Published : 05 Sep 2016 12:42 PM
Last Updated : 05 Sep 2016 12:42 PM

உன்னால் முடியும்: முயற்சிகளை ஊக்குவிக்கும் சென்னை

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் கார்த்திக். எம்ஐடி குரோம் பேட்டையில் பொறியியல் பட்டமும், ஷில்லாங் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியும் முடித்துவிட்டு காக்னிஸெண்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். தனது கார் டயர் பஞ்சரானதில் ஒரு நாள் சந்தித்த அவஸ்தைகளை யோசித்து தொடங்கிய நிறுவனம் கோ பம்பர் டாட் காம். தொழில்நுட்பம் மூலம் மெக்கானிக்குகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கார் மற்றும் டூ வீலர் சர்வீஸ் தேவைகளை நிவர்த்தி செய்து தருகிறது இந்த தளம். சென்னையின் புதுமையான இவரது தொழில் முயற்சியின் அனுபவத்தை இந்த வாரம் ‘வணிக வீதி’ வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சென்னை திருவல்லிகேணிதான் பூர்வீகம். நான் பொறியியல் படித்துவிட்டு ஒரு ஆண்டு லீயர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். அதனால் கார் சர்வீஸ் குறித்த அனுபவம் கிடைத்தது. அதற்கு பிறகு ஷில்லாங் ஐஐஎம்-ல் படித்துவிட்டு காக்னிஸெண்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த சமயத்தில் ஒரு நாள் எனது கார் டயர் பஞ்சராகிவிட்டது. சரி ஸ்டெப்னி டயரை வைத்து சமாளித்து விடலாம் என்றால் ஸ்டெப்னியும் பஞ்சர். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் காரை சர்வீஸ் செய்திருந்தேன். அது கார் நிறுவனத்தின் நேரடி சர்வீஸ் செண்டர் என்பதால் அவர்களிடம் போன் செய்து விசாரித்தேன்.

அவர்களோ ஸ்டெப்னி டயர் பஞ்சர் போடுவது சர்வீசில் சேராது, அதை உங்களுக்கு நோட் செய்து கொடுத்துள்ளோம் என்று கூறினர். அந்த நாளில்தான் எனது தொழில் முயற்சி யோசனை உருவானது என்று சொல்லலாம். இப்படியான அனுபவம் இந்தியா பிராப்பர்டி டாட் காம் நிறுவனத்தில் வேலை பார்த்த எனது நண்பர் சுந்தருக்கும் இருந்தது. இதனால் இது போன்ற அனுபவங்களைச் சந்தித்த பலருக்கு தீர்வாக ஒரு பிசினஸ் மாடல் யோசிக்க தொடங்கினோம். என்னோடு ஷில்லாங்கில் படித்த நந்தகுமாரும் இந்த யோசனையில் இணைந்தார். அவர் சுஸ்லான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியவர். எனவே தொழில்நுட்பம் மூலம் இந்த தொழிலை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினோம்.

பொதுவாக கார் வைத்திருப்பவர்கள் அவரச தேவைக்கு அருகிலுள்ள மெக்கானிக்குகளை போன் செய்து அழைப்பது நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் மெக்கானிக்குகள் சர்வீஸ் தொடர்பான ஒவ்வொரு தேவைகளுக்கும் நேரம் காலம் பார்க்காமல் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்வது சிலருக்கு தொந்தரவாகவும் அமையும். ஆனால் மெசேஜ் / சாட்டிங் மூலம் தகவல் கொடுப்பதை வாடிக்கையாளர்கள் விரும்புவதை எங்கள் சர்வே மூலம் அறிந்தோம். இதனால் இதை இரண்டையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஆப்ஸ் உருவாக்க தொடங்கினோம்.

தவிர நிறுவனங்களின் நேரடி சர்வீஸ் செண்டர்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் இருப்பதில்லை. அதே சமயத்தில் எல்லா மெக்கானிக்குகள் மீதும் நம்பிக்கை வைப்பதும் இல்லை. இதனால் ஒவ்வொரு ஏரியாவிலும் அனைத்து வசதிகளும் வைத்துள்ள, நல்ல பெயரெடுத்த கார் மற்றும் டூ வீலர் மெக்கானிக்குகளை இந்த ஆப்ஸில் ஒருங்கிணைக்கவும் முடிவெடுத்தோம். மூவரும் ஒரே நேரத்தில் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு தொழிலை தொடங்கினோம்.

மெக்கானிக் ஷெட்டுகளுக்கு சென்று எங்களது முயற்சிகளை விளக்கினோம். ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் காரை சர்வீஸ் செய்வதற்கான கோரிக்கை, அதிலேயே கொட்டேஷன் அனுப்புவது, தவிர என்ன வேலை செய்துள்ளீர்கள் என்பதை ஆன்-டைம் புகைப்படம் எடுத்து அனுப்பி விட்டால் வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையும் அதிகரிக்கச் செய்ய லாம் என விளக்குவோம். கிட்டத்தட்ட சென்னையில் எல்லா ஏரியா மெக்கானிக் செண்டர்களையும் அணுகியதில் சுமார் 900 பேரை ஒருங்கிணைத்துள்ளோம்.

இன் னொரு பக்கம் இந்த ஆப்ஸை பேஸ்புக், டிவிட்டர், கூகுள் போன்ற சமூக வலைதளங் கள் மூலமும் கொண்டு சென்றோம். ஆறு மாத தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எங்களது நிறுவனத்தை தொடங்கினோம். தற்போது 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் எங்க ளது செயலியை வைத்துள்ளனர். மாதத் துக்கு 2000 வாடிக்கையாளர்கள் புதிதாக இணைகின்றனர். தினசரி 30 வாடிக்கை யாளர்களாவது பயன்படுத்துகின்றனர். இப்போது 17 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்.

அடுத்ததாக கோயம்புத்தூரில் வேலை களை தொடங்கியுள்ளோம். பெங்களூருவில் தொடங்கும் முயற்சிகளிலும் உள்ளோம். இதன் மூலமே உதிரிபாகங்கள் விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த துறையில் ஆப்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது முதலில் நாங்கள்தான் என்பதால் இதை மிகப் பெரிய நிறுவனமாக கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நிறுவனங்களில் போதுமான சம்பளத்தை துறந்துவிட்டுதான் இந்த முயற்சிகளில் இறங்கினோம். இந்த சின்ன செடிக்கு எங்களது உழைப்புதான் உரம். அதை வளர்ப்பதில் சென்னைக்கும் பங்கு இருக்கிறது என கோரஸாக முடிக்கின்றனர் நண்பர்கள் மூவரும்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x