Last Updated : 27 Apr, 2015 10:19 AM

 

Published : 27 Apr 2015 10:19 AM
Last Updated : 27 Apr 2015 10:19 AM

உன்னால் முடியும்: தொழில் முனைவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது!

தொழில் தொடங்க பணம் தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும். முதலீடு செய்வதற்கு வென்ச்சர்/ஏஞ்சல் முதலீடுகள் தயாராக இருக்கின்றன என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு வணிக வீதியில் எழுதி இருந்தோம். அதற்கு உதாரணமாக ஐடியா மட்டுமே வைத்து சென்னை ஐஐடி மாணவர்கள் தொழில் தொடங்கி இருக்கிறார்கள்.

இவர்கள் உருவாக்கிய ஒரு செயலிக்கு (ஆப்) மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் எந்த பஸ்/ரயிலில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டும் செயலிதான் இந்த ராப்ட் (Raft)

இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சித்தார்த்திடம் பேசினோம். இந்த செயலிக்கான ஐடியாவில் இருந்து நிதி திரட்டியது வரை பல விஷயங்களை கூறினார். சென்னை ஐஐடியில் இறுதி ஆண்டு படிக்கும் போது சென்னையில் டிராபிக் எப்படி இருக்கிறது என்பதை புராஜெக்ட்டாக எடுத்து செய்தோம்.

படித்து முடித்த பிறகு நாங்கள் மூன்று பேரும் மூன்று வருடம் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தோம். இருந்தாலும் கல்லூரி புராஜெக்டை அடிப்படையாக வைத்து தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மூவருக்கும் இருந்தது.

தொழில் தொடங்க முடிவெடுத்த பிறகு ஐஐடியில் இருக்கும் பேராசிரியர்களிடம் எங்களுடைய ஐடியா, நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை விவரித்தோம். அதனால் அலுவலகம் தொடங்க இடமும் சிறிய முதலீடும் கிடைத்தது. அதன் பிறகு செயலி எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆரம்பித்தோம்.

உதாரணத்துக்கு பலவிதமான செயலிகள் வந்து மொபைல் போனின் மெமரியை பிடித்துக்கொள்வதால் தேவைப்பட்டால் மட்டுமே நம்முடைய செயலியை மக்கள் பயன்படுத்துவார்கள். அதனால் எங்களுடைய செயலி 3 எம்பி-க்கு கீழே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

மேலும் செயலிக்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்தோம். சென்னையில் 50 சதவீதத்துக்கு மேல் பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்கள் தான். எனவே பயணம் செய்பவர்களுக்கு இது தேவைப்படும் என்பதை முடிவு செய்தோம். மேலும் இதே மாடலை மற்ற ஊர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்த பிறகு மும்பையில் ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தை அணுகினோம்.

ஏஞ்சல் முதலீடு பெறுவது கஷ்டம்தான் என்றாலும் கொஞ்சம் மெனக்கெட்டால் முதலீடு கிடைத்துவிடும். ஒவ்வொரு நிறுவனமாக செல்வதை விட, முதலீட்டா ளர்களுக்கு சில துறைகள் பிடித்ததாக இருக்கும், அதுபோல உங்களது துறையை எந்த ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்துக்கு பிடிக்கும் என்பதை அறித்து கொண்டால் அதுவே பாதி வெற்றிதான். தேவை இல்லாமல் அலைய வேண்டியதில்லை. ஐந்து மாதங்களில் நாங்கள் முதலீட்டை பெற்றுவிட்டோம்.

சென்னையில் சிலரை நியமித்து, எந்த பஸ் எங்கு செல்கிறது என்கிற டேட்டாவை அடிப்படையாக வைத்து இந்த செயலியை உருவாக்கி விட்டோம். 1,500 வழித்தடங்களில் 6,000 நிறுத்தங்களின் டேட்டாவை வைத்து இந்த செயலியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த செயல்பாடு எப்படி என்று எங்களுக்கு புரிந்து விட்டது. டேட்டாவை எப்படி கையாளுவது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம். இதே விஷயத்தை மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் நான்கு நகரங்களில் விரிவாக்கம் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

எங்கள் ஆப் எந்த பஸ் எங்கு செல்லும் என்கிற தகவலை கொடுக்கும். ஆனால் பஸ் எங்கு இருக்கிறது, எப்போது நிறுத்தத்துக்கு வரும் என்பதை கொடுப்பதுதான் இந்த செயலியின் அடுத்த கட்டம்.

இந்த செயலிக்கு விளம்பரம் எதுவும் செய்யவில்லை. நண்பர்கள், பேஸ்புக் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தினோம். 20,000 நபர்களால் டவுன் லோடு செய்யப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லாமே மொபைல்தான். மொபைல் மூலமான விற்பனை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் எங்களுக்கான இணையதளம் கூட தொடங்கவில்லை.

ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என்பதால் முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே எங்களது செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது குறைவு என்பதால் ஆப்பிள் ஸ்டோரில் எங்கள் அப்ளிகேஷன் இல்லை. இந்தியாவில் தொழில் முனைவுக்கு சாதகமான சூழல் உருவாகி இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறோம் என்று முடித்தார் சித்தார்த்.

தொழில் முனைவோருக்கு சாதகமான சூழல் என்பது சித்தார்த்துக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான்...

ராப்ட் செயலியின் கூகுள் ப்ளே ஸ்டோர் இணைப்பு: >https://play.google.com/store/apps/details?id=com.hm.raft&hl=en

தொடர்புக்கு: karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x