Published : 13 Jul 2015 10:14 AM
Last Updated : 13 Jul 2015 10:14 AM

சென்னையில் மாருதி சுஸுகி நடத்தும் மாணவர்களுக்கான ஃபார்முலா ஒன்!

மாருதி சுஸுகி நிறுவனமும் இந்திய ஆட்டோமோடிவ் இன்ஜினீயர்ஸ் (எஸ்ஏஇ) அமைப்பும் இணைந்து ஆண்டுதோறும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்துகின்றன.

ஏற்கெனவே இளைஞர்கள் பைக்கில் சீறிப் பாய்கின்றனர். இவர்களுக்கு ஃபார்முலா ஒன் எனப்படும் சீறிப்பாயும் கார் பந்தய போட்டியா? அதை முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி நடத்துகிறதா என்ற வியப்பு உங்களுக்கு மேலிடக்கூடும். ஆனால் இது மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு போட்டியாகும்.

சென்னையில் ஜூலை 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து நான்காம் ஆண்டாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

வழக்கமான ஃபார்முலா ஒன் கார் பந்தயம், விரைவாக கார் ஓட்டி பந்தயத்தில் ஜெயிப்பவர்களுக்காக நடத்தப்படுவது. ஆனால் இந்தப் போட்டியோ இதுபோன்ற கார்களை உருவாக்கும் பொறியியல் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் போட்டியாகும்.

இதுபோன்று மாணவர்களின் ஆட்டோமொபைல் திறனை வெளி உலகுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி வேறு எதுவும் நடத்தப்படுவது கிடையாது.

பொறியியல் மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இந்த ஃபார்முலா ஒன் பந்தயம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய ஃபார்முலா ஒன் போன்ற கார்களை இந்த போட்டியில் பங்கேற்கச் செய்யலாம்.

பொதுவாக இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு புராஜெக்டை விருப்பமாக செய்து முடிப்பர். பெரும்பாலான ஆட்டோமொபைல் மாணவர்கள் ஏதேனும் புதிய வாகன வடிவமைப்பை உருவாக்குவது வழக்கம். இதுபோன்ற மாணவர்களின் யோசனையில் உருவான கார்களை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 167 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் கட்ட பரிசீலனைக்கு தங்களது கார் மாடல் பற்றிய தகவலை அனுப்பியிருந்தனர்.

இவற்றில் பல்வேறு கட்ட தேர்வுக்குப் பிறகு 110 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன.

இறுதி கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 110 அணிகளும் 25 பேரடங்கிய குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உருவாக் கிய ஃபார்முலா ஒன் மாடல் கார்கள், அவற்றின் செயல் திறன், பாதுகாப்பு அம்சம் உள்ளிட்டவை போட்டிக்கான அடிப்படை தகுதியாகக் கொள்ளப்படும். இத்தகைய கார்கள் கார் பந்தய மைதானத்தில் வைத்து சோதித்துப் பார்க்கப்படும்.

11 கி.மீ. தூரம் இந்த கார்கள் பந்தய மைதானத்தில் ஓட விட்டு சோதிக்கப்படும். இந்தப் போட்டியின் முடிவில் சிறந்த காரை வடிவமைத்த கல்லூரி அணிக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அளிக்கப்படும்.

ஆட்டோமொபைல் துறையில் ஃபார்முலா ஒன் கார்களை தயாரிக்க இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் தளமாக இந்தப் போட்டி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முதன் முதலாய்…

ஃபார்முலா ஒன் கார் பந்தயம் பொதுவாக ரேஸ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். வெறுமனே டி.விக்களில் மட்டுமே ஃபார்முலா கார் பந்தயங்களைக் கண்டு வந்த ரேஸ் பிரியர்களுக்கு பெரும் வாய்ப்பாக 2011-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உருவானதுதான் புத் சர்வதேச கார் பந்தய மைதானம்.

ரூ. 2,000 கோடி முதலீட்டில் சர்வதேச வடிவமைப்பாளரும் ஜெர்மனியைச் சேர்ந்தவருமான ஹெர்மான் டைக்கால் வடிவமைக்கப்பட்டது. இவையனைத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஃபார்முலா ஒன் கார் பந்தைய மைதானம் பற்றிய தகவலாகும். 2013-ம் ஆண்டிலிருந்து மாநில அரசின் வரி பிரச்சினை காரணமாக இந்த மைதானம் செயல்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x