Last Updated : 14 Dec, 2015 10:32 AM

 

Published : 14 Dec 2015 10:32 AM
Last Updated : 14 Dec 2015 10:32 AM

ஆட்டோமொபைல் ஆலைகளில் `எந்திரன்’!

குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது அந்த கார் தயாரிப்பு ஆலை. உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. ஆலையின் உற்பத்தி குறித்த சோதனையை உயர் அதிகாரிகளுக்கு விளக்க முடிவு செய்தனர் பணியாளர்கள்.

ஒரு குறிப்பிட்ட பகுதி உற்பத்தி செய்யும் இடம். அந்தப்பகுதியில் ராணுவ அணி வகுப்பு போல காரின் உதிரி பாகத்தைச் சுற்றி நிறைய பேர். அனைவருமே ஒரு யோகியைப் போல பணியில் கவனமாய் இருந்தனர். காரின் கதவுகளை பொறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் 84 விநாடிகளில் ஒரு முழு காரின் மேல் பகுதியை முடித்தனர். நிறுவன அதிகாரிகளுக்கு வியப்பு மேலிடவில்லை. ஆனால் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த பலருக்கும், செய்தியாளர்களுக்கும் மிகுந்த வியப்பு.

காரணம் பணியில் ஈடுபட்டிருந்த எவருக்கும் துளிக்கூட வியர்க்கவில்லை. கண்ணுக்கு குளிர் கண்ணாடி அணிந்திருக்கவில்லை. கைகளில் கிளவுஸ் கிடையாது. அவர்கள் யாரிடமும் சிறிது கூட சோர்வு காணப்படவில்லை. ஆம் நீங்கள் நினைப்பது முற்றிலும் சரி. கார் உருவாக்கத்தில் முழுக்க முழுக்க வெல்டிங், ஃபிட்டிங் என அனைத்து பணிகளையும் செய்தது சாதாரண மனிதன் அல்ல. எந்திர மனிதன். ஆம் ரோபோவேதான்.

ஜப்பானில் ஒரு ஹோட்டலில் பணியாளராக ரோபோவை பயன்படுத்தும் செய்திகள் சமீபத்தில் வந்தன. ஆனால் மனிதர்களுக்கு மாற்றாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட எந்திர மனிதன் இப்போது ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறான்.

1950-களின் பிற்பாதியில்தான் எந்திர மனிதன் உருவாக்க சிந்தனை பிறந்தது. மிகவும் கடினமான பணிகளில் எந்திர மனிதனை பயன்படுத்தலாம் என்ற சிந்தனையின் உருவாக்கத்தால் பிறந்த எந்திர மனிதன் ஆரம்பத்தில் ஆபத்தான பணிகளான ரசாயன கழிவுகளை அகற்றுவது, அணு மின் நிலையங்களில் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு அதிகம் உபயோகப்படுத்தப்பட்டான்.

1960-களின் பிற்பாதியில் ஆட்டோமொபைல் துறையில் வெல்டிங் செய்வதற்கும், அதிக எடையுள்ள உலோக பாகங்களை தூக்குவதற்கும் கொண்டுவரப்பட்டான். ஆனால் இப்போது கார் உருவாக்கத்தில் பெரும்பகுதியை எந்திர மனிதனே ஆக்கிரமித்துள்ளான்.

அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் சென்னையைத் தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலத்தில் தொடங்கியுள்ள புதிய ஆலையில் 453 ரோபோக்களை பயன்படுத்தியுள்ளது. ஷாப் புளோர் எனும் பகுதியில் முழுக்க முழுக்க ரோபோக்கள்தான். இந்தத் தளத்தில் 90 சதவீத பணிகளை நிறைவேற்றுவது எந்திர மனிதர்கள்தான்.

ஆட்டோமொபைல் துறையில் ரோபோக்களின் புழக்கம் தற்போது அதிகரித்து வருவதன் வெளிப்பாடுதான் இது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள தனது ஆலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 123 ரோபோக்களை உபயோகப்படுத்தி வருகிறது.

