Published : 26 Sep 2016 10:40 AM
Last Updated : 26 Sep 2016 10:40 AM

உன்னால் முடியும்: நமக்கான பாதையை நாமே உருவாக்க வேண்டும்

சென்னை முடிச்சூரில் வசித்து வருகிறார் முருகன். பாலிமர் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்தவர் தற்போது ரப்பர் கிளவுஸ்கள், பலூன்கள் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். ஆரம்பத்தில் பலூன் பிரிண்டிங் மட்டுமே செய்து வந்த இவர் இப்போது பலூன் உற்பத்தியுடன், பிரிண்டிங் இயந்திரத்தையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த வாரம் இவரது அனுபவம் ‘வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர்கோவில். வேலை காரணமாக சென்னை வந்து செட்டில் ஆனவர். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ரப்பர் மோல்டிங் டெக்னாலஜி வேலை பார்த்து வந்தார். அதனால் இந்த துறைச் சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த அனுபவம் இருந்ததால் என்னை பாலிமர் மோல்டிங் சார்ந்து படிக்க வைத்தார். ஆனால் நான் படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக ரப்பர் பொருட்கள், பலூன்களை வாங்கி மார்க்கெட்டிங் செய்யும் வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். இதனால் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்வதை விட சொந்த தொழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் மார்க்கெட்டிங் வேலை மட்டுமே நமக்கு அடையாளத்தை கொடுக்காது என்று பிறகு புரிந்து கொண்டேன்.

பிறகு 2006ல் ரப்பர் பலூன்களில் பிரிண்டிங் செய்து கொடுக்கும் வேலைகளைத் தொடங்கினேன். அதாவது ரப்பர் பலூன்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து அதில் விளம்பரதாரர்களின் தேவைக்கு ஏற்ப பிரிண்டிங் செய்து கொடுப்பதுதான் இந்த வேலை. இதுவும் நிறைவு கொடுக்கவில்லை. அதனால் ஏற்கெனவே வெளியிலிருந்து வாங்கிய இயந்திரங்களின் செயல்பாடுகளைப் புரிந்து கொண்டு, அதுபோல புதிய இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கினேன். அதில் ஓரளவும் வெற்றி கிடைத்தது. இது பலூனையும் சொந்தமாகத் தயாரிக்கலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்ததாக அந்த வேலைகளிலும் இறங்கினேன்.

எனக்கு பிளாஸ்டிக் மோல்டிங் தொழில்நுட்பம் தெரியும் என்பதால் அதையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான அடிப்படை மூலப் பொருளான ரப்பர் பால் எங்களது சொந்த ஊரான நாகர்கோவில் பகுதிகளிலேயே கிடைத்து விடும் என்பதால் துணிச்சலாக இறங்கினேன். நானே தயாரித்துக் கொண்ட இயந்திரம், தட்டுப்பாடில்லாத மூலப் பொருட்களால் அடுத்த கட்ட வளர்ச்சிகள் தடையில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் இந்த தொழிலில் தமிழ்நாட்டில் உற்பத்தியாளர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். மொத்தமாக வாங்கி விற்கும் விற்பனையாளர்கள்தான் அதிகமாக உள்ளனர். நானே உற்பத்தியாளராகவும், பிரிண்ட் செய்து விற்பனையும் செய்து வருகிறேன். ஏனென்றால் இரண்டிலுமே நல்ல வாய்ப்புகள் உள்ளன.

தவிர சாதாரண பலூன் முதல் ஹீலியம் வாயு அடைத்து பறக்க விடும் பலூன் வரை தயாரிக்கிறேன்.

இந்த துறையில் பலூன் பிரிண்டிங் சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் உள்ளேன். ஏனென்றால் பிரிண்ட் செய்யாத சாதாரண பலூன்களை விடவும், விளம்பரம், நிகழ்ச்சிகளை பிரிண்ட் செய்த பலூன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏனென்றால் பலூனை குழந்தைகளுக்கான விளையாட்டு பொருளாக மட்டும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அது மிக நுணுக்கமான விளம்பர வாய்ப்பு என்பதை நானே நேரடியாக பார்த்திருக்கிறேன்.

நாகர்கோவிலில் ஒரு நகைக் கடைக்கு பிரிண்ட் செய்த பலூனை கொடுத்தோம். கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர்கள் பலூனை கொடுத்தனர். இதைப் பார்த்து வெளியில் நின்றிருந்த ஒரு குழந்தை அடம் பிடிக்க, பொருள் வாங்கினால்தால் பலூன் இலவசம் என்ப தால் அந்த குழந்தையின் பெற்றோர் இதற்காகவே ஒரு வெள்ளிக் கொலுசு வாங்கினர். இப்படி நுட்பமான விளம்பர மாக உள்ளது. பலூனை குழந்தை தூக்கிச் செல்லும் இடமெல்லாம் விளம்பரம்தான் என்பது கடைக்காரர்களுக்கு தெரியும் என்பதால் இந்த துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளது.

ஜெராக்ஸ் மிஷின் வாங்கும் விலைக்கு இந்த இயந்திரத்தை வாங்கி வைத்து தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

இதனால் புதிய தொழில்முனைவோர் களுக்கான இயந்திர விற்பனையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது நேரடியாக 20 நபர்களுக்கு வேலை அளிப்பதுடன் மறைமுகமாக தேவைக்கு ஏற்ப 10 நபர்களுக்கும் வேலை கொடுத்து வருகிறேன். நமக்கு என்ன தெரியும் என்பதை தெரிந்து கொண்டு நமக்கான பாதையை நாமே உருவாக்கினால் வெற்றிதான் என்பதை உணர்த்துகிறார் முருகன்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x