Published : 21 Nov 2016 10:39 AM
Last Updated : 21 Nov 2016 10:39 AM

உன்னால் முடியும்: குடும்பத்துடன் இருக்க வாய்ப்பு கொடுத்த தொழில்

சில மோசமான தோல்விகளே வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்பதுதான் சொந்த தொழிலில் வெற்றிபெற்றவர்களின் அனுபவமாக உள்ளது. புதுச்சேரியில் கேரம் போர்டு தயாரிக்கும் தொழிலில் உள்ள முகமது உமரும் இதற்கு விதிவிலக்கல்ல. பல தடைகளுக்குப் பிறகு, இன்று தன்னம்பிக்கையோடு நிற்கும் இவரது அனுபவம் இந்த வார ‘வணிகவீதி’-யில் இடம் பெறுகிறது.

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்துவிட்டு சொந்தமாக மெக்கானிக் ஷாப் ஆரம்பித்தேன். பெரிதாக வருமானமில்லை என்றாலும், சொந்த தொழிலில் கிடைக்கும் அனுபவம் காரணமாக சில ஆண்டுகள் செய்து வந்தேன். வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்வதிலும் உடன்பாடில்லை. ஆனால் நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் சென்றுவிட்டேன். எனினும் வெளிநாட்டிலேயே இருந்துவிடுவதிலும் உடன்பாடில்லை.

குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பதற்குத்தானே சம்பாதிக்கிறோம். ஆனால் குடும்பத்தை பிரிந்து சம்பாதித்து என்ன சந்தோசம் என்கிற உறுத்தல் இருந்தது. அதனால் சில ஆண்டுகளிலேயே ஊருக்கு வர முடிவெடுத்தேன். திரும்ப வெளிநாட்டுக்கு வரக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன். ஆனால் ஊருக்குச் சென்று நல்ல தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கான முதலீடு வேண்டும் என்பதற்காக அப்போதே சேமிக்க தொடங்கினேன். என் உறவினர் ஒருவர் இந்த தொழிலில் ஏற்கெனவே உள்ளதும், அவருக்கான வாய்ப்புகளும் எனக்கு தெரியும் என்பதால் இந்தத் தொழிலை தொடங்க யோசித்திருந்தேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஊர் திரும்பியதும் அவரிடம் வேலைக்குச் செல்லத்தொடங்கினேன். ஏனென்றால் இந்த தொழிலை அனுபவத்தினால்தால் கற்றுக் கொள்ள முடியும். ‘என்னப்பா வெளிநாட்டுல நல்லா சம்பாதிச்கிட்டு இருந்த, இப்போ இங்க வந்து கஷ்டப்படுறியே’ என உறவினர்கள் சொல்லத்தான் செய்தனர். ஆனால் நான் பழைய தவறுகளை திரும்பச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனென்றால் எனக்கு மெக்கானிக் வேலை ஏற்கெனவே தெரியும் என்பதால், ‘நீ வெளிநாடு போகலன்னா திரும்ப மெக்கானிக் செண்டர் ஆரம்பிக்க வேண்டியதுதானே, எதுக்கு தெரியாத வேலையில் இறங்குகிறாய்’ என தூண்டினார்கள்.

ஆனாலும் நான் இந்த வேலையை கற்றுக் கொள்ளத் தொடங்கிய சில மாதங்களிலேயே இதற்கு உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்து நன்றாக தெரிந்து கொண்டேன். ஏனென்றால் இங்கு அதிகமாக டெல்லி போர்டுகள்தான் சப்ளை ஆகின்றன. தமிழ்நாட்டில் ஒரு சிலர்தான் இந்த தொழிலில் உள்ளனர். பெரும்பாலான விற்பனையாளர்கள் டெல்லி போர்டுகளை விரும்புவதில்லை என்றாலும், தரமான போர்டுகள் கிடைப்பதில்லை என்பதால் அதை விற்பனை செய்கின்றனர். மூன்று ஆண்டுகளில் எனக்கு நம்பிக்கை வந்ததும், நான் தனியாக தொழில் செய்யப் போவதாக சொல்லிவிட்டுதான் தொழிலை தொடங்கினேன்.

ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் வேலைகள் சற்று சிரமமாக இருந்தாலும் இப்போது விற்பனையாளர்கள் தேடி வந்து வாங்கும் அளவுக்கு சந்தையை உருவாக்கி யுள்ளேன். ஆனால் இப்போது வரையில் பழைய நிறுவனத்தின் ஒரு வாடிக்கை யாளரைக் கூட ஆர்டர் கேட்டு நான் தொந்தரவு செய்ததில்லை.

இந்த வேலை வெளியிலிருந்து பார்க்க தச்சு வேலையைப்போல தோன்றினாலும், ரொம்ப நுணுக்கமானது. விளையாடும்போது ஸ்டிரைக்கர் அடிக்கும் வேகத்தில் சட்டம் உள்வாங்கிவிட்டால் அந்த போர்டு வீணாகத்தான்போகும். கணுக்கள் இல்லாத மரப்பலகைகளை பார்த்து வாங்கினாலும் ‘டொக்கு’ என்கிற உள்வாங்காத பலகைகளைக் கவனிக்க தனி அனுபவம் வேண்டும். அதுபோல பலகையில், பிரிண்ட், வண்ணம் சேர்ப்பது போன்றவற்றில் அளவு தப்பினால் அதை விற்பனைக்கு அனுப்ப முடியாது.

50 போர்டுகளை செய்ய 4 நாட்கள் ஆகும் என்றாலும் மாதத்துக்கு தொடர்ச்சியாக ஒரே அளவிலான போர்டுகளை செய்ய மாட்டோம். பந்தயங்கள் மற்றும் கிளப்புகளுக்கான போர்டுகளை செய்வதற்கு அதிக நாட்கள் எடுக்கும். ஏனென்றால் இந்த வேலை முழுக்க முழுக்க மனித உழைப்புதான். அப்போதுதான் தரம் கிடைக்கும்.

ஆனால் ஆண்டு முழுவதும் இதற்கான ஆர்டர்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக டிசம்பர் மாதமும், கோடை விடுமுறை மாதங்களிலும் அதிக அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும். பெரிய போர்டுகள் செய்யும் போது கழித்து கட்டும் பலகைகளை வைத்து சிறுவர்கள் விளையாடும் சின்ன போர்டுகளை செய்யலாம். மதுரை, கும்பகோணம், திருச்சி போன்ற கோவில் நகரங்களில் விற்பனை வாய்ப்புகள் அதிகம். வீட்டுக்குள் விளையாடுவதற்கு ஏற்றது மட்டுமல்ல, குடும்பத்துடன் விளையாடவும் தோதானது கேரம்போர்டு மட்டுமே. இப்போது நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றார்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x