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் செயல் பட்டுவரும் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தனது ஆலையில் 400 ரோபோக்களை பயன்படுத்துகிறது. இந்நிறுவனத்தின் முக்கியமான பகுதிகளை ரோபோக்களே ஆக்கிரமித்துள்ளன. இதன் மூலம் இந்த ஆலை பெரும்பாலும் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எந்திர மனிதன் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மாருதி சுஸுகி, ராயல் என்பீல்டு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் புதிதாக தொடங்க உள்ள ஆலைகளில் ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

மேலும் கார் இப்போது போக்கு வரத்துக்கு மட்டுமின்றி சொகுசான பயண வாகனமாக மாறிவருகிறது. இதனால் சொகுசு கார்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இத்தகைய கார்களின் உற்பத்தி மிகவும் கடினமாக உள்ளது. இத்தகைய பணிகளில் மனிதர்களை விட எந்திர மனிதனின் செயல்பாடு துல்லியமாகவும், தடையின்றியும் இருப்பது இந்நிறுவனங்களுக்கு சாதக அம்சமாகும். மேலும் கார் தயாரிப்பில் சில முக்கியமான பகுதி உருவாக்கத்தில் மனிதர்களை விட ரோபோக்களை பயன்படுத்துவது பல மடங்கு பயனளிப்பதாக உள்ளது. காரின் மேற்பகுதி உருவாக்கத்தில் எடை குறைவான தகடுகளை வெல்ட் செய்வதில் மனிதர்களை விட ரோபோக்களே துல்லியமாக செயல்படுகின்றன என்கின்றனர் கார் தயாரிப்பாளர்கள்.

எந்திர மனிதர்களின் கைகளில் உள்ள ரோபோக்களில் உள்ள கேமிராக்கள் பல்வேறு கோணங்களில் படங்களை பதிவு செய்து துல்லியமாக பணிகளை மேற்கொள்கின்றன. இந்த அளவுக்கு துல்லியமாக மனிதர்களால் செயல்படுவது சாத்தியமில்லை என்று ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் பொறியியல் மற்றும் திட்டமிடல் பிரிவு தலைவர் ஹெயின்ஸ் எட்ஸ்மஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல உயரமான பகுதிகள் மற்றும் லேசர் வெல்டிங் உள்ளிட்டவை ரோபோக்களால் சாத்தியமாகியுள்ளன என்பதை மறுக்க முடியாது. மேலும் ரோபோக்களை பயன்படுத்துவதால் பொருள்கள் சேதாரம் குறையும். இதனால் செலவு குறையும். மேலும் மேற்பூச்சு சரியான கலவையில் இருக்க வேண்டும். இது தானியங்கி ரோபோக்களால் மட்டுமே சாத்தி யமாகும். இதுபோன்ற பகுதிகளில் மனிதர்களை பயன்படுத்தும்போது அதிக செலவுபிடிக்கும். நேரமும் அதிகமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுவது, எண்ணெய் கசிவு, பெயிண்ட் பூச்சு உள்ளிட்டவற்றில் துல்லியத் தன்மைக்காக ஹூண்டாய் நிறுவனம் ரோபோக்களை தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பெயிண்ட் அடிக்கும் பகுதியில் மனிதர்களை பணியில் ஈடுபடுத்துவதை விட ரோபோக்களை பயன்படுத்துவதில் துல்லியம் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புணே மற்றும் சனந்த் நகரில் உள்ள ஆலையில் 7 வெல்டிங் ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதேபோல செலவு குறைந்த பொருள் உற்பத்திக்கும் ரோபோக்களை பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரோபோக்களை பயன்படுத்துவதால் பணிகள் விரைவாக நடைபெறுவதால் ஏற்றுமதியை உரிய நேரத்தில் அதிக எண்ணிக்கையில் அளிக்க முடிவதும், ஆட்டோமொபைல் நிறுவனங்களை எந்திர மனிதன் பக்கம் திரும்பச் செய்துள்ளது.

எந்திரமயமாதலால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மை. இதை ஆட்டோமொபைல் ஆலைகளில் பணிபுரியும் ஊழியர் சங்கங்களும் நன்கு உணர்ந்துள்ளன. ஆனால் அது இந்தியாவில் நடைமுறைக்கு வர சில ஆண்டுகளாகலாம். ஏனெனில் ஒரு ரோபோவின் விலை 3 லட்சம் டாலர் முதல் 4 லட்சம் டாலர் வரையாகும்.

அதாவது பணியாளர்களைக் கொண்டு ஆலையை நிர்வகிக்கும் செலவைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். இதனால் இப்போதைக்கு எந்திர மனிதனின் நடை இங்கு மெதுவாகத்தானிருக்கும். ஆனாலும் எந்திர மனிதன் விஸ்வரூபமெடுத்து மனிதர்களை புறந்தள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கூறலாம்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x