Last Updated : 16 May, 2016 12:50 PM

 

Published : 16 May 2016 12:50 PM
Last Updated : 16 May 2016 12:50 PM

டிரைவர் கண் அயர்ந்தால் காட்டிக் கொடுக்கும் கருவி!

இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. சாலை விபத்துகளால் விலை மதிப்பில்லாத உயிரிழப்பு, சொத்து சேதம், பொருள் சேதம் ஏற்படுகிறது.

2013-ம் ஆண்டில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.37 லட்சமாகும். போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். தினசரி சாலை விபத்துகளில் பலியாகும் சிறுவர்களின் எண்ணிக்கை 16. நான்கு நிமிடத்துக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழப்பதாக நெஞ்சை உறைய வைக்கும் சாலை விபத்து உயிரிழப்பு அறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மிக மோசமான சாலை விபத்து நிகழ்வதாகவும் ஒரு மணி நேரத்தில் 16 உயிர் பலி நிகழ்வதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு நாளைக்கு நிகழும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1,214 ஆக உள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகளால் ஏற்படும் சாலை விபத்து 25 சதவீத பங்கு வகிக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தமிழகத் தலைநகர் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் படுகின்றன.

பெரும்பாலும் சாலை விபத்துகள் அதிகாலை நேரங்களில் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கண் விழித்து ஓட்டும் வாகன ஓட்டிகள் சற்று கண் அயரும் போது விநாடி நேரத்தில் விபத்து நிகழ்ந்து விடுகிறது. விபத்துக்கு யாரையுமே பொறுப்பாக்க முடியாது. ஏனெனில் யாரும் விரும்பி விபத்தில் சிக்குவதில்லை. தன்னையும் அறியாமல் கண் அயரும்போதுதான் வாகனம் விபத்துக்குள்ளாகிறது.

இவ்விதம் டிரைவர்கள் கண் அயர்வதைக் கண்டுபிடித்து உணர்த்தும் செயற்கை உணர் கருவியை உருவாக்கியுள்ளது டெல்லியைச் சேர்ந்த ஹை-டெக் ரோபோடிக் சிஸ்டம்ஸ் நிறுவனம். நோவுஸ் அவேர் எனப்படும் எச்சரிக்கை உணர் கருவி டிரைவர் கண் அயருவதைக் கண்டுபிடித்து எச்சரித்து விடும்.

வாகன ஓட்டிகள் கண் சிமிட்டும் நேரம், கண் சிமிட்டுவதில் உள்ள இடைவெளி, அடிக்கடி கொட்டாவி விடுவது உள்ளிட்டவற்றை இது உணர்ந்து எச்சரிக்கை அனுப்பும்.

பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகள் கண் அயர்வதால் நிகழ்கிறது. இதை துல்லியமாகக் கணித்து எச்சரிக்கும் கருவி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து இதை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹைடெக் ரோபோடிக் சிஸ்டம்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அனுஜ் கபூரியா தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை உணர் கருவியால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். விபத்துகள் குறைந்தால் பொருள் சேதமும் குறையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் தானியங்கி முறையில் செயல்படும் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. 100 கிலோ முதல் 5 டன் எடை வரை சுமந்து செல்லும் தானியங்கி வாகனங்களை (டிரைவர் இல்லாத) இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 5 டன் எடைக்கு மேலான கன ரக வாகனங்களைத் தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல கட்டுமானத் துறைக்குத் தேவையான 5 டன் முதல் 10 டன் வரையிலான எடையை சுமந்து செல்லும் டிரைவர் இல்லாத வாகனங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ-வில் தானியங்கி வாகனத்தை அறிமுகப் படுத்தியது. அதாவது டிரைவர் இல்லா மல் செயல்பட்ட இந்த வாகனத்தில் 15 பேர் பயணிக்கலாம். உணர் கருவிகள் மூலம் செயல்பட்ட இந்த வாகனம் ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் ஈர்த்தது. இதை விரைவிலேயே வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் இப்போது டிரைவர் செயல்பாடுகளை உணர்த்தும் கருவியை நோவுஸ் அவேர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான டிரைவரின் செயல்பாடுகள் மாறுபடும்போது அவர் கண் அயர்கிறார் என்பதை இது கணித்து எச்சரிக்கை செய்து விடும்.

எதிர்காலத்தில் குறிப்பிட்ட தடத்தி லிருந்து மாறினாலும் (லேன்), தானாக பிரேக் பிடிக்கும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத் தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சரக்குப் போக்குவரத்து லாரிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டிரைவரின் செயல்பாடுகளை கிளவுட் சிஸ்டம் மூலம் மத்திய தகவல் தொகுப்பு கேந்திரத்துக்கும் அனுப்பிவிடும்.

கனரக வாகன தயாரிப்பு நிறுவனங் களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அடுத்த கட்டமாக கார்களில் இந்த கருவியை நிறுவுவது தொடர்பாக கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் கபூரியா தெரிவித்துள்ளார்.

கன ரக வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, கார் ஓட்டுபவராக இருந்தாலும் சரி விபத்துகள் நிகழாமல் இருப்பதையே அனைவரும் விரும்புவர். விபத்துகளைத் தடுக்க உதவும் நோவுஸ் அவேர் எச்சரிக்கை கருவிக்கு எதிர்காலத்தில் மிகச் சிறந்த வரவேற்பு இருக்கு என்பதில் சந்தேகம் இல்லை.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x