Last Updated : 27 Feb, 2017 12:43 PM

 

Published : 27 Feb 2017 12:43 PM
Last Updated : 27 Feb 2017 12:43 PM

இணைந்தது பிரிவதற்கா?

பட்ஜெட் தாக்கல் செய்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால் இப்போது நிதி அமைச்சர் ஜேட்லியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர்.

ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யும் முறையை முதல் முறையாக ஜேட்லி மேற்கொண்டதால் இந்த பிரச்சினை உருவாகவில்லை. ரயில்வே அமைச்சகத் துக்கு ஒதுக்கீடு கொடுத்தபிறகு ரயில்வேத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள் அரசுக்கு அளிக்கும் டிவிடெண்டை (ஈவுத் தொகை) நிதி அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும் என்று அருண் ஜேட்லி உத்தரவிட்டதுதான் இருவருக்குமிடையே மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது.

பொது பட்ஜெட்டோடு ரயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்தால் டிவிடெண்டை அரசுக்கு அளிக்க வேண்டியதில்லை. அதை ரயில்வே நிர்வாகமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால்தான் பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்ய ரயில்வே அமைச்சகம் ஒப்புக் கொண்டது.

ரயில்வே துறையின் கீழ் 13 பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக அரசுக்கு அளிக்கும் டிவிடெண்ட் வரும் நிதி ஆண் டில் ரூ. 850 கோடி இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இதை ரயில்வேயின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம் என்ற ரயில்வே அமைச்சரின் திட்டம் இப்போது கேள்விக் குறியாகியுள்ளது. இதுதான் இரு அமைச்சர்களிடையிலான உரச லுக்குக் காரணமாகும்.

ஆண்டுதோறும் ரயில்வே அமைச் சகம் டிவிடெண்டுகள் என்று அழைக் கப்படும் லாப ஈவை நிதியமைச்சகத் துக்குக் கொடுத்து வந்தது. இந்த ஈவுத் தொகையானது மத்திய அரசு, ரயில்வே துறையில் செய்த முதலீடு மீதான வருவாயாகும். ரயில்வே துறைக்குத் தரப்படாவிட்டால் இது மத்திய அரசின் கணக்கில் மூலதனமாக இருந்து, அதன் மீது வருவாயை ஈட்டித்தந்திருக்கும். இந்த மூலதனமானது மத்திய அரசால் ரயில்வே துறைக்குத் தந்த நிரந்தரக் கடனாகவும் கருதப்பட்டது. எனவே இந்தக் கடனுக்கு வட்டி செலுத்தும் வகையில்தான் லாப ஈவைத் தர வேண்டியிருந்தது. இப்போது ரயில்வே தனி நிறுவனம் அல்ல, மத்திய அரசின் ஒரு துறை. எனவே லாப ஈவு தர வேண்டியதில்லை. அதே சமயம் ரயில்வே துறையிடம் உள்ள அரசுத்துறை நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மத்திய அரசுக்குத்தான் தர வேண்டும், தானே வைத்துக்கொள்ளக் கூடாது என்று நிதியமைச்சகம் ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக் கிறது. இந்தக் கடிதம்தான் ரயில்வே அமைச்சரை மேலும் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.

ரயில்வே அமைச்சகம் ஆண்டு தோறும் ரூ.9 ஆயிரம் கோடி தொகையை லாப ஈவுத் தொகையாக நிதி அமைச் சகத்துக்கு அளித்துவந்தது. ஆனால் அதை இனி அளிக்கத் தேவையில்லை. பட்ஜெட் இணைப்பு காரணமாக இந்த பலன் ரயில்வே அமைச்சகத்துக்குக் கிடைத்துள்ளது. மத்திய அரசு நிறுவனங் களில் ஒன்றாக ரயில்வே அமைச்சகம் இணைக்கப்பட்டாலும் அதன் நிதி சுதந்திரம் மற்றும் செயல்பாட்டில் சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று ஏற்கெனவே இணைப்புக்கு முன்பே மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ரயில்வே துறையின் வருமானம், செலவினம் ஆகியவற்றில் சுதந்திரமாக செயல்பட ஒப்பந்தம் வழி வகை செய்யும் என மத்திய அரசுக்கு கடந்த 13-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் கான்கார், சிஆர்ஐஎஸ், டிஎம்ஆர்சி, இர்கான், ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி, கேஆர்சிஎல், எம்ஆர்விசி, ஆர்விஎன்எல், ஆர்சிஐஎல், ஆர்ஐடிஇஎஸ், டிஎப்சிசிஐஎல், பர்ன் ஸ்டாண்டர்டு அண்டு பிரைத்வெய்ட் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்களில் கடந்த நிதி ஆண்டில் (2015-16) அதிக டிவிடெண்ட் வழங்கிய நிறுவனங்கள் கன்கார் (ரூ. 263 கோடி), இர்கான் (ரூ. 168 கோடி), ஐஆர்எப்சி (ரூ. 152 கோடி). இந்நிறுவனங்களின் டிவிடெண்ட் தொகையை அரசுக்கு அளித்தால் அதன் வருமானத்தில் ரூ. 850 கோடி அளவுக்குக் குறையும் என்பதே ரயில்வே அமைச்சரின் குற்றச்சாட்டாகும்.

