Published : 22 May 2017 09:13 AM
Last Updated : 22 May 2017 09:13 AM

பந்தய களத்தில் சாதனை படைத்த பேட்டரி கார்!

பேட்டரி வாகனங்களை பெரும்பாலோர் தேர்வு செய்யாததற்கு முக்கியக் காரணமே அவை வேகமாக செல்லாது என்பதுதான். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுத்து பேட்டரி வாகனங்கள் செல்லாதது முதல் காரணம்.

பேட்டரி கார்களும் பந்தய களத்தில் கலக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது டெஸ்லாவின் பேட்டரி கார்கள்தான். இதன் பிறகு பல நிறுவனங்களின் தயாரிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் கார் பந்தய மைதானத்தில் கலக்கிய இபி 9 பேட்டரி காரை உருவாக்கியது சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்தான்.

மூனிச் நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நியோ நிறுவனத்தின் இபி9 கார் 20.8 கி.மீ தூரத்தை 6 நிமிஷம் 45 விநாடிகளில் கடந்து உலக சாதனை புரிந்துள்ளது.

பந்தய தூரத்தை 7 நிமிஷம் 5 விநாடிகளில் கடந்ததுதான் முந்தைய சாதனையாக இருந்தது. 19.22 விநாடிகள் முன்னதாகக் கடந்து முந்தைய சாதனையை இந்த கார் முறியடித்துள்ளது.

இந்த காரின் பேட்டரி 1 மெகாவாட் திறனை வெளிப்படுத்தும். அதாவது 1,342 பிஹெச்பி திறனை வெளிப் படுத்துவதால் இதில் அதிகபட்சமாக மணிக்கு 313 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். 7 விநாடிகளில் இதில் 200 கி.மீ. வேகத்தைத் தொட முடியும் என்று இந்த கார் வடிவமைப்புக் குழுவின் தலைவர் கெரி ஹியூஸ் தெரிவித்துள்ளார்.

பந்தயக் களத்தில் கலக்கி சாதனை புரிந்த இந்த காரின் விலை 10,48,000 டாலராகும். (ரூ. 6.72 கோடி). ஆர்டரின் பேரில் இந்த காரை தயாரிக்கப் போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் டிரைவர் தேவைப்படாத வாகனங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் இந்நிறுவனம் 7 பேர் பயணிக்கக் கூடிய நியோ இஎஸ்8 எனும் எஸ்யுவி-யை அறிமுகப்படுத்தியது. இதுவும் முழுவதும் பேட்டரியால் இயங்கக் கூடியதாகும்.

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இலக்கு இருக்கும். இபி9 கார் மூலம் புதிய சாதனை புரிவது மட்டும் இலக்கு அல்ல. சர்வதேச அளவில் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையாக சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களைத் தயாரிக்க முடியும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பத்மஸ்ரீ வாரியர் தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கேற்ற ஸ்மார்ட் வாகனங்களை தயாரிப்பதே தங்கள் நிறுவனத்தின் பிரதான இலக்கு என்றார்.

பந்தய களத்தில் சாதனை புரிந்த காரை தயாரித்ததிலிருந்தே இவர்கள் இலக்கு எட்டும் தூரத்தில்தான் என்பது புலனாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x