Last Updated : 15 Feb, 2016 12:00 PM

 

Published : 15 Feb 2016 12:00 PM
Last Updated : 15 Feb 2016 12:00 PM

ரோபோ ஆலோசகர்களின் வரவு நல்லதா?

நம்மில் பலரும், பல தேவைகளுக்காக நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டிருப்போம். மறுமுனையில் பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதல்படி, எண்களை அழுத்துவதன் மூலம் நமக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம். இப்படி தாமாக குரல்வழி பதில் அளிக்கும் தொழில்நுட்பத்துக்கு பெயர் ஐவிஆர்எஸ் தொழில்நுட்பம்.

இப்படியான நவீன தொழில்நுட்பம் வந்தபோது, இதுபோன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்கிற சர்ச்சை எழுந்தது.

வங்கித் துறையில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் கால ஓட்டத்தில் இந்த தொழில்நுட்பங்கள் இருந்தால்தான் சந்தையில் நிற்க முடியும் என்ற நிலைக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.

இப்போது எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. அதனால் எல்லா தேவை களையும் ஆன்லைன் மூலமே நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளதா என எப்போதும் இணையத் தில் முட்டிமோதுகிறார்கள். தங்களது நோய்களைக்கூட இணைய ஆலோசனை செய்து, இணையத்தில் மருந்துவாங்கி உட்கொள்ளும் அளவுக்கு நம்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலைமையில் நிதி ஆலோசனை துறையில் மட்டும் பழையபடியே நிதி ஆலோசகர்களை தேடி அலைந்து கொண் டிருக்க முடியுமா... அதற்கும் வந்துவிட் டது ரோபோ அட்வைசர்ஸ் எனப்படும் தானியங்கி ஆலோசகர்கள். ஐவிஆர்எஸ் தொழில்நுட்பத்தின் முன்னேறிய வடிவம்தான் இந்த ரோபோ அட்வைசர்ஸ்.

அதாவது தொழில்துறையில் தானி யங்கி இயந்திர மனிதனின் உபயோகம் எப்படி அதிகரித்துள்ளதோ அதைப்போல நிதி சார்ந்த துறையிலும் இந்த தானியங்கி ஆலோசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உரிய வழியில் முதலீடு செய்வதற்காக இணையத்தில் தேடுவோருக்கு தீர்வளிப்பதாக இருக்கிறது இந்த தொழில்நுட்பம்.

யாருக்குத் தேவை?

சிறிய முதலீடுகளை மேற்கொள்வோர், ஓரளவு கம்ப்யூட்டர் ஆலோசகரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரம் இருப்பவர்களின் தேர்வாக இது அமைகிறது.

நிதி ஆலோசகர்கள் வாங்கும் ஆலோ சனைக் கட்டணத்தை விட இத்தகைய ரோபோ ஆலோசகர்கள் வசூலிக்கும் கட்டணம் மிக மிகக் குறைவு. தவிர நமது நிலையறியும் பொருத்தமான நிதி ஆலோசகர்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. வங்கி அல்லது ஏஜென்டுகளை அணுகினால் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது தங்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும் நிதிகளில் முதலீடு செய்யு மாறு பரிந்துரைத்துவிடுகின்றனர். இத னால்தான் இத்தகைய ஆலோசகர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

எப்படி செயல்படுகிறது

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் அது குறித்து விசாரிக்க லாம். அதில் எது சிறப்பு என்பதை பரிந் துரைக்கும். அதன் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். கம்ப் யூட்டர் சார்ந்த அனைத்து செயல்பாடு களுமே முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டவை, அல்லது முந்தைய நிகழ்வு களின் ஒப்பீடு அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்படி பணிக்கப்பட்டவை. அல்கோரிதம் எனப்படும் கணக்கீடுகளின் அடிப்படையில் ஆலோசனைகள் வழங் கப்படும். மனிதர்கள் குறுக்கீடு எதுவும் இருக்காது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

பங்குச் சந்தையில் முதலீடா அல்லது பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமா என்பதை வாடிக்கையாளர் தேர்வு செய்ய வேண்டும்.

எவ்வளவு கட்டணம்

ரோபோ ஆலோசகரின் ஆண்டுக் கட்டணம் ரூ. 1,000 முதல் ரூ. 7,500 வரை உள்ளது. சில ஆலோசகர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் 0.15 சதவீதத்தை மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றன. பல சமயங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங் களே இந்த கட்டணத்தை ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இதனால் வாடிக்கையாளர் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இந்த சலுகையும் பல வாடிக்கையாளர்கள் ரோபோ ஆலோசகரிடம் செல்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

எங்கு கிடைக்கும்

பிக்டெசிஷன்ஸ்.காம் (bigdecisions.com) என்ற இணையதளம் இந்த வசதியை வழங்குகிறது. சில நிறுவனங்கள் பகுதியளவில் இந்த சேவையை அளிக்கின்றன. குறிப்பாக ஸ்கிரிப்பாக்ஸ் (scripbox) நிறுவனம் முதலீட்டாளர் தேர்வு செய்யும் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய விரும்பினால் இதில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் மட்டுமே முதலீடுகளை செய்ய முடியும். அதேபோல குறுகிய கால திட்டமாயிருப்பின் கடன் பத்திர முதலீடுகளை இது பரிந்துரைக்கும்.

