Published : 08 May 2017 09:52 AM
Last Updated : 08 May 2017 09:52 AM

மாருதி, டாடா-வில் ஃபியட் இன்ஜின்!

உங்களிடம் இருப்பது மாருதி நிறுவனத்தின் காரோ அல்லது டாடா நிறுவனத்தின் காராகவோ இருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் இன்ஜின் வேறொரு நிறுவனத் தயாரிப்பாக இருக்கக் கூடும்.

சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு தேவையான இன்ஜினை சப்ளை செய்வதற்காக ஃபியட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த ஃபியட் நிறு வனம், இந்தியாவில் தனித்து செயல் படுகிறது. இந்நிறுவனத்தில் சரி பாதி பங்குகளை (50%) டாடா மோட்டார்ஸ் வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் இன் ஜின் தயாரிப்பு பணிகள் மஹாராஷ்டிர மாநிலம் புணேயை அடுத்துள்ள ரஞ்சன் கோயன் ஆலையில் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த ஆலையிலிருந்துதான் இந்நிறுவனத் தயாரிப்பான ஃபியட் லீனியா தயாரிக்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 2.20 லட்சம் டீசல் இன்ஜின்களை சப்ளை செய்ய ஃபியட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 1.3 லிட்டர் திறன் கொண்ட மல்டிஜெட் டீசல் இன்ஜின்கள் சப்ளை செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இந்த இன்ஜின்கள்தான் மாருதி நிறுவனத்தின் பிரபல மாடல்களான ஸ்வி்ட், டிசையர், இக்னிஸ், சியாஸ் மற்றும் விட்டாரா பிரீஸா ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஃபியட் இந்தியா நிறுவனத்தில் சம பங்குகளைக் கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 2 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின்களை வாங்க முடிவு செய்துள்ளது. 70 ஆயிரம் இன்ஜின்களை வாங்க அது திட்டமிட்டுள்ளது. இந்த இன்ஜின்களை நிறுவனத்தின் பிரபல மாடலான லாண்ட் ரோவர் எஸ்யுவி மாடல்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிற நிறுவனங்களுக்கு இன்ஜின் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், தனது உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஃபியட் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

பிற நிறுவனங்களது தொழில்நுட் பங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு ஆட்டோமொபைல் துறை யில் அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்களின் முதலீடு குறையும் என்றும், சர்வதேச அளவில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதாக இத் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதனாலேயே ஒவ்வொரு ஆட்டோ மொபைல் நிறுவனத்திலும் பிற நிறுவனங்கள் கணிசமான பங்குகளை வைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறு வனத்துடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி ஜெர்மன் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸுக்கு வழங்க வழி ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறு வனம் தனது புதிய எஸ்யுவிக்களில் 2 லிட்டர் இன்ஜினை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. லேண்ட் ரோவர் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய மாடல்கள் வர உள்ளன.

ஃபியட் நிறுவனத்தின் பிரபல பிராண் டான ஜீப் மாடல் எஸ்யுவி-யில் இத் தகைய 2 லிட்டர் இன்ஜின் பயன் படுத்தப்படுகிறது.

பொதுவாக சந்தையில் அறிமுக மாகும் 10 தயாரிப்புகளில் அதிகபட் சம் மூன்று தயாரிப்புகள்தான் பிரபல மடைகின்றன. இத்தகைய சூழலில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள் வதன் மூலம் மிக விரைவாக தங்களது முதலீட்டில் லாபம் பார்க்க முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

டீசல் இன்ஜின் அதிலும் குறிப்பா 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜினை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்த முன்வந்திருப்பது, இந்த நுட்பத்தில் நிறுவனத்துக்கு உள்ள நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவதோடு, இதில் நிறுவனத்தின் நிபுணத்துவமும் புலனாகும் என்று ஃபியட் கிரைஸ்லர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெறும். அதில் செந்திலைக் காட்டி இவர்தான் மாப்பிள்ளை, ஆனால் அவர் அணிந்திருக்கும் சட்டை அவருடையது அல்ல என்பார். அதைப்போலத்தான் நீங்கள் வாங்கும் கார் ஒரு நிறுவனத்தி னுடையதாகவும், இன்ஜின் வேறொரு நிறுவனத்துடையதாகவும் இருக்கும். இது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x