Published : 06 Mar 2017 10:09 AM
Last Updated : 06 Mar 2017 10:09 AM

ஆபத்தான காற்று பை: தெரிந்தே பயன்படுத்திய நிறுவனங்கள்

கார்களில் விபத்து ஏற்பட்டால் உயிர் காக்கப் பயன்படும் `ஏர் பேக்’ எனப்படும் காற்றுப் பைகள். கார் விபத்தில் சிக்கினால் ‘ஏர் பேக்’ விரிவடைந்து பயணிகளின் உயிரைக் காக்கும். ஆனால் இத்தகைய காற்றுப் பைகள் சரிவர செயல்படவில்லை என ஜப்பானின் டகடா நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் காற்றுப் பைகள் பொறுத்தப்பட்ட கார்கள் விபத்தை சந்தித்தபோது அதிலிருந்து புறப்பட்ட ஆணி போன்ற கூர்மையான பாகங்கள், பயணிகளின் உயிரை பறித்துவிட்டது.

உயிரைக் காப்பாற்றும் என நினைத்து பொறுத்தப்பட்டிருந்த காற்றுப் பையே இப்போது எமனாக மாறிவிட்டது. இத்தகைய பிரச்சினைக்குரிய ஏர் பேக்குகளைத் தயாரித்தது டகாடா நிறுவனம்தான்.

இந்த நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அது நடைபெறுவது ஒருபுறம் என்றாலும், டகடா ஏர் பேக்குகள் குறைபாடு உடையவை என தெரிந்தே அவை விலை குறைவு என்பதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்தியுள்ளன என்ற விவரம் தெரியவந்துள்ளது. பணத்தை மிச்சப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக இத்தகைய தரக்குறைவான காற்றுப் பைகளை ஹோண்டா, டொயோடா, நிசான், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளன.

டகடா நிறுவனத்தின் காற்றுப் பைகள் பாதுகாப்பாற்றவை என்பதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் நன்கு உணர்ந்துள்ளன. இருந்தாலும் இதை பல லட்சக்கணக்கான வாகனங்களில் பொறுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டகடா நிறுவனம் மீது டெட்ராய்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 100 கோடி டாலரை அபராதமாக அளிக்க டகடா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் டகடா காற்றுப் பை சரியாக விரிவடையாததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 180. இந்த விவகாரம் பெரிதானவுடன் ஏறக்குறைய 4 கோடி வாகனங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் திரும்பப் பெற்றன. சுமார் 6.9 கோடி டகடா காற்றுப் பைகள் நீக்கப்பட்டு வேறு காற்றுப் பைகள் பொறுத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் கார்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஜப்பானைச் சேர்ந்த டகடா நிறுவனம் தனது காற்றுப் பைகளில் அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்துகிறது. கார் விபத்துக்குள்ளானால் உடனடியாக விரிவடைவதற்காக இந்த வாயுவை இந்நிறுவனம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வாயு நிரப்பப்பட்ட காற்றுப் பை நீண்ட காலமாக விரிவடையாமலிருந்தால், அந்த வாயு கெட்டிப்பட்டுவிடும். இது விபத்தின்போது கூர்மையான பொருள்களாக வெளிப்பட்டு பயணிகளைக் காயப்படுத்தியுள்ளது. 2009-ம் ஆண்டுதான் இந்த விவகாரம் முதலில் வெளியானது. அப்போது பயணிகளின் பாதுகாப்பு கருவி பயணியின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டதாக கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் டகடா காற்றுப் பைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சோதித்து பார்த்துள்ளன. அப்போது இந்த காற்றுப் பைகள் உயிரைக் காக்க உதவாது என்ற உண்மையை உணர்ந்துள்ளன என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் டகடா நிறுவனம்தான் உண்மையை மறைத்து தங்களிடம் காற்றுப் பைகளை விற்றுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இது சரியான தகவல் அல்ல என்றும், ஏற்கெனவே நிறுவனங்களுக்கு டகடா நிறுவன காற்றுப் பையின் தரம் குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் தெரியும் என்று அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிஎம்டபிள்யூ, நிசான், டொயோடா நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. ஹோண்டா நிறுவனம் பதில் அறிக்கை தயாரித்து வருவதாகக் கூறியுள்ளது. ஃபோர்டு நிறுவனம் மட்டும் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்புக்கு காரைத் தயாரிக்கும் நிறுவனங்கள், உயிரைக் காக்கும் முக்கியமான காற்றுப் பை விஷயத்தில் எந்த அளவுக்கு அலட்சியமாக இருந்துள்ளன என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருப்பினும், நிறுவனங்கள் தங்களுக்குள்ள பொறுப்பை உணராதவரை, பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x