Published : 24 Apr 2017 11:00 AM
Last Updated : 24 Apr 2017 11:00 AM

உன்னால் முடியும்: சமூக தொழில்முனைவில் புது முயற்சிகள்

இயற்கை வாழ்வியல் குறித்த தேடலும், தற்சார்பு பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி பல வகைகளில் மாற்று முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் தற்சார்பு நோக்கம் மட்டுமில்லாமல், சமூக தொழில்முனைவு முயற்சிகளும் நடக்கின்றன. அந்த வகையில் சமூக தொழில்முனைவாக ‘ஆம்பல்’ என்கிற பெயரில் இயற்கை வழி குளியல் சோப்புகளை தயாரிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாஸ்கர் ஆறுமுகம் தனது அனுபவத்தை ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சென்னை எஸ்ஆர்எம் வள்ளியம்மை கல்லூரியில் எம்சிஏ படித்தேன். ஆனால் ஆர்வம் என்னவோ விவசாயத்தில்தான். படிக்கும் காலத்தில் கிடைத்த தொடர்புகள் மூலம் இயற்கை விவசாய தேடல் உரு வானது. அங்கிருந்து வானகம் அமைப் பின் தொடர்பு கிடைத்தது. அதற்கடுத்து விவசாய துறையில் ஆராய்ச்சி மேற் படிப்பு படிக்கவும் ஆயத்தமாக இருந்தேன். ஆனால் எனது தீவிர இயற்கை விவ சாய ஆர்வத்தால், முழு நேரமாக அந்த அமைப்பின் முயற்சிகளில் பங்கெடுக்க லானேன். எனது பொருளாதார தேவை களுக்காக சிறிய அளவில் சிறுதானியங் களை மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தேன். ஆனால் நான் அறிவியல் மாணவன் என்பதால் குளியல் சோப்புகளின் தேவையை நண்பர்கள் என்னிடம் வலியுறுத்தினர்.

ஏற்கெனவே பலரும் மாற்று முயற்சியாக குளியல் சோப்புகளை தயா ரித்து வருகின்றனர். ஆனால் இதற்கான மூலப்பொருட்களில் ரசாயனம் கலக்கவே செய்கின்றனர். தவிர மூலப் பொருட்களான எண்ணெய் உள்ளிட்டவற்றை சந்தையில் கிடைப்பதை வைத்தே செய்கின்றனர். இதனால் விலை அதிகமாக விற்க வேண்டும் என்பதுடன், வழக்கமான சோப்பு என்கிற முறையிலேயே இருக்கும். மாற்று வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்காது. இந்த நிலையில்தான் நான் அந்த முயற்சிகளில் இறங்கினேன்.

ஏற்கெனவே இயற்கை வாழ்வியல் நண்பர்களின் தொடர்புகள் இருந்ததால் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களை நேரடியாக விவசாயி களிடமிருந்தே வாங்கினேன். இதற்கான அச்சு உள்ளிட்ட உபகரணங்களை ‘வானகம்’ குமார் அம்பாயிரம் ஏற்பாடு செய்தார். 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வீட்டிலேயே தயாரிக்கத் தொடங்கினேன். சுமார் ஒரு வருடம் முழுதாக இதற்கான பரிசோதனை முயற்சிகளுக்கு செலவிட்டேன்

சோப்பை, கிணற்று நீர், ஆற்று நீர் என பல வகையான தண்ணீரிலும் பயன்படுத்திப் பார்ப்பது, மூலப் பொருட்களின் சேர்க்கை விகிதாச்சாரம், அந்த ஒரு ஆண்டில் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தியவர்கள் சொன்ன கருத்துகள், பிரபல சோப்பு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் கொடுத்த ஆலோசனைகள் என சோப்பை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டேன்.

தற்போது கத்தாழை, சந்தனம், எலுமிச்சை மற்றும் பப்பாளி என நான்கு வகைகளில் குளியல் சோப்பு தயாரிக்கிறேன். இவற்றில் எதிலும் ரசாயன ங்கள் சேர்ப்பதில்லை. எறும்புகள்கூட சோப்பை மொய்க்கிறது என்று பயன்படுத்தியவர்கள் குறிப்பிடுகின்றனர். சித்த மருத்துவ நண்பர்கள் உலர் சருமத்துக்குப் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மாதத்துக்கு 3000 சோப்புகள் தயாரித்தாலும், இதற்காக தனியாக மார்க்கெட்டிங் முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை முழுவதும் நண்பர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களது தொடர்பில்தான் விற்பனை செய்து வருகிறேன். திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் முகவர்களும் உள்ளனர். சமூக வலைதளங்கள் வழியாக பலரும் தொடர்பு கொள்கின்றனர்.

அவர்களுக்கு விற்பனை செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும், அவர்கள் சொந்தமாக தயாரித்து அதை விற்பனை செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிக் கிறேன். ஏனென்றால் ஆரம்பத்தில் நமது தேவைகளுக்கு நாமே முயற்சித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் நானும் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் இன்று இதுவே ஒரு தொழிலாக உருவாகியுள்ளது. வருமானத்தையும் அளித்து வருகிறது.

பொருளை விற்பதுடன் எனது அனுபவத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு மாற்று முயற்சிகளையும், சமூக தொழில்முனைவாக அந்தந்த ஊர்களிலேயே இளைஞர்கள் செய்வதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் தற்சார்பு பொருளாதார முயற்சிகளும் வெற்றிபெறும் என்கிறார் இவர்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x