Published : 26 Oct 2015 11:50 AM
Last Updated : 26 Oct 2015 11:50 AM

உன்னால் முடியும்: சுதந்திரம் தரும் சொந்தத் தொழில்

சென்னை மயிலாப்பூரில் பேப்பர் பேக் பிரிண்டிங் தொழிலை மேற்கொண்டு வருகிறார் புகழ்செல்வம். மெக்கா னிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். சென்னையில் உள்ள ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான அதிகாரியாக பணியாற்றியவர். ``மாத மாதம் வேலை செய்து சம்பளம் வாங்குவதை விட குறைவான வருமானம் வந்தாலும், சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பது ஆர்வமாக இருந்தது. சில குடும்ப பொறுப்புகள் காரணமாக தொழில் முயற்சிகள் தாமதமானது.

ஆனாலும் விடாப்பிடியான ஆர்வத் தினால் 2003 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு தொழில் முயற்சிகளில் இறங்கிவிட்டேன்’’ என்று தனது தொழில் முயற்சிக்கான ஆர்வத்தை விளக்கினார்.

இவர் முதன் முதலில் யோசித்த தொழில் காகித பை தயாரிப்புதான். பெரிய துணிக்கடைகள் பாலிதீன் கவர்களுக்குப் பதிலாக கொடுக்கும் பைகளை பிரதானமாக தயாரித்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் முனைவோராக கடந்து வந்த அனுபவத்தை ``வணிக வீதி’’ வாசகர்களுக்கு பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சிறு வயது முதலே சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பேன். அதற்கு ஏற்ப சொந்தத் தொழில் செய்து வருபவர்களது தொழில் அனுபவம், அவர்களது வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்புவேன்.

ஆனால் வீட்டில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எனது கவனத்தை சிதறடிக்காமல் பார்த்துக் கொண்டனர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் வரை படித்துவிட்டு, குடும்பநலன் கருதி வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டேன்.

சென்னை ஒரகடம் மெப்ஸில் உள்ள ஒரு ஜெர்மன் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தேன். ஆனால் சுயதொழில் ஆர்வம் அவ்வப்போது தலைக்காட்டத்தான் செய்யும்.

எனது தம்பி பொற்செல்வம் பொறியியல் படித்துவிட்டு ஒரு டெலிவிஷன் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து சுயதொழில் தொடங்க திட்டமிட்டோம்.

தொழிலை தொடங்க திட்டமிடும்போதே எனது நண்பர் நடராஜன் பேப்பர் பை, நான்-ஓவன் பைகள் தயாரிப்பது குறித்து ஆலோசனை கொடுத்தார். சுற்றுச் சூழல் சார்ந்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் இருந்ததால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

சென்னை மயிலாப்பூரில் யூனிட் ஆரம்பித்தோம். சென்னையில் இதற்கான சந்தை பெரியது. ஆனால் போட்டிகள் அதிகம். இங்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஆர்டர் பிடிப்பது, சப்ளை செய்வது என்று இருந்தால் தொழிலில் நிலைக்க முடியாது என்பதை எங்களது சில ஆண்டுகள் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டோம்.

சென்னையில் கேட்டரிங் தொழில் செய்பவர்கள், திருமண மண்டபங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், திருமண தாம்பூலப் பை ஆர்டர் பிடிக்கமுடியும் என்பதால், ஒவ்வொரு திருமண மண்டபமாக அலைந்திருக்கிறோம். அப்படியான ஆர்டர்களில் நான்-ஓவன் பைகள்தான் அதிகமாக இருக்கும். சில திருமணங்களில் நாங்களே காகித பை கொடுக்க ஆலோசனை கொடுத்து ஆர்டர் வாங்குவோம்.

இது போல துணிக்கடைகளுக்கும் ஆர்டர்கள் எடுக்க அலைந்திருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு தொடர்ச்சியாக ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

மயிலாப்பூர் யூனிட்டில் சுமார் பத்து பேர் வேலைபார்த்து வருகின்றனர். இதற்கடுத்து மீஞ்சூர் அருகே எங்களது சொந்த கிராமத்தில் ஒரு தொழிலகத்தைத் தொடங்கினோம். அங்கும் பதினைந்து பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு என்னால் முடிந்த வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்துள்ளது என்பதே மன நிறைவாக உள்ளது.

தற்போது எனது தம்பியும் நானும் தொழிலை கவனித்து வருகிறோம். தற்போது காகித அட்டைகளின் விலை அதிகரித்துள்ளதால் விலையை சீராக நிர்ணயிக்க முடியவில்லை. வாடிக் கையாளர்கள் விலை அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். ஆனாலும் இந்த காதித பை தயாரிப்பில் எனக்கு திருப்தி கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து எனது பங்களிப்பை செலுத்துகிறேன் என மனநிறைவு தருகிறது.

உண்மையில் சொல்லப்போனால் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை விடவும் சில மாதங்களில் குறைவான வருமானம் கிடைக்கும். ஆனால் சொந்த தொழில் கொடுக்கும் சுதந்திரமும், சந்தோஷமும் மாத வருமானத்தில் பெற்றுவிடமுடியாதே என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஒரு தொழில்முனைவர் இந்த சுதந்திர உணர்விலிருந்துதான் உருவாகிறார் என்பதே இவர் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய பாடமாகும்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x