Published : 02 Jan 2017 10:58 AM
Last Updated : 02 Jan 2017 10:58 AM

உன்னால் முடியும்: சொந்த தொழில் மகிழ்ச்சிக்கு முன்னால் மாதச் சம்பளம் ஈடில்லை

வங்கிப்பணியில் நல்ல சம்பளத்துடன் வேலையிலிருப்பவர் சொந்த தொழிலுக்காக வேலையை விட முடியுமா? அதுவும் வாய்ப்புகளை இனிமேல்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நிலைமையில் துணிந்து முடிவெடுக்க முடியுமா? முடியும் என்கிறார் கார்த்தியாயினி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் துணை மேலாளர் நிலையிலிருந்தவர். திருமண நிகழ்வுகளில் இடம்பிடிக்கும் அலங்கார பொருட்கள் மற்றும் முன்னணி இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கான அலங்கார பெட்டிகளை தயாரித்து வருகிறார். இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

‘‘வங்கியில் வேலையை விடும்போது மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் பிசினஸில் இறங்கிய முதல் ஆறு மாதங்களில் நான் எதிர்பார்த்தபடி விற்பனைகள் இல்லை. அதேசமயத்தில் எனக்குள்ளிருந்த கலை ஆர்வம், கைவினை ஆர்வத்தினால் தாக்கு பிடித் தேன். சமீபத்தில்கூட வங்கிப் பணியில் வேலை வாய்ப்பு இருக்கிறது முயற்சிக்க லாமே, ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய் என அப்பா ஒருநாள் கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கும் தொழில்முனைவோராக உருவான பிறகு திரும்ப வேலைக்கு போக முடியுமா சொல்லுங்கள்’’ என பேசத் தொடங்கினார்.

கல்லூரி படித்து முடித்ததும் வங்கிப் பணி தேர்வில் வெற்றி பெற்று வேலைக்குச் சேர்ந்தேன். பதிமூன்று ஆண்டுகள் அனுபவத்தில் எழுத்தர் நிலையிலிருந்து உதவி மேலாளர் நிலை வரை வந்திருந்தேன். எனக்கு சிறு வயதிலிருந்தே கைவினை, மற்றும் அலங்கார பொருட்களை செய்வதில் ஆர்வம் உண்டு. பண்டிகை, விசேஷ நாட்களில் முயற்சிப்பேன். நவராத்திரி பண்டிகைக்கு நான் செய்யும் பொம்மைகளைத்தான் வீட்டில் கொலு வைப்போம். திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் என் தயாரிப்பைத்தான் அன்பளிப்பாக அளிப்பேன்.

எனது திருமணத்துக்கு பிறகு, கணவரது வீட்டிலும் இதற்கு வரவேற்பு இருந்தது. எனது மாமியாரும் இதுபோன்ற கைவினைகளில் தேர்ந்தவர். அதனால் புகுந்த வீட்டிலும் எனது ஆர்வம் தொடர்ந்தது. இடையிடையே உறவினர்கள், நண்பர்களுக்கும் இவற்றை தயாரித்து கொடுக்கத் தொடங்கினோம். இந்த நிலையில்தான் வேலையைவிட யோசித்தேன். தொடர்ச்சியாக பத்து, பனிரெண்டு மணி நேர வேலை. சில நாட்களில் பணிச்சுமை அதிகமாகவும் இருக்கும். இதனாலும் வேலையிலிருந்து விலக முடிவெடுத்தேன்.

இந்த தொழிலில் என்ன வருமானம் கிடைத்துவிடும், எந்த நம்பிக்கையில் வேலையை விடுகிறாய் என வங்கியிலும் உறவினர்கள் மத்தியிலும் தொடர்ச்சியான கேள்விகள்... ஆலோசனைகளும் வந்து கொண்டே இருந்தன. வேலையிலிருந்து விலகுவதில் உறுதியாக இருந்தேன். வீட்டிலும் ஒத்துழைப்பு கொடுத்தனர். மாதம் 8,000 வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தயாரிப்புகளை காட்சிப் படுத்தி, பத்திரிகை விளம்பரம் கொடுத்தேன். டிசம்பர் மாதத்தில் தொடங்கினோம், தை மாதத்திலிருந்து ஆர்டர்கள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.

ஆனால் ஒன்றிரண்டு ஆர்டர்கள்தான் கிடைத்தன. ஆறு மாதங்களுக்கு பிறகுதான் மெல்ல மெல்ல ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு ஏற்ப வேலைக்கான ஆட்களையும் அதிகபடுத்தினேன். இப்போது நேரடியாக ஏழு பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். தவிர பலருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன்.

எனது தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பொருட்களையும், சீன பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்துள்ளேன். மரம், பிரம்பு, மூங்கில், களிமண் போன்றவைதான் மூலப் பொருட்கள். இவற்றில் தரமானதையும், நமது டிசைனுக்கு தயாரித்து வாங்கவும் வடகிழக்கு மாநிலங்களுக்குத்தான் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் எனது கணவர் உதவிக்கு வருவார். இப்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இணையதளம் மூலம் மாதத்தில் 200 ஆர்டர்களாவது கிடைத்துவிடும். என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். திருமண நிகழ்ச்சிகளை ஒருங்கிணக்கும் முக்கிய நிறுவனங்கள், முன்னணி இனிப்பு நிறுவனங்களுக்கு சப்ளை செய்கிறோம்.

முன்னாள் கவர்னர் ரோசையா இல்லத் தின் நிகழ்ச்சிக்கு எங்களது பொருட்களை அனுப்பினோம். எங்களது அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைகளை ரசித்தவர்கள் எங்களை நேரில் அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் கிடைக்கும் பெருமிதத்துக்கு முன்னாள் பத்து மணி நேர வேலை ஈடாகுமா சொல்லுங்கள் என்றார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x