Published : 29 Jun 2015 10:56 AM
Last Updated : 29 Jun 2015 10:56 AM

உன்னால் முடியும்: பொறியியல் டூ பனியன் விற்பனை: சாதித்த நண்பர்கள்

ஒரே கல்லூரியில் படித்ததால் பேருந்தில் உருவான நட்பு இன்று பிசினஸ் பார்ட்னர்களாக நவீனையும், அனீஸையும் இணைத்துள்ளது. பிரிண்டிங் டி-ஷர்ட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை, உன்னால் முடியும் பகுதிக்காக சந்தித்தோம்.

கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே மாதிரியான டிசைன் மற்றும் லோகோ கொண்ட டி ஷர்ட் தேவைப்பட்டது. அந்த பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை ஏற்பாடு செய்து கொடுத்ததுதான் முதல் அனுபவம். ஆனால் அப்போது இதுதான் எங்கள் பிசினஸ் அடையாளமாக மாறப்போகிறது என்று தெரியாது.” என இரண்டு நண்பர்களும் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

பொறியியல் படித்த பிறகு இரண்டு பேருக்கும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. சுமார் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தோம்.

ஆனால் ஒரே மாதிரியான அந்த வேலைகளில் மனம் லயிக்கவில்லை. இருவருக்குமே அந்த மனநிலை இருந் ததால் வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தோம்.

பிரிண்டிங் டி ஷர்ட் செய்து கொடுப்பதையே தொழிலாக செய்தால் என்ன என யோசனை எழுந்தது. நவீன் உறவினர் ஒருவர் இதற்கு உற்சாகமூட்ட, பள்ளி கல்லூரிகளின் யூனிபார்ம் ஆர்டர் எடுக்க அலையத் தொடங்கினோம். ஒரு ஏரியாவில் இருக்கும் பத்து பள்ளிக்கூடங்கள் லிஸ்ட் எடுத்து போன் செய்து அப்பாயிண் மெண்ட் வாங்கிக் கொள்வோம்.

அலுவலகம் செல்வதற்கு முன்பு, முடிந்த பிறகு, நேரம் கிடைக்கும்போது அந்த பள்ளிக்கூடங்களுக்கு செல்வோம். நாங்கள் இந்த தொழிலை செய்யப்போகிறோம் எனக் கேள்விப்பட்ட எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரது திருமணத்துக்கு 7 பனியன்கள் ஆர்டர் கொடுத்தார். அதுதான் எங்களது முதல் ஆர்டர். தொழிலில் நாங்களும் இறங்கிவிட்டோம் என நம்பிக்கை வந்தது. ஆர்டர் கேட்டு தொடர்ச்சியாக சென்று வந்த ஒரு பள்ளியிலிருந்து 700 பனியன்களுக்கு ஆர்டர் கொடுப்பதாக சொன்னார்கள்.

இந்த ஆர்டரை நம்பி ஒருவர் வேலையை விடுவது என்றும், முதலிரண்டு மாத செலவுகளை சமாளிக்க இன்னொருவர் வேலையிலேயே நீடிப்பது என்றும் பிளான் செய்து கொண்டோம். இதற்கேற்ப நவீன் வேலையை ராஜிநாமா செய்தார். ஆனால் அந்த ஆர்டர் கிடைக்கவில்லை.

வேலை விட்டது வீட்டுக்குத் தெரியாமல் இரண்டு மூன்று மாதங்கள் போய்க்கொண்டு இருந்தது. அதற்கு பிறகு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து ஆர்டர் கிடைக்க, அப்படியே பிற கல்லூரிகள், நிறுவனங்கள் என பல ஆர்டர்கள் வரத் தொடங்கியது. பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தினோம்.

இதன் மூலம் கிடைத்த நண்பர்களும் ஆர்டர்கள் தர தொடங்கினார்கள். ஆரம்பத்தில் வேறொரு விற்பனை யாளரிடமிருந்து வாங்கி கொடுத்தோம். அதில் சில நஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, நேரடியாக திருப்பூரிலிருந்து வாங்குவோம் என அங்கு சென்று அலைந்து திரிந்தோம். அங்கும் சிலரிடம் ஏமாந்த பிறகு, சொந்த யூனிட்தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தோம்.

திருப்பூர் அனுபவத்தில் கிடைத்த தொடர்புகளைக் கொண்டு ஒரு உற்பத்தியாளரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டோம். குறித்த நேரத்தில், சொன்ன தரத்தில் கிடைக்கும் ஏற்பாட்டை செய்த பிறகு இன்னும் அதிக நம்பிக்கை கிடைத்தது.

பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது எங்களை நடத்தும் விதம் அவமானமாக இருக்கும். பனியன் விக்கிற பசங்க என்கிற மாதிரி நடத்துவார்கள். பிஇ படித்துவிட்டு சொந்த தொழில் செய்கிறோம் என்கிற தன்னம்பிக்கையை சீண்டுவதுபோல இருக்கும். எங்களது பேச்சு மற்றும் அணுகுமுறையின் மூலம் அவர்களிடத்தில் அபிப்ராயத்தை உருவாக்குவோம். எந்த சமயத்திலும் எங்களது தன்னம்பிக்கையை இழந்துவிடவில்லை.

இந்த வேலையில் இறங்கியதற்கு இருவர் வீட்டிலும் பெரிய ஆதரவில்லை, எதிர்ப்பும் இல்லை. தவிர ஆரம்பத்தில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், நிராகரிப் புகளும் அதிகம். இதோ இப்போது நல்ல நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

சொந்தமான பிரிண்டிங் யூனிட், நான்கு பேருக்கு வேலை, நிரந்தர வருமானம், அதையெல்லாம் தாண்டி சொந்த தொழில் கொடுக்கும் மகிழ்ச்சி நிறைவளிக்கிறது. எங்களோடு படித்த நண்பர்கள் சாப்ட்வேர் நிறுவன வேலைகளில் சம்பாதிப்பதைவிட நாங்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறோம்.

இன்ஜினீயரிங் படித்த பசங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என வீட்டிலிருப்பவர்கள் கோபப்படுவார்கள் என்பதால் முதன் முதலில் கிடைத்த ஆர்டருக்கு யாருக்கும் தெரியாமல் இரவில்தான் சப்ளை செய்தோம்.

இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்லூரிகள், விளையாட்டு நிறுவனங்களும் எங்களைத் தேடி வருகிறார்கள் என்கிற போது பட்ட கஷ்டம் எல்லாம் காணாமல் போகிறது. சுயமாக சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதில் ஒன்றைத் தேர்ந் தெடுங்கள் என்பதுதான் இவர்கள் சொல்லும் செய்தி.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x