Published : 14 Nov 2016 10:28 AM
Last Updated : 14 Nov 2016 10:28 AM

பிரபலங்களும் ஆட்டோமொபைல் துறையும்

ஆட்டோமொபைல் துறைக்கும் பிரபலங்களுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்புண்டு. ஆட்டோமொபைல் துறை விளம்பரங்களில் பொதுவாக சினிமா பிரபலங்கள் அதிகம் இடம்பெறுகின்றனர். சில,பல சந்தர்ப்பங்களில் விளையாட்டு வீரர்களும் கார், மோட்டார் சைக்கிள்களுக்கு விளம்பர தூதராக இருக்கின்றனர். சில கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அவற்றின் பிராண்டு தயாரிப்பைக் காட்டிலும் பிரபலங்களால் பெரிதும் அறியப்படுகிறது. தங்களது அபிமான நடிகர், நடிகையர் விளம்பர மாடலாகத் தோன்றும் மோட்டார் சைக்கிள், காரை தாங்களும் வாங்கி வைத்திருக்கிறோம் என்பதில் மகிழும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். விளம்பரங்களை மாற்றினாலும் பெரும்பாலும் ஒரே பிரபலத்தையே தங்களது பிராண்டு பிரபலத்துக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. எந்தெந்த தயாரிப்புகளுக்கு யார் யார் விளம்பர தூதர்களாக உள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கூட்டர்ஸ்

ரோடியோ, டியூரோ, பிளைடே என அனைத்து ரக ஸ்கூட்டர்களுக்கும் விளம்பர தூதர் கரீணா கபூர். 2010-ம் ஆண்டிலிருந்து மஹிந்திராவுடனான தொடர்பு கரீணாவுக்குத் தொடர்கிறது. 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தில் ரோடியோ ஸ்கூட்டரை கரீணா கபூர் ஓட்டினார்.

ஆடி இந்தியா

சொகுசு கார்களில் ஒன்றான ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு விளம்பர தூதராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக விளம்பர தூதருக்கான தொகை குறிப்பிடப்படுவதில்லை. 2015-ல் நியமிக்கப்பட்ட விராட் கோலி 18 மாதத்துக்கு ரூ. 5 கோடி தொகை அளிப்பதாக ஜெர்மன நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. கோலியிடம் நான்கு மாடல் ஆடி கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ இந்தியா

ஜெர்மனியின் மற்றொரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர்

டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டர்களின் விளம்பர தூதராக அமிதாப்பச்சன் உள்ளார். வழக்கமாக விளம்பர தூதர்கள்தான் நியமிக்கப்படுவர். ஆனால் ஜூபிடர் ஸ்கூட்டர்களுக்கு பிராண்ட் தத்துவ இவான்ஜலிஸ்ட் என அமிதாப்பை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பிராண்ட் அம்பாசிடராக அமிதாப் ஒப்பந்தமாவது இதுவே முதல் முறையாகும்.

ஹூண்டாய்

நீண்ட காலமாக இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பவர் ஷாருக்கான். 1998-ம் ஆண்டு முதல் ஹூண்டாய் ஷாருக் இடையிலான பந்தம் தொடர்கிறது. ஷாருக்கானின் ஃபேன் திரைப்படத்தின் அதிகாரபூர்வர பங்குதாரராக நிறுவனத்தின் கிரெடா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப்

உள்ளூரில் தங்கள் தயாரிப்புகளை பிரபலமாக்கும் நோக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அல்லு அர்ஜுனாவை தங்களது மோட்டார் சைக்கிளுக்கு விளம்பர தூதராக்கியுள்ளது. தென்னிந்திய சந்தையில் தங்களது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் பிரபலமாக உள்ள அல்லு அர்ஜுனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது

டாடா மோட்டார்ஸ்

சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக முயன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியை தனது விளம்பர தூதராக நியமித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

ஹோண்டா மோட்டார் சைக்கிள்

இந்நிறுவனத்தின் விளம்பர தூதர் அக் ஷய் குமார். இந்நிறுவனத்தின் டிரீம் சீரிஸ் மோட்டார் சைக்கிளுக்காக மூன்றுவித வேடங்களில் இவர் நடித்துள்ளார். ஹோண்டா ஸ்கூட்டர்களுக்கு நடிகை தப்சி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானிய தயாரிப்புகளுக்கு முதன் முதலில் ஒரு பெண் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 75 ஆயிரம் பெண்கள் ஹோண்டா ஸ்கூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழலில் ஒரு பிரபல பெண் நடிகையே விளம்பர தூதராக இருப்பது சிறப்பு என நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

மஹிந்திரா டியுவி 300

பீரங்கியின் தோற்றப் பொலிவை போன்று வடிவமைக்கப்பட்ட இந்த காருக்கு பாகுபலி நாயகன் பிரபாஸ் தான் விளம்பர தூதர். கரடு முரடான அதேசமயம் ஸ்திரமான வாகனத்துக்கு பிரபாஸ்தான் சிறந்த விளம்பர தூதர் என நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

மாருதி சுஸுகி

இந்நிறுவனத்தின் சியாஸ் ரகக் கார்களுக்கு விளம்பர தூதராக ரண்வீர் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.

ரெனால்ட்

ரெனால்ட் கார் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களுக்கும் விளம்பர தூதர் ரண்பீர் கபூர். இதற்கு முன்பு ரெனால்டின் பல்ஸ் மாடல் கார்களுக்கு விளம்பர தூதராக அனில் கபூர் இருந்தார்.

போர்டு ஃபிகோ ஆஸ்பயர்

`பாக் மில்கா பாக்’ திரைப்பட புகழ் பர்ஹான் அக்தர் ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பயர் மாடல் காரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x