Last Updated : 17 Jul, 2017 10:35 AM

 

Published : 17 Jul 2017 10:35 AM
Last Updated : 17 Jul 2017 10:35 AM

வாகனங்களுக்கான இழப்பீடு கோரிக்கைநிராகரிக்கப்படுவது ஏன்?

பொதுவாக ஒரு பொருளை நாம் வாங்கச் சென்றால், அது உலகிலேயே மிகச் சிறப்பான தயாரிப்பு என்று விற்பனையாளர் அதைப் பற்றி புகழ்ந்து பேசி நம்மை வாங்க வைத்துவிடுவார். அதே நாம் ஒரு பொருளை விற்கச் சென்றால், இதை எவருமே வாங்குவதில்லை, இதைவிட மேம்பட்ட தொழில்நுட்பத்திலான பொருள்களே தம்மிடம் விற்பனையாகாமல் உள்ளதாகக் கூறுவார். பொருள்களுக்குத்தான் இந்த நிலை என்றில்லை, வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பதாக நீங்கள் நினைத்தாலே போதும், உங்கள் வீட்டு வாசல் கதவை பல காப்பீடு முகவர்கள் தட்டுவார்கள்.

போதாக் குறைக்கு ஆன்லைன் மூலம் காப்பீடுகளை விற்கும் நிறுவனங்களும், தொலைபேசி மூலமாகவே நச்சரிப்பர். சரி ஒரு வழியாக காப்பீடு எடுத்துவிட்டீர்கள், அதுவரை பிரச்சினை இல்லை. காப்பீடு எடுப்பதே ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், அந்த இழப்பை ஈடுகட்டுவதற்குத்தான். பெரும்பாலும் அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்று நினைப்போம்.

சரி, துரதிருஷ்டவசமாக நேர்ந்துவிட்டது. வாகனத்துக்கு மட்டும் சேதம். அதற்கு இழப்பீடு கோருகிறீர்கள் என்றால், அப்போதுதான் உங்களுக்கு காப்பீட்டை விற்ற முகவர், எந்த அளவுக்கு அதில் உதவுவார் என்று தெரியும்?

பொதுவாக வாகனக் காப்பீடு எடுப்பதன் அவசியமே விபத்து, திருடுபோவது மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்குத்தான். இவை தவிர மூன்றாம் நபர் காப்பீடு என்பது மிகவும் அவசியம். அதாவது வாகன விபத்தால் வாகன ஓட்டிகள் தவிர பாதசாரிகள் அல்லது மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு அளிப்பதே மூன்றாம் நபர் காப்பீடு ஆகும். இன்றைய சூழலில் 33 சதவீத கார் உரிமையாளர்களுக்கு தங்களது காருக்கு காப்பீடு எடுக்க வேண்டும் என்பதே தெரியவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.

மேலும் பலரும் தங்களது வாகன காப்பீடுக்கு இழப்பீடு கோரும்போது அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் விரக்தியால் தொடர்ந்து வாகன காப்பீடு எடுப்பதைத் தவிர்க்கின்றனர். இதனாலேயே எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு கோரும் மனு நிராகரிக்கப்படும் என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். முன்னதாக வாகன காப்பீடு எடுக்கும்போதே அந்த நிறுவனம் இழப்பீடு (கிளைம்) செட்டில்மென்ட் எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

அதேசமயம் உங்களது இழப்பீடு நிராகரிக்கப்படுகிறது என்றால் அதற்குரிய காரணத்தை, விளக்கத்தை அந்த நிறுவனம் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும். நீங்கள் கோரும் இழப்பீடுக்கு உரியதா அல்லது இழப்பீடு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.

பொதுவாக இழப்பீடு (கிளைம்) நிராகரிக்கப்படுவதற்கான 8 முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் சரிவர பூர்த்தி செய்துவிட்டால் உங்களது இழப்பீடு மனு நிச்சயம் நிராகரிக்கப்படாது.

காலாவதியான லைசென்ஸ்

வாகன ஓட்டிகளுக்கு மிகவும் முக்கியம் லைசென்ஸ். அது இழப்பீடு கோரும்போது காலாவதியானதாக இருக்கக் கூடாது. மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 5 கோடி வாகன ஓட்டிகள் போலியான லைசென்ஸ் வைத்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. உங்களிடம் உள்ளது காலாவதியான அல்லது போலியான லைசென்ஸ் என்றால் முதல் நிகழ்விலேயே உங்களது மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.

