Published : 09 May 2016 10:56 AM
Last Updated : 09 May 2016 10:56 AM

விரைவில் வருகிறது டாடாவின் பேட்டரி கார்!

டீசல் கார்களுக்கு தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடரும் தடை காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது பெட்ரோல் கார் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன.

பெட்ரோல், டீசல் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுற்றுச்சூழல் காப்பில் தங்களுக்குள்ள பொறுப்புணர்வை அறிந்து பேட்டரி கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிறுவனத்தின் பேட்டரி கார்கள் விரைவில் சந்தைக்கு வர உள்ளன. இத்தகைய கார் தயாரிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இந்த வாகன வடிவமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

பேட்டரி கார் உருவாக்கம் என்பது ஆலைக்கு வெளியே பல நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முழுமைபெற்ற பிறகு கார் தயாரிப்பு மேற்கொள்ளப்படும் என்கிறார் டாடா சன்ஸ் குழும செயல்குழு உறுப்பினர் முகுந்த் ராஜன்.

இந்தியாவில் தற்போது பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மட்டுமே. இந்நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த மெய்னி குழுமத்திடமிருந்து ரேவா கார் தயாரிப்பு நுட்பத்தைக் கையகப்படுத்தி அதிலிருந்து மேம்பட்ட கார்களை உருவாக்கி வருகிறது. டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் இ20 என்ற பேட்டரி காரை மஹிந்திரா மஹிந்திரா காட்சிக்கு வைத்திருந்தது. நான்கு கதவுகளைக் கொண்ட ஹாட்ச் பேக் காராகும். இது இன்னமும் விற்பனைக்கு வரவில்லை.

இந்நிலையில் டாடா நிறுவனமும் பேட்டரி கார் தயாரிப்பு களத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

ஊழியர்களுக்கு பாதுகாப்பு வாட்ச்

பொதுத்துறை நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை தன்னகத்தே கொண்டுள்ள தனியார் நிறுவனங்களில் முதன்மையாகத் திகழ்வது டாடா குழுமமாகும். நிறுவன வளர்ச்சியோடு ஊழியர்களின் பாதுகாப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் எப்போதுமே டாடா நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தற்போது ஊழியர்களுக்கான பாதுகாப்பு கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது டாடா குழுமம்.

ஊழியர்களின் பாதுகாப்புக்காக குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து இத்தகைய கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளன.

ஆலைத் தொழிலாளர்கள் குறிப்பாக அதிக பாதுகாப்பு தேவைப்படும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

உலகிலேயே ஆலைத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதலாவது பாதுகாப்பு கைக்கடிகாரம் இதுவாகும்.

டாடா லோகோவுடன் இந்த கைக்கடிகாரம் வந்துள்ளது.

இந்த கடிகாரத்தை முதலில் டாடா ஸ்டீல் ஆலைத் தொழிலாளர்கள் பயன்படுத்த உள்ளனர். அதேபோல டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆலைகளின் ஷாப் புளோர் எனப்படும் மிகவும் முக்கியமான பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களிடமும் இதன் செயல்பாடு குறித்து கருத்து கேட்கப்பட உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் கிளவுட் அடிப்படையிலான நுட்பத்தில் செயல்படுவது. இதை டாடா எல்எக்ஸ்எஸ்ஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இதைத் தயாரிக்கும் பணியை டைட்டன் மேற்கொண்டுள்ளது.

ஊழியர்களின் பாதுகாப்பு அம்சங்களான உடலின் வெப்ப நிலை, சுற்றுப்புறத்தில் நிலவும் காற்றின் தன்மை, நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை இந்த கடிகாரம் கணித்துவிடும்.

இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் பணி புரியும் ஊழியரின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதை எச்சரித்து உடனடி மருத்துவ தேவை கிடைக்க வழி செய்யும்.

இதேபோல தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிபவர்களுக்கான கடிகாரத்தைத் தயாரிக்கும் பணியிலும் டாடா ஈடுபட்டுள்ளது. இந்த கடிகாரமும் இப்பிரிவில் முதன்மையானதாக இருக்கும்.

ஏற்கெனவே ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் சில நிறுவனங்கள் இதுபோன்ற கடிகாரங்களைத் தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளன. ஆனால் டாடா நிறுவனம் ஆலைத் தொழிலாளர்களுக்கென பாதுகாப்பு கடிகாரத்தைத் தயாரித்துள்ளது. இது டிஜிட்டல் சென்சாரைக் கொண்டுள்ளது.

அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறும் டாடா நிறுவனம் தனது ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x