Published : 26 Dec 2016 10:41 AM
Last Updated : 26 Dec 2016 10:41 AM

உன்னால் முடியும்: வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்...

சாதிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் இஸ்ரேல் பிரேம். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். காரைக்குடி கூடை, கைவினை தாம்பூல பைகள் தயாரிப்பில் வளர்ந்து வரும் இவர் தனது அனுபவத்தை இந்த வாரம் ``வணிக வீதி’’-க்காக பகிர்ந்து கொண்டார்.

குடும்ப நிலைமை காரணமாக பத்தாம் வகுப்புவரைதான் படித்தேன். பிறகு ஐடிஐ படித்துவிட்டு ஒரு நிறுவனத் தில் ஹெல்ப்பராக வேலைக்குச் சேர்ந்தேன். கம்ப்யூட்டரில் ஏதாவது கோர்ஸ் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற ஆசையில் 6 மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தேன். கம்ப்யூட்டர் ஹார்ட்வேரில் ஆர்வம் ஏற்பட்டு திரும்ப என்ஐஐடி-யில் ஒரு ஆண்டு கோர்ஸில் சேர்ந்தேன். ஓரளவு ஹார்ட்வேர் விஷயங்களைக் கற்றுக் கொண்டு கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்யும் அளவுக்கு வளர்ந்தேன்.

அப்படியே மெல்ல மெல்ல அந்த வேலைகள் உருவாக்கிக் கொண்டேன். பள்ளிகள், கல்லூரிகளில் கணினி சர்வீஸ் வேலைகள் கிடைக்கத் தொடங்கின. ஒரு நிறுவனமாக 6 நபர்களுக்கு வேலை கொடுத்து வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு 3 மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் எல்லா வேலைகளும் முடங்கின. சர்வீஸ் வேலைகளில் ஓடிக் கொண்டே இருந்தால்தான் நிற்க முடியும். அதனால் வேலைகளை புதிதாக எடுக்கவில்லை. ஆண்டு சர்வீஸில் இருந்த ஒரு சில நிறு வனங்களுக்கு மட்டும் நான்கு மாதங் களுக்கு பிறகு செல்ல தொடங்கினேன். அதில் ஒரு நிறுவனம் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தது.

அந்த நிறுவனத்திற்கு 8 ஆண்டுகளாக சர்வீஸ் வேலைகளை செய்து வருவதால், அந்த வேலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. உடல்நிலை முடியாத நிலையிலும் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வேலைகளை மெல்ல கற்றுக் கொண்டேன். பிறகு மெல்ல மார்க்கெட்டிங் வேலைகள், முக்கிய பொறுப்புகள் என வேலைகளை என் வேகத்துக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டேன். அந்த நிறுவனத்தை நடத்தியவர் கட்டுமான நிறுவனமும் நடத்தினார், அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த தொழிலையும் தொடர முடியாத நிலைமை உருவானது.

அங்கிருந்து விலகி நான் ஒவ்வொரு ஆட்களாக பிடித்து மீண்டும் ஒருங்கிணைத்து பழவேற்காட்டில் தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கினேன்.

எனது மார்க்கெட்டிங் வேகம், ஆர்வத்தால் இப்போது பழவேற்காடு தவிர, திசையன் விளை, காரைக்குடி போன்ற ஊர்களிலிருந்தும் வேலைகளை செய்து வாங்குகிறேன். எல்லா ஊர்களிலும் இதை செய்துவிட முடியாது. சில ஊர்களில் மட்டுமே இந்த கைவினை சிறப்பாக வரும். தமிழ்நாட்டில் இதற்கான சந்தை வாய்ப்புகளைவிட வட இந்தியர்களிடம் அதிகம் உள்ளது. குறிப்பாக மார்வாடி சமூக திருமணங்களில் இது போன்ற தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதே போல எல்லா மாதங்களிலும் உற்பத்தி செய்துவிட முடியாது. மழை மற்றும் குளிர் காலங்களில் பூஞ்சை பிடித்து விடும், வெயில் காலத்தில் கொஞ்சம் அதிக வெப்பம் இருந்தால் ஓலையின் நிறம் மாறும். இந்த மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில்கூட பழவேற்காட்டில் பலரிடமும் வேலைகள் கொடுத்து வைத்திருந்தேன். கடந்த வாரத்தில் அனுப்ப வேண்டிய ஆர்டர் அது. ஆனால் வார்தா புயல் தாக்கியபோது பலரது வீடுகளும் புயலில் பாதிக்கப்பட்டதில் எனக்கு கடுமையான இழப்பு. இப்படி இயற்கை சூழலை பொறுத்துதான் இதில் நிலைக்க முடியும்.

தயாரிக்கப்பட்ட பொருட்களை ஒருங்கிணைப்பது, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்கிற வகையில் தற்போது 6 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், தயாரிப்பில் சுமார் 40 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளித்து வருகிறேன். தற்போது வங்கி கடன் மூலம் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் உள்ளேன்.

என்னால் இதற்கு பிறகு எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்கிற நிலைமையில், எனது தன்னம்பிக்கை மட்டுமே இந்த வேலையை நோக்கி இழுத்து வந்தது. முன்பு அலைந்து திரிந்து வேலை செய்த போது இருந்த வேகத்தை, இப்போது ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதிலும் காட்டுகிறேன். வாய்ப்புகள் வரும்போது அதை சரியாக பயன்படுத்திவிட வேண்டும். வேகத்துக்கு ஏற்பதான் வெற்றி என்பது நமது உழைப்பி லேயே தெரிந்துவிடும்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x