Last Updated : 25 Apr, 2016 10:56 AM

 

Published : 25 Apr 2016 10:56 AM
Last Updated : 25 Apr 2016 10:56 AM

புதிய தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் தீவிரம்!

மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களை தனது வாகனங்களில் அறிமுகப் படுத்துவதில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக வாகன ஓட்டிகளுக்கு உதவும் நவீன தொழில்நுட்பங்களை தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. பிற வாகனங்களுடன் மோதுவதைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி பார்கிங் வசதியை தனது கார்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் கார்களில் பல்வேறு புதிய நுட்பங்கள் தினசரி புகுத்தப்பட்டு வருகிறது. டிரைவர் இல்லாத தானியங்கி கார்கள் உருவாக்கத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டாடாவின் துணை நிறுவனமான ஜாகுவாரிலும் இதுபோன்ற நவீன நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளன.

இந்திய தயாரிப்புகளிலும் இத்தகைய நுட்பங்களை புகுத்துவதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது டாடா.

இதற்கு முன்னோட்டமாக அமைந்தது டெஸ்லா மாடல் எஸ் கார், இந்த கார் சார்ந்த ஒரு வீடியோ பலரையும் ஈர்த்துள்ளது. டெஸ்லா கார் மீது மற்றொரு வாகனம் மோத வரும் சமயத்தில் இந்த கார் பாதையிலிருந்து விலகி (லேன் மாறி) சென்று விபத்தை தவிர்த்தது. இது உலகம் முழுவதும் உள்ள கார் ஆர்வலர்களிடையே பெரிதும் பாராட்டை பெற்றது.

இதைப் போன்ற நுட்பத்தை அறிமுகப்படுத்து வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் முதல் கட்டமாக கார் நிறுத்துவதற்கான தானியங்கி வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் மேப்மை இந்தியா (MapMy India) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மூலமான வரைபட வசதி மூலம் கார் தானாகவே செயல்பட்டு பார்கிங் பகுதிகளில் நிற்கும். இதுபோன்ற வசதிகளை எதிர்பார்ப்பதாக வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வசதியை விரைந்து அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்சார் தொழில்நுட்பம், கேமிரா தொழில்நுட்பம், ரேடார் நுட்பம் உள்ளிட்டவை மூலம் இந்திய சாலை பயணத்தை பத்திரமான தாக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஒளி உணர் மற்றும் சுற்றுப்புற அளவு (எல்ஐடிஏஆர்) தொழில்நுட்பம்தான் தானியங்கி கார்களில் பின்பற்றப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டால் அதற்கு முப்பரிமாண வரைபடம் மிகவும் அவசியம். இந்தக் கருவியின் விலை 30 ஆயிரம் டாலராகும். அதிகம் தயாரிக்கும்போது இதன் விலை மேலும் குறையலாம். அதேபோல வாகனத்தைச் சுற்றியுள்ள பொருள்களைக் கண்டறிய கேமிரா தொழில்நுட்பம் பின்பற்றப்படும்.

இந்தியாவில் உள்ள பிற கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற அதிகம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎல்ஆர் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் ஆகியன டாடா தயாரிப்புகளுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை அளிக்கும். இதனால் குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தனது கார்களில் டாடா பொறுத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

லேண்ட் ரோவர் கார்களின் செயல்பாடுகளை வெளியிலிருந்து ஸ்மார்ட்போன் மூலம் இயக்கும் தொழில்நுட்பம் உள்ளது. டிசிஎஸ் நிறுவனம் இதுபோன்ற செயல்பாடுகளுக்கான தகவல் தொழில்நுட்பத்தை பல நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக ரோபாடிக்ஸ் தொழில்நுட்பத்துக்கான நுட்பத்தையும் அளித்துள்ளது. இதனால் இத்தகைய தொழில்நுட்பம் கிடைப்பதில் டாடா மோட்டார்ஸுக்கு பெரும் பிரச்சினை இருக்காது.

சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் ரோபாடிக் சார்ந்த பிரிவின் தலைவர் ரோஷி ஜான், டாடா நானோ காரை டிரைவர் இன்றி இயக்கிக் காட்டிய வீடியோ காட்சிகள் யூ-டியூபில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் இந்த நுட்பத்தைக் கடந்து பல முன்னேறிய தொழில்நுட்பங்களை டெய்ம்லர், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பதையும் டாடா மோட்டார்ஸ் உணர்ந்துள்ளது.

பேட்டரியால் இயங்கும் பஸ்களையும் தயாரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது டாடா. இந்நிறுவன பஸ்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. பேட்டரி பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டால் இத்தகைய பஸ்களை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். ஆனால் இந்நிறுவனத்துக்குப் பிறகு வந்த பல நிறுவனங்களும் சந்தையில் முன்னணியில் உள்ளன. புதிய தொழில்நுட்பம் டாடா மோட்டார்ஸுக்கு இழந்த புகழை மீட்டுத் தரும் என நம்பலாம்.

சென்சார் தொழில்நுட்பம், கேமிரா தொழில்நுட்பம், ரேடார் நுட்பம் உள்ளிட்டவை மூலம் இந்திய சாலை பயணத்தை பத்திரமானதாக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தனது கார்களில் டாடா பொறுத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x