெளிவந்துள்ளது.

செவர்லே ஸ்பின்

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் ஸ்பின் மாடல் கார்கள் வந்துள்ளன. பன்முக பயன்பாட்டு வாகனமான இது 1.5 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜினுடன் வந்துள்ளது. 1,485 சிசி திறனுடன் இது வெளிவந்துள்ளது. டீசல் கார் 1.3 லிட்டர் இன்ஜினுடன் 1,248 சிசி திறனுடன் வெளிவந்துள்ளது. 7 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ, ரெனால்ட் லாட்ஜி ஆகிய கார்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4.36 மீட்டர் நீளமும் 1.73 மீட்டர் அகலமும் கொண்டது. 1.68 மீட்டர் உயரமும் 191 மிமி கிரவுண்ட் கிளியரன்ஸும் உள்ளது. இதன் சக்கர அகலம் 2.52 மீட்டராகும். இதன் எடை 1,277 கிகி.

இதை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான என்ஜாய் ரக கார்களை இந்நிறுவனம் படிப்படியாக நிறுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது. 2012-ம் ஆண்டிலிருந்து சர்வதேச சந்தையில் வலம் வரும் ஸ்பின் காரை இனி இந்திய சாலைகளிலும் காணலாம். விலை ரூ.14 லட்சம் முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் நிறுவனம் செயல்படும் என்று மேரி பாரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவதும் முக்கிய நோக்கமாகும். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவதும் அதனால் 5 ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பதும் வரவேற்கத்தக்க விஷயம்தான். அதற்காக ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனத்தை மூட வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டிய தருணமிது.

நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இருந்தாலும் 1,300 குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x