Published : 27 Feb 2017 12:21 PM
Last Updated : 27 Feb 2017 12:21 PM

உன்னால் முடியும்: வேலை வாய்ப்பு அதிகம் உள்ள தொழில்

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பிரபாகர். படித்தது பத்தாம் வகுப்பு. ஆனால் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப் பளிக்கும் வெற்றிகரமான தொழில்முனை வோராக உள்ளார். செல்லப்பிராணிகள், வளர்ப்பு மீன்களுக்கான உணவு தயாரிப்பு தொழிலில் உள்ள இவரது அனுபவத்தை இந்த வாரம் ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டார்.

சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதான நாட்டத்தினால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பத்தாம் வகுப்புக்கு பிறகு சில நாட்கள் வளர்ப்பு பறவைகள், மீன்கள் என நாட்கள் கழிந்தன. 22 வயதில் எழும்பூரில் சின்ன இடத்தில் வண்ண மீன் விற்பனையகம் ஆரம்பித்தேன். ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். தினசரி அதிகபட்சமாக ரூ. 200 -க்கு விற்பனையாவதே அதிசயம். மீன் குஞ்சுகள் மற்றும் அவற்றுக்கான உணவை வாங்க அடிக்கடி சென்னை கொளத்தூர் பகுதிக்குச் செல்வேன். அப்படி கிடைத்த தொடர்பை வைத்து, மீன் உணவை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினேன். சில்லறையாக விற்கத் தொடங்கி அதில் கிடைத்த லாபத்தால் ஒரு கட்டத்தில் மொத்த விற்பனையாளராக மாறினேன். எட்டு ஆண்டுகள் இந்த தொழிலில் இருந்த வகையில் இவற்றை வெளிநாடுகளிலிருந்தே நானே நேரடியாக இறக்குமதி செய்து விற்கும் அளவு வளர்ந்திருந்தேன்.

வளர்ப்பு பறவைகள், மீன், மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவு தயாரிப்பாளர்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இல்லை. அதனால் எனக்கு இந்த தொழிலில் தயாரிப்பாளராக இறங்க தைரியம் வந்தது. ஏனென்றால் அப்போது நான் மாதத்துக்கு 3 டன் உணவுகளை விற்பனை செய்யும் அளவுக்கான மார்க்கெட்டை வைத்திருந்தேன்.

சீனா, தைவான் போன்ற நாடுகளில் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் 2002ம் ஆண்டு இயந்திரங்களை வரவழைத்தேன். உணவு தயாரிப்பு தொழில்நுட்பத்துக்காக ஒரு அமெரிக்க நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த நிறுவனம் உணவு கலவை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள். வளர்ப்பு பிராணிகள் கண்காட்சிகளில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தி வெளிநாட்டு ஆர்டர்களைப் பிடித்தேன்.

சர்வதேச அளவில் சீனாவில் ஒரு கண்காட்சி நடக்கும். அதில் 900 கடைகள் சீனர்களுடையதாக இருக்கும். 100 பேர்தான் வெளிநாட்டவர்கள் இருப்பார்கள். அதிலும் இந்தியாவிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இருப்போம். நாம் கொடுக்கும் விலை குறைவாகவும், தரமாகவும் இருக்கும் என்பதால் சர்வதேச ஆர்டர்கள் கிடைத்து விடும். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாளராக உருவானேன். ஆரம்பத்தில் எனக்கு சிங்கப்பூரிலிருந்து மீன் உணவை அனுப்பி வைத்த நிறுவனத்துக்கு இப்போது நான் எனது தயாரிப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு தயாரிப்புக்கு பின்னாலும் பல மாதங்கள் உழைக்க வேண்டும். பறவைகள் உணவு என்றால் எந்த பறவை, எந்த தானியத்தை விரும்பி உண்ணும் என்கிற புரிதல் வேண்டும். இவையெல்லாம் அனுபவத்தில் கிடைக்கும் என்றாலும் வெளிநாட்டு தயாரிப்புதான் தரமான இருக்கும் என்று நினைக்கும் இங்குள்ளவர்களின் மனநிலையையும் மாற்ற வேண்டிய சவால் எனக்கு இருந்தது. ஏனென்றால் இங்கு நான் தயாரித்து பத்து ரூபாய் குறைவாக கொடுத்தாலும் வாங்க தயாராக இல்லை. இப்போதும் எனக்கான போட்டியாளர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்பவர்கள்தான். இதனால் எனது பிராண்டு பெயர், பேக்கிங் முறை உள்பட அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளைப் போலவே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாதத்துக்கு மூன்று டன் சந்தையை மட்டுமே வைத்திருந்த நான், 100 டன் உற்பத்தி திறனுக்கு தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் மூன்று நாட்கள்தான் வேலை நடக்கும். பிறகு ஆறு நாட்கள், பத்து நாட்கள் என வேலைகள் அதிகரித்து இப்போது மாதத்துக்கு 100 டன் என்கிற இலக்கை எட்டியுள்ளேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் 100 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன். வங்கிகளும் கடன் தர தயாராக இருக்கின்றன. அடுத்ததாக 1000 டன் உற்பத்தி இலக்கில் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

உற்பத்தி துறை சார்ந்த நிறுவனமாக நான் முறைப்படுத்தப்பட்டிருந்தாலும், எனது தயாரிப்புகளை பயன்படுத்தும், வாங்கி விற்கும் கடைகள், வளர்ப்பு பறவை, மீன் விற்பனை தொழில் இன்னும் முறைப்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. இதை முறைப்படுத்தினால் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது என் கருத்து. அரசு அமைப்புகள் இதை கவனிக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை என்று முடித்தார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x