Last Updated : 14 Sep, 2015 12:11 PM

 

Published : 14 Sep 2015 12:11 PM
Last Updated : 14 Sep 2015 12:11 PM

சீறிப் பாயும் மஹிந்திரா டியுவி 300

கடந்த சில வாரங்களாக கோட்டை போன்ற சுவரை உடைத்துக் கொண்டு ஒரு கார் வரும் விளம்பரத்தை டி.வி.யில் பார்க்கா தவர்கள் இருக்க முடியாது. ஒரு சில விநாடிகளே தோன்றினாலும், அது என்ன கார் என்று அனைவரையுமே சிந்திக்க வைத்திருக்கும்.

விளம்பரத்தில் வரும் காட்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த வெகு சில பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன்.

கடந்த வாரம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புணேயை அடுத்துள்ள சக்கன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஆலையில் நடைபெற்ற அறிமுக விழாவில் கோட்டையை உடைத்துக் கொண்டு வந்தது டியுவி 300.

ஆம் அதுதான் மஹிந்திரா நிறுவனத் தின் புதிய தயாரிப்பு.

எஸ்யுவி ரகத்தில் வந்துள்ள இந்த பன்முக பயன்பாட்டு வாகனம் அறிமுகத் துக்கு முன்பாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய காரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான். அதற்கான பணிகளில் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்ட நிறுவன சப்ளையர்களால் உருவானதுதான் டியுவி 300 என்றார் குழுமத்தின் செயல் இயக்குநர் பவன் கோயங்கா.

ராணுவ பீரங்கியின் தோற்றத்தை போன்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் வடிவமைப்புத் துறையினர் அரும் பாடுபட்டு உருவாக்கியுள்ளனராம். இத்தாலியைச் சேர்ந்த பினின்ஃபெரினா நிறுவனமும் வடிவமைப்பில் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கொஞ்சம் பீரங்கியின் பக்க வாட்டுத் தோற்றத்தைக் கற்பனை பண்ணிக்கொண்டு பிறகு இந்தக் காரைப் பார்த்தால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியும்.

கார் உருவாக்கத்துக்கு மட்டும் ரூ.1,000 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆராய்ச்சி, வடி வமைப்புக்கு ரூ.200 கோடி தனியே செலவிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சப்ளையர்கள் ரூ.300 கோடியை இதற்கென செலவிட்டுள்ளனர்.

இந்த எஸ்யுவி உருவாக்கத்துக்கென தனிப் பிரிவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மாதத்துக்கு 5 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய முடியுமாம். தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும் வகையில் விரிவாக்க வசதியுடன் இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தக் காரைப் பற்றி யூ-டியூபில் 20 லட்சம் பேர் கருத்துகளை வெளியிட்டிருந்தனர். அந்த அளவுக்கு இந்தக் கார் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையில்லை.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 லட்சம் பேர் இந்தக் கார் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தகவல் அறிய நிறுவனத்தின் இணையதளத்தை முற்றுகையிட்டுள்ளனர். அறிமுக மாவதற்கு முன் தினம் மட்டும் இணைய தளத்தில் 2 லட்சம் பேர் தங்களது ஆர்வத் தைக் கொட்டித் தீர்திருந்தனராம்.

அப்படி என்னதான் இந்தக் காரில் புதிய விஷயங்கள் இருக்கிறது. அடுக்கிக் கொண்டே செல்கின்றனர் மஹிந்திரா நிறுவனத்தினர். கடினமானது, எடுப்பான தோற்றம், ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றோடு ஒரு ஸ்போர்ட்ஸ் யுடிலிடிடி வாகனத்துக்குரிய அனைத்து அம்சங்களை உள்ளடக்கியதாக இது உள்ளது.

கம்பீரமான தோற்றத்துக்கு உதவும் வகையில் கிரில் குரோம் முகப்பு, உள்ளடங்கிய ஸ்திரமான பம்பர், அழகிய தோற்றத்தை அளிக்கும் முகப்பு விளக்கு, ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கேற்ற அலாய் சக்கரங்கள், உயர்ந்த தோற்றத்தை அளிக்கும் அகலமான, உயரமான டயர்கள், பின்புறம் அழகிய தோற்றத்துக்கு மெருகேற்றும் ஸ்டெப்னி டயர் என பல அம்சங்களும் இதன் தோற்றத்தை மெருகேற்றுகின்றன.