சேதத்தின் அளவு

எப்போதோ நிகழ்ந்த விபத்துக்கு காப்பீடு எடுத்த பிறகு இழப்பீடு கோர முடியாது. இழப்பீடு கோரும்போது வாகனம் எந்த அளவுக்கு சேதம் அடைந்துள்ளது, இந்த சேதம் எப்போது நிகழ்ந்தது என்பதை மதிப்பீடு செய்த பிறகுதான் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

தொழில்நுட்ப, மின்சாரக் கோளாறு

வாகனம் பயன்படுத்தும் அளவு, அது வாங்கிய ஆண்டு, குறிப்பிட்ட கால அளவில் சர்வீஸ் செய்யப்பட்டதா என்ற விவரம் அறியப்படும். இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன், ஸ்டீரிங், பியூயல் சிஸ்டம், பிரேக் ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளுக்கு இழப்பீடு கோர முடியாது. சாலைகளில் செயல்படும் அளவுக்கு தகுதி வாய்ந்த வாகனம் என்பதை சான்று மூலம் வாகன உரிமையாளர் நிரூபிக்க வேண்டும்.

முந்தைய இழப்பீடு?

சரியான தகவல்களை மறைப்பது, முந்தைய இழப்பீடு கோரிய விவரத்தை அளிக்காமலிருப்பது போன்ற காரணங்களால் இழப்பீடு நிராகரிக்கப்படலாம். முந்தைய காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மாறி புதிய நிறுவனத்தில் இழப்பீடு கோரினால், முந்தைய நிறுவனத்தில் இழப்பீடு கோரிய விவரத்தை தெரிவிக்க வேண்டும். உரிய விவரங்களை சரிவர தெரிவிக்காத விண்ணப்பங்களை காப்பீட்டு நிறுவனங்கள் நிச்சயமாக நிராகரிக்கும்.

பெயர் மாற்றம்

வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்தான் இழப்பீடு கோர முடியும். இப்போது செகன்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கி உபயோகிக்கும் போக்கு அதிகம் உள்ளது. அவ்விதம் வாகனங்களை வாங்குவோர் உடனடியாக கார் பதிவு மற்றும் காப்பீடு பதிவு விவரங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வாகன பதிவு மற்றும் காப்பீடு பதிவு மாற்றாமல் வாகனத்தை நீங்கள் வாங்கியிருந்தாலும் இழப்பீடு கோர முடியாது.

அதிக சுமை

அதிக சுமை அல்லது கூடுதல் நபர்கள் பயணித்தால் அதற்கு இழப்பீடு கோர முடியாது. 2015-ம் ஆண்டில் நிகழ்ந்த 77 ஆயிரம் விபத்துகளில் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால் இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கூடுதலாக பயணித்தவர்கள். இதனால் இவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

மது மயக்கம்?

மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கு இழப்பீடு கோர முடியாது. விபத்து நடந்த சமயத்தில் வாகனம் ஓட்டியவர் மது அருந்தியிருக்கக் கூடாது. இதற்கு மருத்துவ சான்று அளிக்க வேண்டும். சொந்த உபயோகத்துக்கான வாகனத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது. இவ்விதம் மாற்றி பயன்படுத்தும்போது அது விபத்துக்குள்ளானால் இழப்பீடு மறுக்கப்படலாம்.

இழப்பீடு பெற எளிய வழிகள்

முதலில் விபத்து நடந்தவுடன் வாகனத்தை புகைப்படம் எடுக்க வேண்டும். விபத்தின் தன்மையை நிரூபிக்கும் ஒரே ஆவணம் இதுதான். வாய்ப்பு கிடைத்தால் ஆன்லைன் மூலமாகவே விபத்தின் தன்மையை காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிக்கலாம். வாகனத்தின் நிலை குறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கவும். வாகனம் திருடு போயிருந்தால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) படிவத்தை அளிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு இழப்பீடு குறித்த விவரத்தையும் அளிப்பதன் மூலம் இழப்பீடு பெறுவது எளிதாகும்.

முதலில் உரிய காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்து எந்தெந்த இழப்புகளுக்கு காப்பீடு உண்டு என்பதை சரிவர புரிந்துகொண்டு காப்பீடு எடுக்கவும். இதுவே இழப்பீடு கோரும்போது ஏற்படும் பிரச்சினைகளில் பாதியளவை குறைத்துவிடும்.

கட்டுரையாளர் - (பாரதி ஆக்ஸா பொது காப்பீட்டு நிறுவன தலைமை மதிப்பீட்டு அதிகாரி.)
- parag. gupta@bharti-axagi. co. in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x