ஆதித்ய பிர்லாவின் மணி மையுனிவர்ஸ் மற்றும் ஃபண்ட்ஸ்இந்தியா உள்ளிட்டவை இதேபோன்ற தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகின்றன. அதன்படி முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுக் காலம், முதலீட்டுத் தொகை, எத்தகைய திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை தேர்வு செய்யலாம். இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. மாறாக முதலீட்டுத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தைக் கமிஷனாகப் பெறுகின்றன.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மற்றும் அர்த்த யந்திரா ஆகிய நிறுவனங்களும் ரோபோ ஆலோசகர் வசதியை அளிக்கின்றன. ஆலோசனை பெற ஒரு வாடிக்கையாளர் அணுகினால் அவரது நிதி தேவை, எட்ட வேண்டிய இலக்கு, வருமானம், சொத்து விவரம், அவர் திரும்ப செலுத்த வேண்டிய கடன் தொகை ஆகிய தகவல்களைப் பெற்று இதற்கு ஈடாக ஆலோசனை வழங்கும். தவிர முன்னரே பதிவு செய்யப்பட்ட 26 லட்சம் பேருக்கான நிதி ஆலோசனையுடன் ஒப்பீடு செய்யும்.

அதனடிப்படையிலும் முடிவுகளை வெளியிடும். ஆனால் முதலாண்டு கட்டணம் ரூ. 17,500 ஆகவும் இரண்டாம் ஆண்டிலிருந்து சொத்து மதிப்பில் 0.15 சதவீதம் கமிஷனாக வசூலிக்கப்படும். இதேபோல அர்த்த யந்த்ரா ஆன்லைன் மூலம் சேவை அளிக்கிறது. இந்த ஆன்லைனில் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,000. குறைந்த வருவாய் அதாவது மாதம் ரூ.20 ஆயிரத்துக்குக் கீழாக உள்ளவர்களிடம் இந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

அதிகரித்துவரும் ரோபோ ஆலோசகர் குறித்து பிரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னணி நிதி ஆலோசகருமான சொக்கலிங்கம் பழனியப்பனிடம் இது குறித்து கேட்டபோது,

ரோபோ ஆலோசகர்கள் என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அள வுக்கு இங்கு இன்னமும் பிரபலமாக வில்லை. வங்கித் துறை, காப்பீடு ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக இது புழக்கத்தில் இருந்து வருகிறது.

நிதி ஆலோசனையைப் பொறுத்தவரை இத்தகைய ரோபோ ஆலோசகரின் சேவையை விரும்புவோர் ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள்தான். பணமிருந்தும் அதை எங்கு முதலீடு செய்வது என்பதை யோசிப்பதற்கு நேரமில்லாதவர்கள் எப்போதும் நாடுவது ஆலோசகர்களைத்தான். தங்களுக்குப் பதிலாக நிதி ஆலோசகரே முடிவெடுக்கட்டும் என்பவர்களது தேர்வும் நிதி ஆலோசகராகத்தான் இருக்க முடியும். ரோபோ ஆலோசகரை தேர்வு செய்வதில் முதலில் தெளிவு வேண்டும். எந்த நிறுவனத்துக்காக ஆலோசகராக அது செயல்படுகிறது என்பதைக் கண்டறியவேண்டும். பரஸ்பர நிதி சார்ந்த ரோபோ ஆலோசகராக இருந்தால் அது பரஸ்பர நிதி முதலீடுகளைத்தான் பரிந்துரைக்கும்.

அதேபோல காப்பீடு சார்ந்த ஆலோசகர் தனது வாடிக்கையாளருக்கு காப்பீடு சார்ந்த முதலீடுகளைத்தான் பரிந்துரைப்பார் என்பது தெளிவு.

எனவே நடு நிலையான ஆலோசகரை தேர்வு செய்வது புத்திசாலித்தனம் என்று குறிப்பிட்டார்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத் துமே வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதாகத்தான் அமைகிறது. மனித னால் உருவாக்கப்பட்ட செயலிகளின் வரவு மனிதர்களின் வேலையிழப்புக்குக் காரணமாகிறது என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் கம்ப்யூட்டர் வரவால் தங்களுக்கு வேலை போகும் என்று கவலைப்பட்ட முந்தைய தலைமுறையினர்தான் தற்போது தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலமே இத்துறையில்தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இருந்தாலும் இப்போதைய சூழலில் ரோபோ ஆலோசகர் வருகை நிதி ஆலோசகர்களுக்கு சவாலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x