Published : 03 Oct 2016 12:28 PM
Last Updated : 03 Oct 2016 12:28 PM

உன்னால் முடியும்: சொந்த தொழிலின் பெருமிதத்துக்கு ஈடில்லை

குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா சாதனங்கள் தயாரிப்பில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் கிருஷ்ணகுமார். 2014ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தால் மொத்த தொழிலும் கைநழுவிப்போக, துவண்டு விடாமல், திறமையாலும்,நம்பிக்கையாலும் மீண்டும் மேலேழுந்து வந்துள்ளார். தற்போது 18 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் இவர் தனது கடந்த காலத்தை ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

அப்பா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். வேலைதேடி வந்து கோயம்புத்தூரில் செட்டில் ஆனவர். எனவே நான் பிறந்தது, படித்தது எல்லாம் கோவைதான். அப்பா பள்ளிக்கூடத்துக்கு தேவையானவற்றை விற்பனை செய்யும் கடையை சிறிய அளவில் நடத்தி வந்தார். இதனால் படிக்கும் காலத்தில் அவ்வப்போது கடை வேலைகளில் ஈடுபடுவேன். பெரிய வருமானமில்லை என்பதால் கஷ்டப்பட்டுதான் எம்பிஏ படிக்க வைத்தார். நான் படித்து முடித்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைபார்க்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு சொந்த தொழிலில் ஈடுபடவே விருப்பம் இருந்தது. அதிலும் குறிப்பாக விளையாட்டுத் துறை சார்ந்த உபகரணங்களுக்கு தேவை இருக்கிறது என்பதை அறிந்திருந்ததால் அந்த தொழிலையே செய்ய முடிவு எடுத்தேன்.

விளையாட்டு சாதனங்களுக்கான விற்பனையாளர், முகவராக இருந்து செயல்படத் தொடங்கினேன். பிறகு பள்ளிகளில் சிறுவர் பூங்காவுக்கு தேவையான விளையாட்டு சாதனங்களான சீசா, ஊஞ்சல் போன்ற கருவிகளை வெளியிலிருந்து செய்து வாங்கி அதை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதை சொந்தமாகவே தயாரிக்கும் வேலைகளில் இறங்கினேன்.

பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகள், பூங்கா என குழந்தைகள் புழங்கும் இடங்களில் எல்லாம் இதற்கான தேவை உள்ளது என்பதால் அதை இலக்காக வைத்து வேலை செய்தேன். தென்னிந்திய அளவில் முக்கிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்பதுதான் எனது திட்டம். இதனையொட்டி பைபரைக் கொண்டும் விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கத் தொடங்கினேன்.

தயாரித்த மாடல்களை சாம்பிள் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களில் ஆர்டர் எடுக்கலாம் என ஸ்கூட்டரில் செல்வேன். வேண்டுமா வேண்டாமா என முடிவெடுப்பவர்களை பார்ப்பதற்கு முன்னர், வாசலில் செக்யூரிட்டிகளே பேசி இங்கு தேவையில்லை என்று விரட்டி அனுப்பிவிடுவார்கள். சில இடங்களில் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக நமது திறமையை குறைத்து மதிப்பிட்டு பேசுவார்கள். தொழிலில் ஆரம்ப காலத்தில் நமது படிப்புக்கு மரியாதை கிடைக்கவில்லையே என கோபமாகவும், ஆதங்கமாகவும் இருக்கும். ஆனால் எனது திறமையிலும், தரத்திலும் மிகுந்த நம்பிக்கை இருந்ததால் இதையெல்லாம் கடந்து வரப் பழகினேன். அரசு துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்களது தயாரிப்புகள் குறித்து கடிதம் எழுதி விளக்கியும் பூங்காக்களுக்கான ஆர்டர் பெற்றுள்ளேன்.

தொழிலில் முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருந்த வாடகைக்கு இருந்த கட்டிடத்தை விதிமீறல் காரணமாக மாநகராட்சி 2014ல் சீல் வைத்துவிட்டது. கடைக்குள் இருந்த பொருட்களை வெளியே எடுக்கக்கூட அவகாசமில்லை. மொத்த முதலீடும் அங்கு முடங்கிவிட்டது. சுமார் 9 மாதங்கள் தொடர்ச்சியான அலைச்சலின் பலனாக பொருட்களை வெளியே எடுத்துக்கொள்ள மாநகராட்சி அனுமதித்தது. அதை எடுத்து பக்கத்தில் ஒரு வாடகை கட்டிடம் பிடித்து தற்காலிகமாக இருப்பு வைத்தோம். ஆனால் அங்கு மாற்றிய சில நாட்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு மொத்த பொருட்களும் நாசமாகிவிட்டன. தற்காலிக இடம் என்பதால் காப்பீடும் செய்திருக்கவில்லை. எனவே மீள முடி யாத அளவுக்கு இழப்பு. அடுத்த ஆறு மாதத்தில் அப்பாவும் உடல்நிலை சரி யில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தொழிலிலும், வாழ்க்கையிலும் அடுத் தடுத்து ஏற்பட்ட இழப்புகளால் மிகப் பெரிய விரக்தி ஏற்பட்டது.

பலரும் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போ என்று அறிவுறுத்தினர். ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலை விட எனக்கு விருப்பமில்லை. மூலப் பொருட்கள் சப்ளை செய்பவர்களுடன் மீண்டும் பேசினேன். என்னை நம்பி கடனுக்கு பொருட்களை தாருங்கள். பழைய கடனையும் சேர்த்து திருப்பி அளித்து விடுகிறேன் என்றேன். பலரும் நம்பிக்கையோடு கைகொடுத்தனர். இப் போது எல்லா கடனையும் அடைத்ததுடன் புதிய சந்தைகளை நோக்கியும் பயணப் பட்டுக் கொண்டிருக்கிறேன். கடையில் 10 பேருக்கு, தயாரிப்பு பணிகளில் 8 பேருக் கும் வேலை கொடுத்து வருகிறேன்.

எவ்வளவு சம்பளத்திலான வேலை என்றாலும் சொந்த தொழிலில் கிடைக்கும் பெருமித உணர்ச்சிக்கு ஈடாகாது என்பதுதான் எனது அனுபவம். அதைத்தான் எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தார்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x