Published : 20 Feb 2017 10:58 AM
Last Updated : 20 Feb 2017 10:58 AM

கைகளில் தயாராகும் ஸ்போர்ட்ஸ் கார்!

கைகளால் தயாரிக்கப்படும் பொருள்கள் அனைத்துமே விலை அதிகம். அதன் மீது பலருக்கு நாட்டமும் அதிகம். காரணம் மனித உழைப்பால் தயாரிக்கப் படும் பொருள்களில் இருக்கும் கலைத் திறனும், நுட்பமும், இயந்திரங்களில் தயாரிக்கப்படும் பொருள்களில் வராது என்ற எண்ணமே காரணம்.

இப்போது முழுவதும் இயந்திர மயம்தான். அதிலும் ஆட்டோமொபைல் துறைதான் இயந்திரமயமாக்கலில் முன்னோடியாகத் திகழ்கிறது.

ரோபோக்களின் பயன்பாடு அதிகம் உள்ள துறையும் ஆட்டோமொபைல் தான். கார் உற்பத்தி ஆலையில் பல கட்டங்களாக கன்வேயர் பெல்டில் பிரேமில் தொடங்கி ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து பலரது உழைப்பில் பகுதி பகுதியாக இயந்திரங்கள் சேர்க்கப்பட்டு மூன்று நிமிஷம் அல்லது அதிகபட்சம் 5 நிமிஷத்துக்கு ஒரு கார் வெளியாகும் தொழிற்சாலைகள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் கன்வேயர் பெல்ட் கிடையாது, ரோபோக்களுக்கு வேலை கிடையாது. முழுவதும் மனிதர்களின் உழைப்பில் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிக்கப்படுகிறது என்றால் அதை நம்ப முடிகிறதா. ஆச்சர்யமளிக்கும் இந்த விஷயத்தை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

பிரான்சைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி தனது சிரோன் மாடல் ஸ்போர்ட்ஸ் கார்களை முழுவதும் கைகளால் தயாரிக்கிறது. இந்த கார் பிரான்சில் உள்ள மால்ஷெய்ம் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது.

தற்போது இந்த ஆலையில் 12 கார்கள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு 70 கார்களைத் தயாரித்து விற்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இப்போது தயாராகும் சிரோன் மாடல் கார்கள் ஏற்கெனவே உள்ள இந்நிறு வனத் தயாரிப்பான வெரியோன் மாட லுக்கு மாற்றாக வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவன ஆலையில் 20 பணி யாளர்கள் 1,800 உதிரி பாகங்களை இணைத்து இக்காரைத் தயாரிக்கும் பணியில் கடந்த 6 மாத காலமாக ஈடு பட்டுள்ளனர். முழுக்க முழுக்க கைகளால் இந்த கார் தயாரிக்கப்படுகிறது.

கார் தயாரிப்பு பகுதி மொத்தம் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆலையில்தான் வெரியோன் மாடல் கார்கள் தயாராயின. மிகவும் உறுதியான கார்பனால் ஆன மேல் பகுதியைக் கொண்டிருப்பதால் இதற்கு வண்ணம் 6 முறை பூச வேண்டியிருப்பதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். வண்ணம் பூச மட்டுமே 3 வார காலமாகிறதாம்.

ஒவ்வொரு மாடல் காரும் பிரத்யேக தன்மையைக் கொண்டவை. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இது தயாரிக்கப்படுவதால் ஒன்றுக் கொன்று மாறுபட்டதாகவே இருக்கும்.

வாடிக்கையாளர் ஆர்டர் கொடுத்த பிறகுதான் அவர் குறிப்பிட்ட தேவை களுக்கேற்ற உதிரி பாகங்களுக்கு ஆர்டர் அளிக்கப்படுமாம். இவ்விதம் தொடங்கும் பணிகள் முடிவடைந்து காரை ஒப்படைக்க 6 மாத காலம் ஆகிறதாம். புகாட்டி காருக்குத் தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் ஐரோப்பா முழுவதும் இருக்கின்றன. இவை உதிரி பாகங்களைத் தயாரித்து மால்ஷெய்ம் ஆலைக்கு அனுப்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 12 அசெம்பிளி லைன் உள்ளது. முதலில் பவர் டிரெய்ன் தயா ரிக்கப்படும். இங்கு ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சல்ஸ்கிட்டர் ஆலையி லிருந்து வரும் இன்ஜின் நிறுவப்படும். இதில் இணைக்க வேண்டிய உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டு இது 8 மணி நேரத்தில் தயாராகும்.

இதே நேரத்தில் 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் அசெம்பிள் செய்யும் பணியும் தொடரும். இதையடுத்து பிரம்மாண்டமான 1,600 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப் படுத்தும் சிரோன் இன்ஜின் தயாராகும்.

இரண்டாம் கட்டமாக பவர் டிரைனிலிருந்து சேஸிஸில் இன்ஜின் நிறுவப்படும். காரின் எடையைக் குறைக்கும் அதே நேரத்தில் உறுதித் தன்மையை நிலைநாட்ட மேற்பகுதிகள் அனைத்தும் கார்பனால் ஆனவை. இதனால் இதன் எடை 628 கிலோவாக இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 3 ஊழியர்கள் ஒரு வார காலம் அசெம்பிளி பணியை மேற்கொள்வர்.

