Published : 17 Apr 2017 11:12 AM
Last Updated : 17 Apr 2017 11:12 AM

உன்னால் முடியும்: புது முயற்சிகளே நம் அடையாளம்

உணவு தயாரிப்பு துறையில் பிராண்டை உருவாக்குவது எளிதானதல்ல. சுகாதாரம், தரம், சுவை என எல்லாம் இருந்தாலும் உள்ளூர் சந்தையை சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் அன்றாட உணவு தயாரிப்பு எனில் சரியாக திட்டமிடவில்லையென்றால் இழப்புதான் மிஞ்சும். ஆனால் இட்லி தயாரிப்பில் 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதுடன், தினசரி 20 ஆயிரம் இட்லிகள் தயாரிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.. அதை சாதித்துள்ளனர் மூன்று சகோதரர்கள். சென்னை மறைமலை நகரில் நலா என்கிற பிராண்டில் இட்லி தயாரித்து வரும் இவர்களது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

எங்களுக்குச் சொந்த ஊர் திருச்சி என தொடங்கினார் பாஸ்கர், ``நான் டெக்ஸ்டைல் டிசைன் படித்துவிட்டு கரூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்தேன். ஆனால் வேலைக்கேற்ற வருமானம் இல்லை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். இங்கு வந்து டிசைனிங் சார்ந்த வேலைகளுக்கான முயற்சிகளில் இருந்தபோதுதான் இட்லி தயாரிக்கும் வேலைக்கான வாய்ப்புகள் உருவானது.

மறைமலைநகர் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு, செங்கல்பட்டிலிருந்து குஷ்பு இட்லி என்று தயாரித்து வந்து கொடுப்பார்கள். கடைக்காரர்கள் அதை வாங்கி சிறு லாபம் வைத்து விற்பனை செய்வார்கள். இதையே நாம் செய்தால் என்ன என தோன்றியது. இதற்காக என் அம்மாவை சென்னைக்கு வரவழைத் தேன். என் சித்தி வேலை செய்த உணவகத்திலேயே தினசரி 200 இட்லிக்கு ஆர்டர் பிடித்து கொடுத்தார்.

வீட்டுக்குச் சமைப்பதுபோலவே தினசரி வேலைகளைத் தொடங்குவோம். ஒரு கிரைண்டர், ஒரு காஸ் அடுப்பு, அம்மாவும் நானும் காலையிலேயே வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ஆரம்பத்தில் 200 இட்லியாக இருந்த எங்கள் தயாரிப்பு அதற்கடுத்து சின்ன சின்ன கடைகள், கேட்டரிங் என ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கடுத்து தம்பிகளும் சென்னை வந்தனர்.

காலையில் வேலைகளைத் தொடங்கி னால், குடும்பத்தினர் அனைவரும் மூன்று ஷிப்ட்களாக வேலை பார்ப்போம். ஒரு கட்டத்தில் இந்த பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களிலிருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கின. இதற்காக நிறுவனமாக செயல்படத் தொடங்கினோம்.

இப்போது எங்களிடம், பெரிய ஓட்டல் கள் முதல், சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள்வரை இட்லி வாங்கு கின்றனர்.

இட்லி உப்பலாக வர வேண்டும் என் பதற்காக மாவில் எந்த விதமான ரசாயனங் களையும் நாங்கள் கலப்பதில்லை. அதே நேரத்தில் இட்லி சுவையிலும் அளவிலும் சமரசம் செய்து கொள்வதில்லை. முக்கியமாக எங்களது இட்லியை மூன்று நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.

எனது டிசைனிங் அனுபவத்தைக் கொண்டு எங்களுக்காகவே இயந்திரத்தை வடிவமமைத்து, ஹைதராபாத்திலிருந்து செய்து வாங்கினோம். இட்லி தவிர, மாவு விற்பனையும் நடக்கிறது. இப்போது எங்களது தயாரிப்பை முழுவதும் இயந்திர மயமாக்கியுள்ளோம் என்றார்.

“ஆனால் அதைவிடவும் முக்கியமாக இட்லியில் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டதுதான் இப்போது எங்களை அடையாளப்படுத்தி வருகிறது” என்று தீபக்ராஜ் தொடங்கினார்.

அம்மா, அப்பா பெயர்களின் எழுத்துகளைக் கொண்டு, நலா என்கிற பெயரில் மசாலா இட்லி அறிமுகப் படுத்தியுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொடி இட்லி, சில்லி இட்லி, சில்லி ப்ரை இட்லி என பல வெரைட்டிகளில் இப்போது தயாரிக் கிறோம். ‘ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக இருப்பதாக பலரும் விரும்பி வாங்குகின்ற னர். கடைக்காரர்கள் அவர்கள் தயாரித்து விற்றால் என்ன லாபம் கிடைக்குமோ அதே லாபம் எங்களது இட்லியை வாங்கி விற்பதால் கிடைத்துவிடும். இட்லிக்குத் தேவையான சாம்பார், சட்னி வகைகளை தயாரித்துக் கொண்டால் மட்டும் போதும்.

சமீபத்தில் பணமதிப்பு நீக்க நட வடிக்கை எங்களை அதிகமாக பாதித்தது. தவிர ஐடி நிறுவனங்கள் தங்களது கிரெடிட் காலத்தை 90 நாட்களுக்கு அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினைகள் தவிர எங்கள் உழைப்புக்கு மக்களிடம் உள்ள வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது என்றார் இவர்.

நாம் அடுத்த வேளை சாப்பிடப்போகும் இட்லி இவர்கள் தயாரித்ததாகவும் இருக்கலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x