உள்புற தோற்றத்திலும் எந்தக் குறைவும் இல்லை. கருப்பு மற்றும் பீச் நிறத்திலான முன்புற (டாஷ் போர்டு) அதன் மையமாக ஹெக்சகென் (அருங்கோண) வடிவிலான அமைப்பு, இரட்டை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங்கிலேயே ஆடியோ மற்றும் போனை இயக்கும் வசதி இப்படி பலப்பல வசதிகள். அடுத்து சொகுசான பயணத்தை அளிக்க உதவும் 1.5 லிட்டர் என்ஜின். அதி விரைவுக்கு வழி வகுக்கும் 2 கட்ட டர்போ சார்ஜர்.

இத்தகைய காரில் டர்போ சார்ஜர் இருப்பது இதுவே முதல். இதனால் 61.5 வாட் அதாவது 84 பிஹெச்பி உந்து சக்தி, எளிதாக இயக்க ஆட்டோமேடட் மானுவல் டிரான்ஸ்மிஷன் (ஏடிஎம்) அதாவது எளிதாக கியர் மாற்றும் வசதி மற்றும் அதிகபட்ச சுற்றுச் சூழல் காப்புக்கான வசதி இருப்பதால் எரிபொருள் சிக்கனமானதும் கூட.

பாதுகாப்பு விஷயங்களில் மஹிந்திரா நிறுவனம் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. அந்த வகையில் டியுவி 300 மாடல் எஸ்யுவி மிகவும் உறுதியான ஸ்டீல் கட்டமைப்பைக் கொண்டது. இந்த அமைப்பு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. அத்துடன் அசம்பாவித சம்பவங்களில் உயிரைக் காக்க இரண்டு ஏர் பேக்குகளும் இதில் உள்ளன. அத்துடன் ஏபிஎஸ் மற்றும் இபிடி மேலும் வளைவுகளில் பிரேக் பிடிக்கும் தன்மை உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதில் உள்ளன.

இதில் குஷன் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இதனால் கப்பலில் செல்வதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான சேஸிஸ் மீது பொருந்தக்கூடிய என்ஜின் நுட்பம் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. இது ஸ்திர மான அதேசமயம் நீடித்துழைக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் இது எஸ்யுவி-யாக இருந்தாலும் காரில் பயணிப்பது அல்லது காரை இயக்கு வதைப் போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.

மொத்தம் ஏழு வெவ்வேறு மாடல்களில் அதாவது டி 4 மற்றும் டி 4 பிளஸ், டி 6 மற்றும் டி 6 பிளஸ், டி 6 பிளஸ் ஏஎம்டி, டி 8 மற்றும் டி 8 பிளஸ் என வெளிவந்துள்ளது.

7 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் 7 கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. ஏற்கெனவே சந்தைகளில் உள்ள பிற நிறுவனங் களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள டியுவி 300, பிற மாடல்களைக் காட்டிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை, பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

சந்தையில் விற்பனையை அதிகரிக்க விலையையும் குறைத்தே நிர்ணயித் துள்ளது. மஹிந்திரா. அதாவது அடிப்படை மாடல் காரின் புணே விற்பனையக விலை ரூ. 6.90 லட்சமாகும். உயர் ரக பிரிவின் விலை ரூ. 9.12 லட்சமாகும்.

தனது நிறுவனத் தயாரிப்பு அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் பறந்து வந்திருந்த குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அதிகரித்துவரும் வாடகைக் கார் செயலிகள் (ஆப்ஸ்) ஆட்டோமொபைல் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

போட்டி நல்லதுதானே.

கார் உருவாக்கத்துக்கு மட்டும் ரூ.1,000 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆராய்ச்சி, வடிவமைப்புக்கு ரூ.200 கோடி தனியே செலவிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சப்ளையர்கள் ரூ.300 கோடியை இதற்கென செலவிட்டுள்ளனர்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x