Published : 09 Jan 2017 10:50 AM
Last Updated : 09 Jan 2017 10:50 AM

உன்னால் முடியும்: வியர்வை சிந்துவதே வெற்றிக்கு அடித்தளம்

உயர் படிப்புகள் எல்லாம் தலையில் உள்ள கிரீடம்போல, அதை இறக்கி வைத்தால்தான் உண்மையாக உழைக்க முடியும் என்கிறார் லண்டனில் எம்பிஏ படித்த விக்னேஷ். இதைப் படித்தால் வேலை கிடைக்கும், அதைப் படித்தால் வேலைக் கிடைக்கும் என்பதைத் தாண்டி, நம்மைச் சுற்றி உள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து கொண்டு, சரியாக முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். அயர்னிங், துணிகளை காயவைக்கும் ஸ்டேண்ட், உடனடி அலமாரி போன்ற பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

கோயம்புத்தூரில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்து விட்டு, லண்டனுக்கு எம்பிஏ படிக்கச் சென்றேன். சாப்ட்வேர் துறையில் நாட்டம் இல்லை என்றாலும் மேனேஜ்மெண்ட் துறையில் நல்ல வேலைக்கு போகலாம் என்பதுதான் யோசனை. நான் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பல்கலைக் கழகத்துக்கு ஒருமுறை அப்துல்கலாம் வந்திருந்தார். அப்போது இந்திய மாணவர்களிடம் அவர் உரையாடியபோது ‘நீங்கள் கற்றுக் கொண்ட கல்வியை தேசத்துக்கு செலவிடுங்கள், தாய்நாட்டில் இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதுகூட தேசபக்திதான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகள் நான் லண்டனிலும், மஸ்கட்டிலும் வேலை பார்த்துவிட்டு இந்தியா வந்தேன். இங்கு வந்த பிறகு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆலோசனை வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு இங்கேயே வேறு ஏதாவது தொழில் தொடங்கலாம் என யோசனை எழுந்தது. எந்த தொழில் என்கிற தேடலில்போது நான் என் அம்மாவுக்கு மஸ்கட்டிலிருந்து கிப்டாக வாங்கி வந்திருந்த அயர்னிங் டேபிள் கண்ணில் பட்டது. உடனடியாக இதற்கான மூலப்பொருட்களை தேடத் தொடங்கினேன்.

இந்த முயற்சியில் இறங்குவது தெரிந்து அப்பா தடுத்தார். உறவினர்களிடத்திலும் நல்ல ஆலோசனைகள் கிடையாது. இதை செய்வதற்கு லண்டனில் போய் படித்திருக்க வேண்டுமா என நேரடியாக பேசத் தொடங்கினர். ஆனால் என்னிடம் அப்போது கையில் இருந்த 40 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு ஒருவரை உதவிக்கு அமர்த்திக் கொண்டு வேலையில் இறங்கி விட்டேன்.

அயர்னிங் டேபிள், அதற்கடுத்து துணிகளை காயவைப்பதற்கான ஸ்டேண்ட் போன்றவற்றை அடுத்தடுத்து தயாரித்தேன். கோவை சுற்று வட்டாரத்தில் முக்கிய விற்பனையாளர்களிடத்தில் சென்றால், பிராண்ட் பெயர் இல்லாமல் வாங்குவதில்லை என்றனர். ஏனென்றால் அடுக்குமாடி வீடுகளில்தான் இதற்கான வரவேற்பு கிடைக்கும். எனவே ஆன்லைன் நிறுவனங்கள், சென்னையில் பிரபல கடைகள் என அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினேன். ஆனால் விற்பனையாளர்கள் கடன் அடிப்படையில்தான் வாங்குவார்கள். பணத்தை விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டால் நம்மால் தொழிலையே நடத்த முடியாது என்பதையும் அனுபவமே கற்றுக் கொடுத்தது. ஆரம்ப கட்ட பண நெருக்கடிகளை கடந்துவிட்டால், தொழிலில் நீடித்து விட முடியும் என்பதையும் உணர்ந்தேன்.

இந்த தயாரிப்புகளுக்கு சில்லரை விற்பனையைவிட ஆன்லைன் மூலமான விற்பனைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் நல்ல நிறுவனமா என சோதித்த பிறகுதான் பொருட்களை அனுப்ப வேண்டும். வெளியூர்களிலிருந்து மொத்த ஆர்டர் என்றால் விசாரிக்காமல் அனுப்பக்கூடாது. சிலரோ மொத்த ஆர்டர் தருகிறேன் சாம்பிள் அனுப்புங்கள் என்று வாங்குவார்கள். அதன்பிறகு அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. இது போன்ற அனுபவங்களுக்கு பிறகு தனியாக நானே ஹோம் யுட்டிலிட்டி என்று ஆன்லைன் தளத்தை தொடங்கிவிட்டேன்.

இந்த தயாரிப்புகளின் அடுத்த கட்டமாக அயர்னிங் டேபிளுடன் ஏணி, சுற்றுலா சென்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறு அலமாரிகள், துவைக்கும் துணிகளை சேர்க்கும் கூடை என ஒவ்வொன்றாக உருவாக்கினேன். நமக்கான தொழில் இதுதான் என முடிவு செய்துவிட்டால் அதில் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போதுதான் அங்கீகாரம் கிடைக்கும். லண்டனில் எம்பிஏ படித்தவனுக்கு இந்த வேலை எதுக்கு என்றார்கள். இப்போது 25 நபர்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். ஆன்லைன் சந்தையிலும் சிறந்த விற்பனையாளராக உள்ளேன்.

நீ எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளுக்கு பலி ஆடு ஆகிவிடக்கூடாது என என் அப்பா அடிக்கடி கூறுவார். தொழில் முயற்சியில் இறங்குகிறேன் என்றபோது அவரும் வேண்டாம் என்றுதான் சொன்னார். ஆனால் நான் அவர் சொல்லிக் கொடுத்ததை கடைபிடித்தேன். இப்போது நன்றாக இருக்கிறேன். பலருக்கும் வலியுறுத்தும் விஷயமும் அதுதான் என்று முடிக்கிறார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x