Published : 07 Nov 2016 11:08 AM
Last Updated : 07 Nov 2016 11:08 AM

சீனாவிலிருந்து வரும் சொகுசுக் கார்

சொகுசுக் கார் என்றாலே ஜெர்மனிதான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடிதான் அமெரிக்காவும், ஸ்வீடனும் மற்ற பிற நாடுகளும். சீனாவிலிருந்து சொகுசு கார் என்றால் நம்ப முடியவில்லையா? வேறு வழியே கிடையாது நம்பித்தான் ஆக வேண்டும் சீனாவின் புதிய சொகுசுக் கார்தான் வோல்வோ எஸ்90. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமானது.

என்னது வோல்வோ சீன நிறுவனமா? தவறு நிகழ்ந்துவிட்டது என ஸ்மார்ட்போனில் வோல்வோ- விக்கிபீடியாவை அலச வேண்டாம். 2010-ம் ஆண்டிலேயே வோல்வோ நிறுவனம் சீனாவின் ஜீலி குழுமத்திடம் கைமாறிவிட்டது.

விஷயம் அதுவல்ல கடந்த வாரம் அறிமுகமான வோல்வோ எஸ்90, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல் காராகும். இது நிச்சயம் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், ஜாகுவார் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது. மும்பையில் இதன் விற்பனையக விலை ரூ. 53.50 லட்சமாகும்.

ஸ்கான்டநேவியன் டிசைன், மிக உயர்ந்த செயல்திறன், பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத் துவம் அனைத்துக்கும் மேலாக சொகுசான பயணத்துக்கு உத்தரவாதம் இவைதான் வோல்வோ எஸ்90-யில் உள்ள அம்சங்கள்.

புதிய தொழில்நுட்பங்களின் கலவையாக இது வெளிவந்துள்ளது. வோல்வோ பாரம்பரியத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.

சொகுசு கார்களுக்கே உரிய வெளிப்புறத் தோற்றம். ஒருமுறை பார்த்தால் இதை மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகிய வடிவமைப்பு இதன் சிறப்பு. உள்புறத் தோற்றம் சொகுசுக் கார்களுக்கே உரித்தான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. 1400 வாட்ஸ் திறன் கொண்ட 19 ஸ்பீக்கர்கள் மிகத் துல்லியமான இசைக்கு உத்தரவாதம் தருகிறது.

மூன்று வேறுபட்ட டிரைவிங் தேர்வுகள், பின்புறத்துக்கென விசேஷமான சஸ்பென்ஷன் கள் சாலையில் செல்லும்போது கப்பலில் பயணிப் பது போன்ற சுகானுபவத்தை அளிக்கும்.

4 சிலிண்டர் டர்போ சார்ஜூடு 2 லிட்டர் டீசல் இன்ஜின் 190 குதிரை சக்தியுடன் 400 நியூட்டன் மீட்டர் டார்க் அளவைக் கொண்டதாக உள்ளது. பொதுவாக சொகுசு கார் வைத்திருப்பவர்கள் அதை ஓட்டுவதற்குப் பதில், அதில் பயணிப்பதையே பெரிதும் விரும்புவர். ஆனால் இந்தக் காரை ஓட்டுவதில் தனி அனுபவம் கிடைக்கும் என்கிறது இந்நிறுவனம். இந்தியாவில் முதன் முதலில் டீசல் மாசுக்களை அகற்றும் பில்டர் (டிபிஎப்) பொருத்திய காரை 2007-ம் ஆண்டில் வோல்வோ அறிமுகப்படுத்தியது. அத்தகைய நுட்பம் இதிலும் உள்ளது.

இதன் டாஷ்போர்டில் 9 அங்குல தொடு திரை உள்ளது. இதனால் இதில் அதிக எண்ணிக்கையிலான பொத்தான்கள் கிடையாது. இதனால் டிரைவர் சாலையில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும். பொழுது போக்கு அம்சங்களுக்குத் தேவையான அனைத்து செயலிகளும் இதில் உள்ளன. நேவிகேஷன், ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை காரின் பயண அனுபவத்தை மேலும் மகிழ்ச்சியாக்கும்.

பாதுகாப்பு அம்சங்களிலும் முன்னேறிய நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார் செல்லும் பாதை (லேன்) மாறும்போது அதை உணர்த்தும் நுட்பம் இதில் உள்ளது. இந்தியாவில் இத்தகைய நுட்பம் உள்ள கார் அறிமுகமாகவது இதுவே முதலாவதாகும். இதில் உள்ள டிஜிட்டல் கேமிராக்கள் பாதை அடையாளங்களை (லேன் மார்க்கர்) கண்டுபிடித்து டிரைவருக்கு தகவல் அளிக்கும். அதன்படி ஸ்டீரிங்கை அவர் சரி செய்யலாம். அவசர கால பிரேக் பிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதி, குழந்தைகளுக்கு கூடுதல் சொகுசு இருக்கை, முன்புற, பின்புற மற்றும் பக்கவாட்டு பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் வசதி இதில் உள்ளன. மேற்கூரை வசதி, பின்புற கேமரா, பின்னிருக்கை கால் தட ஸ்கேனர் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

வோல்வோ என்றால் லத்தீன் மொழியில் சுழல்கிறேன் என்று அர்த்தமாம். பெயருக்கேற்ப ஸ்வீடனில் உருவாகி இன்று உலகம் முழுவதும் சுழன்றோடுகிறது வோல்வோ!

ஸ்வீடனிலிருந்து சீனாவுக்கு…

வோல்வோ கார் கார்ப்பரேஷன் 1927-ம் ஆண்டு ஸ்வீடனில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் கோதன்பர்க்கில் உள்ளது. பால் பேரிங் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேஎப் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இது உருவாக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு இது அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் வசம் மாறியது. 2010-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து சீனாவின் ஜீலி ஹோல்டிங் குழுமம் இதைக் கையகப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x