Published : 05 Sep 2016 12:33 PM
Last Updated : 05 Sep 2016 12:33 PM

ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கி.மீ. தூரம் ஓடும் பேட்டரி கார்!

உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத கார்களைத் தயாரிக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பேட்டரி கார்கள் என்றாலே டெஸ்லா மோட்டார்ஸ்தான் முன்னோடி. புதிய ரகங்கள், அதில் மேம்படுத்தப்பட்ட தன்மை ஆகியன இந்நிறுவனத் தயாரிப்புகளின் சிறம்பம்சங்களாக விளங்குகின்றன.

குறிப்பாக பேட்டரி கார்களில் அதிக வேகமாகச் செல்ல முடியாது, விரைவில் பேட்டரி தீர்ந்து போய் கார் பாதி வழியில் நின்றுவிடும் என்ற அனைத்து விஷயங்களையும் தகர்த்தவை இந்நிறுவனத் தயாரிப்புகள். ரேஸில் பயன்படுத்தும் சூப்பர் காரை கூட பேட்டரியில் தயாரித்து சாதனை புரிந்துள்ளது டெஸ்லா.

இப்போது இந்நிறுவனம் பேட்டரி காரில் அதிக தூர பயணத்தை உறுதி செய்யக் கூடிய காரை எஸ்பி 100 டி என்ற பெயரில் அறிமுகம் செய் துள்ளது.

இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 482 கிமீ தூரம் நிற்காமல் ஓடக் கூடியது. இதுவரை இந்நிறுவனம் தயாரித்த கார்களில் அதிக வேகமாகச் செல்லும் காரும் இதுதான். இந்த கார் 2.5 விநாடி நேரத்தில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டதாம்.

இந்த வேகமானது லா பெராரி, போர்ஷே 918 ஸ்பைடர் உள்ளிட்ட இரண்டு பேர் பயணிக்கும் கார்களின் வேகத்துக்கு இணையானதாகும்.

இந்த கார் நான்கு கதவுகளைக் கொண்டிருப்பதோடு 5 பெரியவர்கள், 2 குழந்தைகள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு சிறிதளவு இட வசதியும் இதில் உள்ளது.

இதில் 100 கிலோவாட் பேட்டரி இருப்பதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 482 கி.மீ. தூரம் ஓடுவதை உறுதி செய்கிறது.

பேட்டரி கார்கள் இதுவரை செல்லும் அதிகபட்ச தூரத்தையும் இந்த கார் முறியடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் எஸ்யுவி ரக மாடல் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கி.மீ. தூரம் ஓடும். அந்த சாதனையையும் இப்புதிய கார் முறியடித்துள்ளது.

டெஸ்லா கார் விலை இந்திய மதிப்பில் அதிகமாக இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான்வேண்டும். இத்தகைய மேம்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ள இந்தக் காரின் விலை 1.35 லட்சம் டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 91 லட்சம் ஆகிறது.

கோடிக் கணக்கில் சொகுசு கார்களை வாங்கும் வசதி படைத்தவர்கள் சுற்றுச் சூழலில் கவனம் செலுத்தினால் இந்தக் காரை வாங்குவது சாத்தியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x