ஏறக்குறைய 1,800 போல்ட்களால் இணைக்கும் பகுதி சிரோன் காரில் உள்ளன. இன்ஜின் மற்றும் சேஸிஸ் இணைப்பில் 14 டைட்டானியம் போல்ட் சேர்க்கப்பட்டு உறுதித் தன்மையை நிலைநிறுத்துகிறது. உறுதியான அதே சமயம் எடை குறைந்த டைட்டானியம் போல்டின் எடை தலா 34 கிராமாகும்.

இறுதியாக நான்கு சக்கரங்களும் சேசிஸில் இணைக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு அனுப்பப்படும். இங்கு தேவையான எண்ணெய், இன்ஜின் ஆயில் மற்றும் பிரேக் ஆயில், கூலன்ட் உள்ளிட்டவை நிரப்பப்படும். இது 16 சிலிண்டரைக் கொண்ட இன்ஜினாகும்.

இதையடுத்து மிகவும் முக்கியமான டைனோமீட்டர் பகுதிக்கு கார் நகர்த்திக் கொண்டு வரப்படும். மிக அதிக முதலீட்டில் உருவாக்கப்பட்ட முக்கியமான பகுதி இதுவாகும். மிகவும் திறன் வாய்ந்த டைனோமீட்டர் பொறுத்தும் பகுதி இதுவாகும். இது இன்ஜினின் வெப்பத்தைக் குறைக்க உதவுவதோடு சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

கார்களின் சக்கரங்கள் சரிவர பொறுத்தப்பட்டுள்ளனவா என்பதை சோதிக்க 200 கி.மீ.வேகத்தில் சக்கரம் சுழல்வதற்கான பகுதி இங்கு உருவாக்கப் பட்டுள்ளது.

சிமுலேட்டர் அடிப்படையில் செயல்படும் இதை ஒரு பணியாளர் அமர்ந்து பரிசோதிப்பார். ஏறக்குறைய 60 கி.மீ. தூரம் வரையான பயண நேரம் வரை சுமார் 3 மணி நேரம் வரை பரிசோதிக்கப்படும். வாகனம் வெளியேற் றும் புகையின் அளவு, பிரேக், கிளட்ச் ஆகியவற்றின் செயல்பாடு, ஏபிஎஸ் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

அடுத்தகட்டமாக இந்த கார் தண்ணீர் சோதனைக்கு உட்படுத்தப்படும். சுமார் 30 நிமிஷம் கன மழை பொழிவது போன்ற சோதனைக்கு உள்படுத்தப்படும். அப்போது வாகனத்தின் உள்பகுதியில் ஏதேனும் கசிவு இருக்கிறதா என்று சோதிக்கப்படும். இந்த சோதனைக்குப் பிறகே உள்புறத்தில் பிற கருவிகள் பொறுத்தப்படும். இதற்கு ஏறக்குறைய 3 நாள் ஆகுமாம்.

உள்புறத்தில் அனைத்தும் பொறுத் தப்பட்ட பிறகு முழு வீச்சிலான சோதனைக்கு சிரோன் தயாராகிவிடும். இந்த சமயத்தில் இந்த கார் முழுமையாக பிளாஸ்டிக் பாயிலில் சுற்றப்படும். இதற்கு ஒரு நாள் ஆகுமாம். இதேபோல சோதனை ஓட்டத்துக்கு இதை எடுத்துச் செல்ல இதன் மேலுள்ள உறைகளை நீக்க ஒரு நாள் பிடிக்கும். ஓடுதளத்தில்தான் இதன் எலெக்ட் ரானிக் பாகங்களின் செயல்பாடு மற்றும் சக்கரங்களில் மேற்கொள்ள வேண்டிய நுட்பமான அட்ஜெஸ்ட்மென்ட் ஆகியன செய்யப்படும். சோதனை ஓட்டத்தின் போது பயன் படுத்தப்படும் டயர்கள், டெலிவரியின் போது புதிதாக மாட்டப்படும். சோதனை ஓட்டத்தில் 300 கி.மீ. தூரம் இது ஓட்டிப் பார்க்கப்படும். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் இது இயக்கிப் பார்க்கப் படும்.

கடைசியாக இதன் மீது போர்த்தப் பட்டிருந்த அனைத்து பாதுகாப்பு கவர்களும் நீக்கப்பட்டு இறுதியாக இதற்கு பெயின்ட் பாலிஷ் ஏற்றப்பட்டு வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும். இதற்கு மட்டும் இரண்டு நாள்களாகும்.

2 பெண்கள் உள்பட 20 பணியாளர் கள் இந்த சிரோன் ஸ்போர்ட்ஸ் கார் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற னர். உலகிலேயே மிகவும் உறுதியான, வேகமாக செல்லும் சொகுசு கார் தயாராகிறது. இதன் செயல்பாட்டில் உள்ள தரம் 17 வெவ்வேறு தளங்களில் சோதிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வரும்.

கைகளால் தயாரான ஸ்போர்ட்ஸ் கார் சாலையில் சீறிப் பாயத் தயா ராகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x