Last Updated : 01 May, 2017 10:49 AM

 

Published : 01 May 2017 10:49 AM
Last Updated : 01 May 2017 10:49 AM

இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதா?

“தொழில் தொடங்க எளிதான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130-வது இடம்.’’ - உலக வங்கி அறிக்கை. இந்தியாவில் தொழில் நடத்தும் எவருக்கும் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்திருக்காது.

டெல்லியில் தொழில் முனைவோர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரை உடனடி யாக அலுவலகத்தை மூடிவிட்டு வருமாறு அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்தது அப்பகுதி யின் காவல்துறை அதிகாரி. ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தை திறந்து வைத்திருந்ததற்காக அதிகப் படியான பணத்தைத் தருமாறு கேட்டதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. வெளிநாட்டிலிருந்து திரட்டும் முதலீட்டில் காவல்துறைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று போலீஸாரே மிரட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல பிஎப் ரிட்டர்ன் தாக்கல் செய்வது தொடர்பாக ஒரு தொழில்முனைவோர் 6 மணி நேரம் தொழிலாளர் நலத்துறை அதிகாரியால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

வட மாநிலங்களில்தான் நிலைமை அப்படி என்றில்லை, சமீபத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்டேஸில்லா நிறுவனர் யோகேந்திர வசுபால் கூறிய வார்த்தை இது, ``தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் எப்போதும் பாக்கெட்டில் ஒரு பேஸ்ட், பிரஷ் வைத்திருங்கள். ஒரு வேளை நீங்கள் கண் விழிப்பது சிறையில் கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார். அவரது சொந்த அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்திய வார்த்தை. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளதோ, அந்த அளவுக்கு இந்தியாவில் தொழில் தொடங்குவதும், அதில் தொடர்ந்து நீடிப்பதும் சிரமம் என்பது புரியும்.

உலகில் தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் 2020-ம் ஆண்டில் 30 இடங்களுக்குள் இந்தியாவை இடம்பெறச் செய்வதே லட்சியம் என்று 2014 செப்டம்பர் 25-ல் `மேக் இன் இந்தியா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ரஷிய பிரதமர் விளாடிமிர் புதினும் இதேபோன்று தங்கள் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான பட்டியலை 120-லிருந்து 20 என்ற நிலைக்கு உயர்த்தப் போவதாகக் குறிப்பிட்டார் 2012-ம் ஆண்டில் 120-வது இடத்திலிருந்த ரஷியா இப்போது 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஆண்டில் அவரது இலக்கை எட்டி விடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 131-வது இடத்திலிருந்து இப்போது 130-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது ஒருபடி. ஒரு ஆண்டுக்கு ஒருபடி என்ற நிலையில் முன்னேறினால் 30 என்ற நிலையை எட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்?

2004-ம் ஆண்டிலிருந்து உலகில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது உலக வங்கி. மொத்தம் 190 நாடுகளில் இந்தியாவின் இடம் 130- ஆக உள்ளது.

மொத்தம் 10 காரணிகள் இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் பரிசீலிக்கப்படுகின்றன. 1. தொழில் தொடங்க உகந்த சூழல், 2. மின்சாரம் தடையின்றி கிடைப்பது, 3. தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவது, 4. ஆலைக்கான சொத்துகளை பதிவு செய்வது, 5. முதலீட்டாளர் நலன் காப்பது, 6. எளிதாக கடன் பெறுவது, 7. தேவையான பணியாளர்கள் கிடைப்பது, 8. நாடு களிடையிலான வர்த்தகத்தில் நிலவும் சூழல், 9. வரி விதிப்பு முறை, 10. ஒப்பந்த முறை மற்றும் திவாலானால் அதை தீர்ப்பது ஆகியனவாகும்.

10 காரணிகளுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.

இந்த வரிசையில் முதலிடத்தில் நியூஸிலாந்து உள்ளது. இதைத் தொடர்ந்து சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங், தென் கொரியா, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், மாசடோனியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

பிரிக்ஸ் நாடுகளின் நிலை

இந்தப் பட்டியலில் மிகவும் பின் தங்கியுள்ளது இந்தியாதான் என்று சொல்லத் தேவையில்லை. ரஷியா 40-வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 74-வது இடத்திலும், சீனா 78-வது இடத்திலும், பிரேசில் 123-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் (73), நேபாளம் (107), இலங்கை (110) என முன்னேறிய நிலையில் உள்ளன. பாகிஸ்தான் 144-வது இடத்திலும், வங்கதேசம் 176-வது இடத்திலும் உள்ளதைப் பார்த்து நாம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

