Last Updated : 22 May, 2017 09:19 AM

 

Published : 22 May 2017 09:19 AM
Last Updated : 22 May 2017 09:19 AM

ஆட்டோமொபைல் துறையும் நியூமராலஜியும்

பெயர் ராசி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஆட்டோமொபைல் துறையையும் அது பிடித்து ஆட்டுகிறது.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்பின் பெயர் இறுதியில் `ஓ’ வில் முடிய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. ஆங்கில வார்த்தை ஓ-வில் முடிந்தால் அந்தத் தயாரிப்பு ஓஹோவென்று புகழ் பெறும் என்று நிறுவனங்கள் நினைப்பது கூட காரணமாக இருக்கலாம்.

மஹிந்திரா பொலேரோ (Bolero)

சாகசப் பயணங்களுக்கு மிகச் சிறந்தது. 2000-வது ஆண்டில் முதல் தலைமுறை பொலேரோவை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் பியூஜியாட் நிறுவனத்தின் 2.5 லிட்டர் இன்ஜினைக் கொண்டதாக இது வந்தது. பிறகு நிறுவனம் இரண்டாம் தலைமுறை பொலேரோவுக்கு இன்ஜினை தயாரிக்கத் தொடங்கியது. இந்நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் இதுவும் ஒன்று.

மஹிந்திரா நிறுவனம் ஓ-வில் மிகவும் உறுதியாக உள்ளது. இரு சக்கர வாகனம் மட்டுமின்றி வர்த்தக ரீதியிலான இலகு ரக வாகனங்களின் பெயரும் ஓ-வில் முடியும்படி பெயரைத் தேர்வு செய்கிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ (Scorpio),மஹிந்திரா ஸைலோ (Xylo),மஹிந்திரா குவான்டோ (Quanto), கேயுவி100 (KUV 1OO), டியுவி 300 (TUV 3OO), எக்ஸ்யுவி 500 (XUV 5OO என இந்நிறுவனத்தின் ஓ வில் முடியும் வாகனங்களின் பட்டியல் நீளும்.

மஹிந்திரா வெரிடோ (Verito):

2007-ம் ஆண்டு ரெனால்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்நிறுவனம் தயாரித்த முதலாவது கார் லோகன் ஆகும். இரு நிறுவனங்களிடையிலான கூட்டு முறிந்த பிறகு மஹிந்திரா தனித்து 2010-ம் ஆண்டில் வெளியிட்ட கார் வெரிடோ. இதையடுத்து வைப் எனும் மாடலையும் அடுத்து மஹிந்திராவின் எலெக்ட்ரிக் பிரிவு இ-வெரிடோ பேட்டரி காரையும் வெளியிட்டுள்ளது.

ஹோண்டா மொபிலியோ (Mobilio)

நடுத்தர ரக மாடலில் (எம்பிவி) 7 பேர் பயணிக்கக் கூடியதாக ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. சர்வதேச அளவில் 2001-ம் ஆண்டு அறிமுகமானது. 2008-ல் ஹோண்டா பிரீட் அறிமுகமாகும் வரை இது சந்தையில் முன்னணியில் விளங்கியது. இந்த மாடலை 2014-ம் ஆண்டில் மீண்டும் அறிமுகம் செய்தது ஹோண்டா.

ஹோண்டா பிரையோ (Brio):

பிரையோ என்றால் இத்தாலிய மொழியில் உற்சாகம் என்று அர்த்தமாம். இந்தோனேசியாவில் இது சத்யா என்ற பெயரில் விற்பனையாகிறது. 2010-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இது விற்பனைக்கு வந்தது. 2016-ல் இது சிற்சில மாறுதல்களுடன் இந்தியச் சந்தையில் மேம்படுத்தப்பட்ட ரகமாக அறிமுகமானது.