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் டோடு இணைத்துவிட்டதால் ரயில்வேத் துறையின் வளங்களைக் கண்டறிவ தோடு அதன் செலவுக்கும், வரவுக்கும் இடையில் நிலவும் இடைவெளியே நிரப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கு (நிதி அமைச்சகம்) உள்ளது. அந்த வகையில் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் லாப ஈவுத் தொகையை நிதி அமைச்சகத் துக்கு அளிக்க வேண்டும் என்று நிதித்துறையினர் வாதிடுகின்றனர்.

ஜேட்லி அளித்த மற்றொரு அதிர்ச்சி

டிவிடெண்ட் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, அடுத்ததாக ரயில்வே துறையின் 4 பொதுத்துறை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடப் போவதாக ஜேட்லி அறிவித்துள்ளார். ரயில்வே வாரிய உறுப்பினர்களை மட்டுமல்ல ரயில்வே அமைச்சரையும் இந்த அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துறையின் அமைச்சர், நிர்வாகிகள் எவரிடமும் கலந்து ஆலோசிக்காமல் ஐஆர்சிடிசி, ஐஆர்எப்எல், இர்கான் ஆகிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்படும் என அறிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் கீழ் வரும் பொதுத் துறை நிறுவனங்களை ஒன்றாக சேர்த்து ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கலாம் என ரயில்வே அமைச்சகம் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல், பங்குச் சந்தையில் இறங்கும் அறிவிப்பை வெளி யிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார் ஜேட்லி.

ஒதுக்கீடு அதிகம்

பொது பட்ஜெட்டோடு இணைக்கப் பட்டு விட்டதால் ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் குறையும் என்ற எதிர்பார்ப்பை ஜேட்லி போக்கிவிட்டார். இத்துறைக்கு ரூ. 1.31 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் மத்திய அரசின் பட்ஜெட் உதவி ரூ. 55 ஆயிரம் கோடியாகும். ஆளில்லா லெவல் கிராசிங்கை மூன்று ஆண்டுகளில் முற்றிலும் நீக்க முடிவு, பயோ-கழிவறை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களையும் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது தவிர ரூ.1 லட்சம் கோடி தொகை நிதியத்தை ஐந்தாண்டுகளில் உருவாக்க முடிவு செய்துள்ளார். 7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய ஒளி மின்சாரம், 25 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கம், 70 திட்டப் பணிகளை தனியாருடன் சேர்ந்து மேற்கொள்ள முடிவு 3,500 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை ஆகியன பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சமாகும்.

சரக்கு போக்குவரத்து மூலமான வரு மானம் ரூ.1,18,998 கோடி, பயணிகள் கட்டணம் மூலமான வருமானம் ரூ.50,125 கோடி. ஆக ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1,89,498 கோடி. ரயில்வே துறையும் நிதி நெருக்கடியில்தான் உள்ளது.

ரயில் தண்டவாளங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் இணையாக இருந்தால் மட்டுமே ரயில் பயணம் சீராகும். ரயில் அமைச்சகத்தை இயக்கத் தேவைப் படும் நிதியை அளிக்கும் நிதி அமைச் சகமும் இதே போல சுமுகமாக இருந் தால்தான் ரயில்வே துறை சிறக்கும். இதை ஜேட்லியும், சுரேஷ் பிரபுவும் உணர்வார்களா?

- தொடர்புக்கு ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x