Last Updated : 13 Mar, 2017 10:34 AM

 

Published : 13 Mar 2017 10:34 AM
Last Updated : 13 Mar 2017 10:34 AM

ஜெனீவா எக்ஸ்போ: தரையிலிருந்து விண்ணுக்கு...!

சர்வதேச அளவில் ஆட்டோ மொபைல் கண்காட்சியில், ஆண்டு தோறும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கண்காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

இந்தக் கண்காட்சியில் தங்களது தயாரிப்பைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக போட்டிபோட்டு புதிய தயாரிப்புகளை உருவாக்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ஏராளம். அடுத்து சந்தைக்கு என்ன வரப் போகிறது என்பதற்கான முன்னோட்ட மாக இக்கண்காட்சி அமையும். இந்த ஆண்டு இம்மாதம் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சி யில் 148 நாடுகளிலிருந்து 180 நிறு வனங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 900 தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடை பெறும் இந்தக் கண்காட்சி கார் தயா ரிப்பு அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளதை வெகுவாக உணர்த்துகிறது. தனி நபர் போக்குவரத்தில் கார் களின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது. இதனால் பெரு நகரங்களில் வாகன நெரிசல் தவிர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.

மாற்று வழிகளை அரசு ஆராயும் அதேவேளையில் ஆட்டோமொபைல் துறையின் தொழில்நுட்ப வல்லுநர்களும் இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட் டுள்ள பிரான்ஸின் ஏர் பஸ் நிறுவனம் முதல் முறையாக தனது மாடல் காரை இங்கு காட்சிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பாப்-அப் என்ற பெயரிலான இந்த கார் தரையிலும் செல்லும், வானத்திலும் பறக்கும்.

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் கார் ஆகியவை ஒன்றிணைந்த கலவையாக இந்த பாப்-அப் உருவாக் கப்பட்டுள்ளது. காரை ஓட்டிச் சென்று வாகன நெரிசல் மிகுந்த பகுதி தொடங்குமிடத்திலிருந்து காரில் பறந்து சென்று குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பெரிதும் கவனத்தில் கொண்டு முற்றிலும் பேட்டரியில் இயங்கும் வகையில் இந்த பாப்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போதும் பிறகு அது பறக்கும்போது இருவித செயல்பாடுகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரில் இயங்கும் பகுதி, அதாவது சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி மட்டும் தனியாக கழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை வழிப் பயணம் முடிந்தவுடன் அடிப்பகுதி மட்டும் தனியாக கழற்றிவிடலாம். அடுத்து பறப்பதற்கு ட்ரோன் போன்ற சக்கரங்களுடன் கூடிய மேல் பகுதி காரின் மேலே பொறுத்தப்பட்டு கார் பறக்க உதவுகிறது.

எதிர்கால பறக்கும் கார் என்ற தொலை நோக்கில் ஏர் பஸ் நிறுவனம் வடி வமைத்துள்ள இந்த கார் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. இந்த காரின் முழுமையான செயல் பாடு அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முறையில் செயல்படுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் வசதியான பயண அனுபவத்தை அளிக்கும் என ஏர்பஸ் நிறுவனம் கூறுகிறது.

கார்-ட்ரோன் மாடல் உருவாக்கத்துக்கு இத்தாலியைச் சேர்ந்த இடால்டிசைன் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது ஏர் பஸ். காருக்கான வடிவமைப்பு ஃபோக்ஸ்வேகனின் கோல்ப் மாடல் மற்றும் பிஎம்டபிள்யூவின் பல்வேறு மாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக ஆல்ஃபா ரோமியோ மாடலும் பாப்-அப் மாடல் வடிவமைப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவை அனைத்திலிருந்தும் புதுமை யானதாக பிங்கோ மாடலில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்த இடத்திலிருந்தே அப்படியே ஹெலிகாப் டர் போல மேலெழும்பும். பேட்டரியில் இயங்குவதால் புகை வெளியேற்றம் கிடையாது. இதனால் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

இந்த கார் முழுவதும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் எடை குறை வானது. ஆனால் உறுதியானதாகும். வாகன நெரிசல் மிகுந்த நியூயார்க், லண்டன், பாரிஸ், பெய்ஜிங் நகரங் களுக்கு இது மிகவும் ஏற்ற தீர்வாகும் என ஏர்பஸ் நிறுவனம் கருதுகிறது. இந்த நெரிசல் மிகு நகர்களில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களும் உள்ளன. விண்ணில் பறப்பதற்கு வசதியாக 8 இறக்கைகளைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

காரை மட்டும் பயணிகள் வாங்கினால் போதும். பறப்பதற்கான ட்ரோன் வசதியை வாடகை முறையில் செயல்படுத்தலாம் என ஏர் பஸ் உத்தேசித்துள்ளது.

காரில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும்போது வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் அங்கிருந்து ட்ரோன் தேவை என ஸ்மார்ட்போன் செயலி மூலம் அழைத்தால், உங்கள் காரை அருகிலுள்ள ட்ரோன் கருவி வந்து அப்படியே தூக்கிச் செல்லும். வானில் பறக்கும் போது நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைத் தேர்வு செய்து அப்பகுதிக்கு சென்றவுடன் ட்ரோனின் சேவையை துண்டித்து விடலாம். ட்ரோன் அருகிலுள்ள பேட்டரி சார்ஜிங் மையத்தில் சென்று சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். பெரு நகரங்களில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக இது இருக்கும் என ஏர் பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பறக்கும் கார் திட்டத்தை எப்போது செயல்படுத்தப் போகிறது என்பதை ஏர் பஸ் நிறுவனம் வெளியிடவில்லை. இத்தகைய கார் சேவை முழுமையாக வர்த்தக ரீதியில் செயல்பட குறைந்தது 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் காருக்கான விதை ஜெனீவா கண்காட்சியில் ஊன்றப்பட்டு விட்டது. இனி இது விருட்சமாக வளரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் கார் ஆகியவை ஒன்றிணைந்த கலவையாக இந்த பாப்-அப் உருவாக்கப் பட்டுள்ளது. காரை ஓட்டிச் சென்று வாகன நெரிசல் மிகுந்த பகுதி தொடங்குமிடத்திலிருந்து காரில் பறந்து சென்று குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

-ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x