நிசான் டெரானோ (Terrano)

ரெனால்ட் டஸ்டர் பிளாட்பாரத்தில் இது தயாராகிறது. 2014-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஒரே எஸ்யுவி மாடல் இதுவாகும். கடந்த மார்ச் மாதம் இதன் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. எக்ஸ்-டிரைல் ஹைபிரிட் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் ஆமியோ (Ameo)

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முதல் முறை யாக சி பிரிவில் இந்தியாவுக்கென தயாரித்த கார். இந்திய இதயத்துடிப்போடு ஜெர்மன் பொறி யாளர்களால் உருவாக்கப்பட்டது என்று இந் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஓ-வில் முடியும் வகையில் வெளியிட்ட மூன்றாவது வாகனம். ஏற்கெனவே போலோ, வென்டோ என்ற பெயரில் இந்நிறுவனம் கார்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ (Figo)

இந்த காருக்கு முதலில் நிறுவனத்துக்குள் சூட்டப்பட்ட பெயர் பி562. சென்னை மறைமலை நகரில் உள்ள ஆலை மற்றும் குஜராத்தில் சனந்த் பகுதி ஆலையில் இந்தக் கார் தயாராகிறது. மார்க் 5 ஐரோப்பிய மாடல் ஃபோர்டு பியஸ்டாவைப் போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டிலிருந்து இது பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாருதி பலேனோ (Baleno)

முதலில் பலேனோ மாடல் கார்கள் செடான் மாடலாக அறிமுகமானது. கடந்த ஆண்டு இது ஹாட்ச்பேக் மாடலாக மாற்றப்பட்டது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் 5 முன்னணி மாடல்களில் இதுவும் ஒன்று. பலேனா ஆர்எஸ் மாடலில் முதல் முறையாக 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜின் உள்ளது சிறப்பம்சமாகும்.

செலரியோ (Celerio)

செலரியோ என்ற பெயரிலான காரில் 6 மாடல்கள் வந்துள்ளன. இதன் உருவாக்கத்துக்கு மாருதி சுஸுகி ரூ. 900 கோடியை முதலீடு செய்துள்ளது. இத்தொகை சிறிய ரக டீசல் என்ஜின் உருவாக்கத்துக்கு செலவிடப்பட்டுள்ளது.

ஆல்டோ (Alto):

இதுவரையில் அதிக எண்ணிக்கையில் அதா வது 30 லட்சம் கார்கள் இந்திய சாலைகளில் ஓடுகின்றன. ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 என்று இரண்டு மாடல்களில் இது கிடைக்கிறது. ஆல்டோ கே10 மாடலில் இந்நிறுவனம் உருவாக்கிய ஏஜிஎஸ் தொழில்நுட்பத்திலான எம்எம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

மாருதி எக்கோ (Eeco):

இந்த கார் 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி வெர்சா மாடலின் மேம்படுத்தப்பட்ட ரகமாக இது அறிமுகமானது. இந்த காரை அறிமுகம் செய்தபோது சிறந்த விழாக்களுக்கு சிறந்த கார் இது என விளம்பரம் செய்தது. ஆனால் பெரும்பாலும் இது வர்த்தக உபயோகத்துக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது

டாடா டியாகோ (Tiago)

இந்த காருக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் ஜிகா (Zica). ஜிகா வைரஸ் நோய் உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே, இந்த காருக்கு டியாகோ என பெயரிடப்பட்டது. டாடா கைட் புராஜெக்ட் என்பதன் சுருக்கமாக டியாகோ என பெயரிடப்பட்டது. இந்த காரின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில் லயோனல் மெஸ்ஸியின் மகனின் பெயர் டியாகோ என்பதாகும்.

டாடா நானோ (Nano):

டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார். அனைவருக்கும் கார் வாங்குவது வசப்பட வேண்டும் என்ற நோக்கில் போடப்பட்ட திட்டம். இப்போது இந்த கார் உற்பத்தியைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற சிக்கல் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் இண்டிகோ மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. டியாகோவும் குறிப்பிடத்தக்க சந்தையைப் பிடித்துள்ளது. ஆனால் நானோ!.

பெயர் மட்டுமே வாகனத்தை பிரபலமடையச் செய்துவிடாது. ஓ-வில் முடியும் பெயருடைய வாகனங்கள் அனைத்தும் ஓஹோவென்று புகழ்பெற்று ஓடவில்லை. வெரிடோ, நானோ போன்ற விதிவிலக்குகளும் உண்டு.

எம். ரமேஷ், ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x