Published : 05 Dec 2016 11:31 AM
Last Updated : 05 Dec 2016 11:31 AM

உன்னால் முடியும்: திறமையில் தெளிவாக இருக்க வேண்டும்

வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் கோவை, திருப்பூர் போன்ற பெருந்தொழில் நகரங் களில் தங்களுக்கு தனி அடையாளம் வேண்டும் என்று நினைத்து தொழில் செய்பவர்கள்தான் மற்றவர்களின் கவ னங்களை ஈர்க்கிறார்கள். கோவையைச் சேர்ந்த சதீஷ், தனசேகரன் இருவரும் அதற்காக உழைத்து வருகின்றனர். ஜவுளித்துறையின் துணைத் தொழில்களில் ஒன்றான பேக்கிங் உறைகள் தயாரிப்பில் ஈடுபடும் இவர்களது அனு பவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

நான் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் முடித்துவிட்டு ஒரு டூல்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலையில் இருந்தேன். தனசேகர் எம்சிஏ முடித்து விட்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்தார் என ஆரம்பித்தார் சதீஷ். நாங்கள் பள்ளியிலிருந்தே நண்பர்கள், தினசரி சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது பிசினஸ் செய்யலாம் என பேசிக் கொள்வோம். ஆனால் டூல்ஸ், டெக்ஸ்டைல் என்று எல்லோரும் செய்வதையே செய்யக்கூடாது. அதில் நமக்கு முன் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள், அதனால் நாம் ஜெயிச்சாலும் பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிவோம். தனியா தெரியணும் என்றுதான் பேச்சு முடியும்.

அப்படி ஒரு நேரத்தில் சட்டென பிடிபட்டதுதான் இந்த தொழில். இதற்கான சந்தையும் திருப்பூர், கோவையில் இருக்கிறது. தவிர பிசினஸ் என்கிற கவுரவும் கிடைக்கும் என யோசித்தோம். ஆரம்ப கட்ட வேலைகளுக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களில் வேலையி லிருந்து வெளியேறினோம்.

இயந்திரம், மூலம்பொருட்களில் முதலில் கவனம் செலுத்தினோம். மார்க் கெட்டிங் வாய்ப்புதான் ஏராளமாக இருக்குதே என முதலிலேயே அதிலும் கவனம் செலுத்தவில்லை. அது தவறு என பிறகு உணர்ந்தோம். எங்களது சேமிப்பு, வீட்டினர், நண்பர்கள் கடன் என உதவிகளோடு இயந்திரம், மூலப் பொருட்கள் வாங்கிவிட்டோம்.

இணைய வீடியோக்கள், இயந்திர விற்பனையாளர் உதவிகள் மூலம் தயாரிப்பு முறைகளையும் கற்றுக் கொண் டோம். வேலைகளில் முறையாக தேறிய பின் மார்க்கெட்டிங் இறங்கினோம். வாய்ப்புகள் ஏராளமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சப்ளை செய்பவர்கள் என, நம்மீது நம்பிக்கை இருந்தால்தான் ஆர்டர் கொடுப்பார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒரு நிறுவனத்துக்குள்ளும் விடவில்லை.

பேக்கிங் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளை பின் தொடர்ந்து சென்று எந்த நிறுவனங்கள் இவற்றை வாங்குகிறார்கள் என தெரிந்து கொண்டு, பிறகு அங்கு சென்று ஆர்டர் கேட்போம். ``புதியவர்களை நம்பி கொடுத்தால், நீங்க குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க வில்லை என்றால், எங்க வேலை வேற வகையில் பாதிக்கப்படும், இதனால தான் புதியவர்களுக்கு ஆர்டர் கொடுப்ப தில்லை’’ என சில நிறுவனங்களில் நேரடி யாகச் சொன்னார்கள். தவறினால் அப ராதம் விதிப்பார்கள் என்பதும் தெரிந்தது.

இதற்கு பிறகு நாம் முதலில் நேரடியாக விற்பனைக்கு இறங்குவதைவிட ‘ஜாப் ஒர்க்' செய்து கொடுப்போம். அதில் கிடைக்கும் தொடர்புகள் மூலம் மீண்டும் நேரடியாக இறங்குவோம் என முடிவு செய்தோம். அதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் இப்படி வேறொருவருக்கு வேலை செய்து கொடுத்தோம். எங்களுக்கு எந்த லாபமும் நிற்காது. சம்பளமும் கிடையாது. வருகிற பணம் மூலப்பொருளுக்கே சரியாக இருக்கும். இந்த சமயத்தில் வீட்டினரும் நம்பிக்கை இழந்தனர். ``வேலையில் இருந்தாலாவது ஏதாவது வருமானம் கிடைச்சிருக்கும். இப்படி எவனுக்கோ உழைக்கிறீங்களே என சொல்வார்கள். ஆனா எங்களுக்கு நம்பிக்கை இருந்தது நாங்க ஜெயிப்போன்னு என்று நிறுத்து கிறார் சதீஷ்.

தொடர்ந்த தனசேகர் ‘‘நடிக்க சான்ஸ் கேட்டு அலைஞ்சு, சாதிச்சு காமிக்கிறோம்னு சவால் விட முடியாது, ஆனா நாங்க பிசி னஸ்ல சாதிச்சு காமிக்க முடியும்’’ என வீட்டில் சொல்லி சமாளிப்போம். அந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனியாக இறங்கியபோது ஆர்டர்கள் கிடைத்தன.

ஆனால் எங்க துரதிஷ்டம் முதல் ஆர்டரி லேயே சொதப்பினோம். மூன்று நாட்களில் முடித்து தருவதாக ஆர்டர் வாங்கி வந்தோம். ஆனால், முதல் நாள் பவர் கட், அன்று இரவு பெய்த மழையில் கம்பெனிக்குள் தண்ணீர் வந்துவிட்டது. மேலும் மூன்று நாள் அவகாசம் கேட்டு செய்து கொடுத்து, அபராதம் கட்டவும் செய்தோம்.

இப்படி பல அனுபவங்களோடு, இப்போது இரண்டாவது ஆண்டில் நல்ல நிலைமையை அடைந்துள்ளோம். நான்கு நபர்களுக்கு வேலை அளித்துள்ளோம். ஆட்கள் பாற்றாக்குறை தவிர வேறு பிரச்சினைகள் இந்த தொழிலில் கிடையாது. ஆனால் இரண்டு நாளில் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு நான்கு நாட்கள் இழுக்கக்கூடாது இதுதான் சிக்கலாகும். நான்கு நாட்களில் செய்யும் வேலையை இரண்டு நாளில் முடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கலாம்; இதுதான் எங்களை வளர்க்கிறது என்று முடித்தார்.

- vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x