Published : 13 Feb 2017 10:13 AM
Last Updated : 13 Feb 2017 10:13 AM

இந்தியச் சந்தைக்கு வருகிறது டெஸ்லா கார்

உலக அளவில் பேட்டரி கார் என்றாலே டெஸ்லா கார்கள் மிகவும் பிரபலம். ரேஸ் கார்களுக்கு இணையான வேகத்தில் செல்லக் கூடிய கார்களை தயாரித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது டெஸ்லா. இத்தகைய கார்கள் இந்தியச் சந்தைக்கு இந்த ஆண்டு வர உள்ளன. இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தியச் சந்தையில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்தப்போவதாக நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் எஸ்யுவி, செடான் மாடல் கார்களைத் தயாரிக்கிறது. இந் நிறுவனத்தின் மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் 3 ஆகிய கார்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானவையாகும்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் 3 கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். சர்வதேச அளவில் மிக அதிக அளவில் விற்பனையாகும் இந்த காரின் விலை 35 ஆயிரம் டாலராகும் (சுமார் ரூ.23.40 லட்சம்).

இந்த காரை வாங்குவதற்கு ஏற்கெனவே சில இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக ஆயிரம் டாலர் முன்தொகையையும் செலுத்தியுள்ளனர். பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா, வென்ச்சர் கேபிடலிஸ்ட் மகேஷ் மூர்த்தி, கோகி எனும் பிட்னஸ் நிறுவன நிறுவனர் விஷால் கோண்டல், ஊனிக் எனும் ஆன்லைன் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுஜாயத் அலி ஆகியோர் மாடல் 3 காருக்காக 1,000 டாலர் செலுத்தி முன் பதிவு செய்துள்ள குறிப்பிடத்தக்க சிலராவர்.

அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 2020-ம் ஆண்டில் இந்திய சாலைகளில் 60 லட்சம் பேட்டரி வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதே தேசிய பேட்டரி வாகன இலக்காகும்

இந்த இலக்கை எட்டுவதற்காக ஃபேம் என்ற கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் மாருதி சுஸுகி இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு இந்தியா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்திருந்தன. ஆனால் இந்த கூட்டமைப்பிலிருந்து ஃபோர்டு நிறுவனமும், மாருதி நிறுவன மும் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த கூட்டமைப்பு சிதைந்துபோனது.

பேட்டரி கார் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்கித்தர வேண்டும். குறிப்பாக பேட்டரி கார்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக சார்ஜ் ஏற்றும் மையங்களை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் இப்போதைக்கு மஹிந்திரா நிறுவனத்தின் இ20 பேட்டரி கார்கள்தான் விற்பனையில் உள்ளன.

அண்டை நாடான சீனா பேட்டரி கார் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் அதற்குரிய சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைப் போல இந்தியாவும் செய்ய வேண்டும். அப்போதுதான் பேட்டரி கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். மேலும் பேட்டரி வாகனங்களுக்கு அரசு மானியம் அளித் தால் இவற்றின் விற்பனை மேலும் அதி கரிக்கும். அப்போதுதான் நிர்ணயித்த இலக்கை அரசு எட்ட முடியும்.

டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதில் உள்ள ஆட்டோ பைலட் முறை இந்தியச் சாலைகளுக்கு சரிவராது. ஏனெனில் இங்கு அனைத்து பகுதிகளிலும் இன்டர்நெட் இணைப்பு கிடையாது. இன்டர்நெட் இணைப்பு இல்லையெனில் நேவிகேஷன் முறை செயல்படாது. அதேபோல ஆட்டோ பைலட் முறை செயல்பட வாய்ப்பு குறைவு.

மேலும் இங்கு இன்னமும் டிரைவர் தேவைப்படாத கார்களுக்கு அனுமதி இல்லை. அவ்விதம் இயக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மேலும் இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவை. திடீரென பாதை மாறுவது, அசுர வேகத்தில் செல்வது, கவனமின்றி வாகனங்களை ஓட்டுவது ஆகியன இங்கு அதிகம். மேலும் சிக்னலை மீறுவது இங்கு சர்வ சாதாரணம். இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் வகையில் தனது காரின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயமும், நிர்பந்தமும் டெஸ்லாவுக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x