Published : 12 Jun 2017 10:50 AM
Last Updated : 12 Jun 2017 10:50 AM

இந்தியாவில் அறிமுகமாகிறது நிசான் லீஃப்!

ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை இனி நிர்ணயிக்கப் போவது பேட்டரி வாகனங்கள்தான் என்ற கருத்து பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும், அனைத்து வாகன உற்பத்தியாளர்கள் மத்தியிலும் வலுவாக பதிந்துவிட்டது.

பெட்ரோல், டீசல் விலையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை, சூழல் பாதுகாப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு பேட்டரி வாகனங்கள் உருவாக்கம் அதிகரித்து வருகிறது.

கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனம் தனது பிரபலமான பேட்டரி காரான லீஃப் மாடல் காரை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை விட பேட்டரியில் ஓடும் கார்களின் விலை அதிகம். அதிலும் குறிப்பாக நிசானின் லீஃப் மாடல் காரின் விலை அதிகமே. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த கார் சர்வதேச அளவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பொருளின் விலை மிக முக்கியமான காரணியாகும். இதை நிசானும் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் முதல் கட்டமாக மிகக் குறைந்த எண்ணிக்கையில் லீஃப் கார்களை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு விடத் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இறக்குமதி செய்து அவற்றை சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் ஓட்டிப் பார்க்க அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளது. பேட்டரி காரின் சாதக அம்சங்களை வாடிக்கையாளருக்கு உணர்த்துவதே இந்நிறுவனத்தின் முதல் கட்ட நோக்கமாகும்.

சோதனை அடிப்படையில் லீஃப் கார்கள் வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் களமிறக்கப்பட்டுள்ளன. இங்கு இவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் பேட்டரி கார்கள் அதிகம் புழங்குவதற்கேற்ற கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்ற குறைபாடு உள்ளது. ஆனால் தற்போது சூழல் பாதுகாப்பு வாகனங்களின் அவசியத்தை உணர்ந்து அதற்கேற்ப கொள்கைகளை வகுத்துள்ளது அரசு.

பேட்டரி கார் என்றாலே இந்தியாவில் ரேவா நிறுவனத் தயாரிப்புகள்தான் அனைவரது நினைவுக்கும் வரும். 16 ஆண்டுகளாக பேட்டரி கார்களைத் தயாரித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மெய்னி குழுமத்திடமிருந்து மஹிந்திரா குழுமம் 2010-ம் ஆண்டு வாங்கியுள்ளது. 7 ஆண்டுகளில் இந்நிறுவனம் இ20 மற்றும் இ-வெரிடோ மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர பேட்டரியில் இயங்கும் இ-சுப்ரோ வேனையும் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 1,100 கார்களை விற்பனை செய்துள்ளது.

2010-ம் ஆண்டிலிருந்து பேட்டரி கார்களை தயாரித்து வரும் லீஃப் நிறுவனம் இதுவரை சர்வதேச சந்தையில் 2.60 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

லீஃப் மாடல் காருடன் இ-என்பி 200 என்ற வேனையும் இந்தியாவில் நிசான் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

முன்னதாக சென்னையில் உள்ள நிசான் ஆலையில் லீஃப் கார்களை தயாரித்து பூடானுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தையும் இந்நிறுவனம் பரிசீலித்தது. ஆனால் இங்கு தயாரித்து ஏற்றுமதி செய்வதை விட பிற வெளிநாட்டு ஆலையிலிருந்து பூடானுக்கு இறக்குமதி செய்து விற்பது எளிதானது என்பதால் அந்த முடிவை நிசான் கைவிட்டுவிட்டது.

இப்போது மத்திய அரசு பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதைத் தொடர்ந்து இந்தியச் சந்தையில் தனது கவனத்தை திருப்பியுள்ளது நிசான்.

இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80% இறக்குமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்காண்டு எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. 2014-15-ம் ஆண்டில் 15,540 கோடி டாலர் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ளது.

பேட்டரி கார்கள், வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க முடியும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் பேட்டரியால் இயங்கும் வகையில் செயல்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளோடு நிசானின் தயாரிப்பான லீஃப் வருகை இந்த இலக்கு நோக்கிய பயணத்துக்கு துணை புரியக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x