மின் வசதி அளிப்பதில் இந்தியாவின் நிலை முன்னேறியுள்ளது. ஆனால் வரி விதிப்பு, ஒப்பந்த அமலாக்கத்தில் பின்தங்கியுள்ளதை உலக வங்கி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பொதுவாக அனைத்து நாடுகளிலும் சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிக்கை தெரிவிக்கிறது. 137 நாடுகளில் மிக முக் கியமான பொருளாதார சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இவை சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதாக உள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் வளரும் நாடுகளில் 283 வகையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மோடி அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் பலன் இந்த அறிக்கையில் தெரியவராமல் போகலாம். அடுத்த ஆண்டில் இந்தியாவின் நிலை கட்டாயம் பல படிகள் முன்னேறியிருக்கும் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு இவர்கள் கூறும் காரணம் ஜூன் 2016-க்கு முந்தைய நிலை அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான சீர்திருத்த நடவடிக்கைகள் இதற்குப் பிறகு செயல்வடிவம் பெற்றுள்ளதாக தங்களது வாதத்துக்கு வலு சேர்க்கின்றனர் இவர்கள்.

ஒரு ஆண்டுக்கு 40 புள்ளிகள் என்ற அடிப்படையில் முன்னேறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய தொழில் மேம்பாட்டு கொள்கைத் துறை செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார். இவரது இலக்கின்படி 2017-18-ம் ஆண்டில் 90-வது இடத்திலும், 2020-ல் 30-வது இடத்தையும் பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி பட்டியலிட்டுள்ள 10 காரணிகளில் முதலீட்டாளர் நலன் காப்பது என்ற பிரிவில் 13-வது இடத்திலும், மின் இணைப்பு அளிப்பதில் 26-வது இடத்திலும், கடன் கிடைப்பதில் 44-வது இடத்திலும் உள்ளது. மொத்தம் 190 நாடுகளை இந்த ஆய்வுக்குட்படுத்திய உலக வங்கி கட்டுமானத்துக்கு அனுமதி வழங்குவதில் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதை உணர்த்தியுள்ளது. இந்தப் பிரிவில் 185-வது இடத்திலும், தொழிலிலிருந்து வெளியேறுவதற்காக திவால் நோட்டீஸ் அளிப்பதில் 136-வது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேபோல சொத்துகளை பதிவு செய்வதில் 138-வது இடத்திலும், அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தில் 143-வது இடத்திலும், வரி செலுத்துவதில் 173-வது இடத்திலும் உள்ளது.

இந்தியா நிர்ணயித்த இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என்று டியோலைட் டொசே தொமாட்ஸு நிறுவனத்தின் பங்குதாரர் அரிந்தம் குஹா தெரிவிக்கிறார். ஏனெனில் மாற்றங்களைக் கொண்டு வர மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். 10 காரணிகளை ஒருங்கே செயல்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 272.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எளிதாக தொழில் தொடங்குவதற்கேற்ற சூழலை உருவாக்குவது தொடர்பான விழிப்புணர்வுக்கு இத்தொகை செலவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 25 துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மேக் இன் இந்தியா திட்டத்தை பரவலாக்கவும் மத்திய அரசு இத்தொகையை ஒதுக்கியுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு மேற்கொள் ளும் நடவடிக்கைகள், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது குறித்த மதிப்பீடு களை தொழில் முதலீடு மற்றும் மேம்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அளித்து வருகிறது. அரசின் பொருளதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த தகவலையும் இத்துறை பதிவு செய்து மத்திய அரசுக்கு அளிக்கிறது.

இது மட்டுமல்லாமல் தொழில் சார்ந்த பிரச்சினை களை உடனுக்குடன் தீர்க்க விரைவு நீதி மன் றங்களை அரசு உருவாக்கி வருகிறது. வழக்கு களை நீண்ட நாள்களுக்கு தள்ளிப்போடாமல் உடனுக்குடன் தீர்ப்பு அளிப்பது மற்றும் இணைய நீதிமன்றங்களை உருவாக்கி அதில் மின்னணு புகார்களுக்கு தீர்வு அளிப்பது குறித்த முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

உலக வங்கியின் தர வரிசையில் முன்னேற அரசு பல திட்டங்களை வகுக்கலாம். ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில்தான் சவால்கள் உள்ளன. இல்லையென்றால் தொழில் முனைவோர் தற்போது சந்தித்து வரும் சிக்கல்களுக்கு தீர்வுகள் எட்டப்படாமலேயே போகும். அதாவது அலுவலகத்தை மூடச் சொல்லும் போன்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x