Published : 05 Jun 2017 10:58 AM
Last Updated : 05 Jun 2017 10:58 AM

பியட் ஆலையில் ஜீப் கம்பாஸ்

இந்தியர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஆட்டோமொபைல் பெயர்களில் பியட்டும் ஒன்று. பியட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜீப் கம்பாஸ் எஸ்யுவி-க்கள் தயாராகின்றன.

பியட் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனம் பியட் கிரைஸ்லராகும். இந்நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி ஜீப் கம்பாஸ். இந்த மாடல் கார்கள் இப்போது பியட் நிறுவனத்தின் ரஞ்ஜன் கோன் ஆலையில் தயாராகிறது. `மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 65 சதவீத உள்ளூர் உதிரி பாகங்களுடன் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்த கார்கள் இந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்படும்.

உள்நாட்டில் ஜீப் பிரியர்களுக்காக இந்த காரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் வலதுபுற ஸ்டியரிங் வீல் இருக்கும் வகையில் ஜீப் கம்பாஸ் தயாரிக்கப்படும். இதுபோன்ற வலதுபுற ஸ்டியரிங் பழக்கம் உள்ள நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

23 மாதங்களில் இந்த ஆலை உற்பத்திக்குத் தயாரானதை வெகுவாகப் பாராட்டினார் தொடக்க விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். ஆலை வளாகத்தில் உள்ள சோதனை ஓட்ட மைதானத்தில் முதலாவது ஜீப் கம்பாஸை ஓட்டி பரிசோதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த ஆலையில் கிரைஸ்லர் நிறுவனம் ரூ.620 கோடியை முதலீடு செய்துள்ளது. அத்துடன் 2.0 லிட்டர் பவர் டிரைன் வசதியையும் கூடுதலாக உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலைப் போல 4388 மி.மீ நீளமும், 1819 மி.மீ அகலமும் 1667 மி.மீ உயரமும் கொண்டதாக புதிய ஜீப் கம்பாஸ் தயாராகிறது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 178 மி.மீ. ஆகும். 1.4 லிட்டர் மல்டி ஏர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் எகோ டீசல் ஆகிய மாடல்களில் இது தயாராகிறது. அத்துடன் வாடிக்கையாளர் தேர்வாக 6 கியருடன் மானுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீட் டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது.

1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 160 பிஹெச்பி திறனுடன் 260 நியூட்டன் மீட்டர் டார்க் சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் ஜீப் கம்பாஸ் அதிகபட்சம் 170 பிஹெச்பி மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. நான்கு சக்கர சுழற்சியுடன் பல்வேறு வாகன ஓட்டும் தேர்வுகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x