Published : 18 Jul 2016 10:57 AM
Last Updated : 18 Jul 2016 10:57 AM

இந்தியச் சந்தையில் நுழைய தீவிரம் காட்டும் சீனா

இந்தியாவில் சீன தயாரிப்புகள் ஆக்கிரமிக்காத துறையே இல்லை எனலாம். இப்போது ஆட்டோமொபைல் துறையிலும் சீன தயாரிப்புகள் அதிக அளவில் வர உள்ளன. இந்தியாவில் ஆலைகளை அமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் சீன நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

குறைந்தபட்சம் நான்கு சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைக்கலாம் என தெரிகிறது.

இந்தியர்களிடையே கார் பயன்படுத்தும் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றமே சீன நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள் ளன. சிறிய ரகக் காரிலிருந்து பெரும் பாலானோர் எஸ்யுவி-க்களுக்கு மாறுவதும் சீன நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளன.

சாங்கன் ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன், டாங்பெங் மோட்டார் கார்ப்பரேஷன், பிஒய்டி கார்ப்பரேஷன் மற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் ஆலை தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. ஆந்திரம், குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் ஆலை அமைப்பதற்காக இவை பேச்சு நடத்தி வருகின்றன. இந்த நான்கு நிறுவனங்களில் ஓரிரண்டு நிறுவனங் கள் ஆலை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சிறிய ரகக் கார்களிலிருந்து எஸ்யுவி எனப்படும் பன்னோக்கு கார்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய மாற் றம் சீன நிறுவனங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தொடர்ந்து ஓராண்டாக கார் விற்பனை ஏறுமுகத்தில் உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 2.23 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 35 சதவீத வளர்ச்சியாகும்.

சாங்கன் ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளனர். இந்நிறுவனம் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

2018-ல் நடைபெற உள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் கார்களை உற்பத்தி செய்து இடம்பெறச் செய்யும் நோக்கில் ஒரு சீன நிறுவனம் தீவிரமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நிறுவனங்கள் பேட்டரி கார்களைத் தயாரித்து விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளன. இத்தகைய பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு அரசு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நிறுவனங்கள் பேட்டரி பஸ் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது. தொடக்கத்தில் முழுமை யான உற்பத்தியை இங்கு மேற்கொள் ளாமல் சீனாவில் உள்ள தாய் நிறுவனங் களிலிலிருந்து உதிரி பாகங்களைப் பெற்று இங்கு அசெம்பிள் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளன.

சீன நிறுவனங்களின் வரவு கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே கடுமை யான போட்டியை உருவாக்குவது நிச்ச யம். வழக்கம்போல சீன தயாரிப்புகளின் விலை குறைவாக இருக்கும். குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை சீன நிறுவனங்கள் அளித்து இந்தியாவில் காலூன்றும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x