Published : 19 Jun 2017 10:45 AM
Last Updated : 19 Jun 2017 10:45 AM

வங்கிகளின் வாராக் கடன் வசூல்திவால் மசோதா கை கொடுக்குமா?

வங்கிகளின் வாராக்கடன் அளவு மட்டும் ரூ. 8 லட்சம் கோடி. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் பாக்கி மட்டும் ரூ. 6 லட்சம் கோடி.2017-ம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் செலவு மதிப்பு ரூ. 9.72 லட்சம் கோடி. ஆக வங்கிகளின் வாராக்கடன் தொகையை வசூல் செய்தால் மத்திய அரசின் பட்ஜெட்டையே போட்டு விட முடியும்.

வங்கிகளை நலிவடையச் செய்யும் வாராக் கடனை வசூல் செய்ய அனைத்து பகீரத பிரயத்தனங்களையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கடன் கொடுத்த நிறுவனங்களின் கழுத்தில் கை வைத்து பணத்தை வசூலிக்க முடியாது. கடனை திரும்பப் பெறுவதில் சில பொருளாதாரக் காரணிகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

இப்போது கடன் வசூலுக்கு அரசு எடுத்துள்ள புதிய முயற்சிதான் திவால் மசோதா. ஆம், திவால் மசோதா நடவடிக்கை மூலம் கடனை வசூலிக்க எத்தனித்திருக்கிறது மத்திய அரசு.

திவால் மசோதா என்றால் என்ன?

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மசோதாக்களில் மிகவும் முக்கியமானது திவால் மசோதாவாகும். Insolvency and Bankruptcy Code (IBC) எனப்படும் இந்த மசோதா, கடன் வசூலுக்கு இரண்டு வழிகளைத்தான் காட்டுகிறது. அதாவது கடன் பெற்ற நிறுவனங்கள் பொருளாதாரச் சூழல் காரணமாக நலிவடைந்துள்ளதா, அதை சீரமைக்க முடியுமா என்று ஆராய வேண்டும். இல்லையெனில் அந்நிறுவனத்தை மூடிவிட்டு அதற்குரிய சொத்துகளை ஏலம் விட்டு கடனை வசூலிக்க வேண்டும்.

``மீள வாய்ப்பு கொடு, அதிலும் மீளாவிட்டால் மூடிவிடு,’’ என்பதன் சுருக்கம்தான் திவால் மசோதா. இதை செயல்படுத்துவதற்கான காலம் 180 நாள்களாகும். சிறப்புக் காரணங்கள் இருப்பின் கூடுதலாக 90 நாள் அவகாசம் அளிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.

12 நிறுவனங்கள்

முதல் கட்டமாக இந்த திவால் மசோதா 12 நிறுவனங்கள் மீது பாயப்போகிறது. இதில் முதலில் இருப்பது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்தான். இந்த குழுமம் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 1.25 லட்சம் கோடி.

முதல் கட்டமாக ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தொகை பெற்று திரும்பாத நிறுவனங்கள் கணக்கெடுக்கப்பட்டன. வாராக்கடன் பிரிவில் சேர்ந்துள்ள நிறுவனங்களில் 60 சதவீதம் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவை என்பதால் இந்த அளவீடு நிர்ணயிக்கப்பட்டது.

மொத்த வாராக்கடனில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்ற நிறுவனங்களின் பங்களிப்பு 25 சதவீதமாகும். அதாவது இந்நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலித்தாலே ரூ. 2 லட்சம் கோடி வசூலாகிவிடும்.

எப்படி செயல்படும்?

வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் அவற்றின் செயல்பாடுகளை ஆராய ரிசர்வ் வங்கி ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் நிபுணர்களை உள்ளடக்கியதாக கொண்ட இக்குழு ஐஏசி எனப்படுகிறது.

இக்குழு ஆராய்ந்து பட்டியலை ஐபிசி அதாவது திவால் மசோதாவுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கி கடன் வழங்கிய வங்கிகளுக்கு வழிகாட்டுதலை அளிக்கும். அதன் அடிப்படையில் திவால் சட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்படும். தற்போது 12 நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தை மேற்கொள்ளுமாறு இக்குழு பரிந்துரைத்துள்ளது.

இரு கட்ட நடவடிக்கை

முதல் கட்டமாக, கடன் பெற்ற நிறுவனங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். கடன் பெற்ற நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை இக்குழு ஆராயும்.

கடன் பெற்ற நிறுவனம் மீண்டும் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றால் தொழில்முறை தீர்வுக் குழு அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்போது நிறுவனம் மீது வங்கி தொடர்ந்துள்ள கடன் வசூல் வழக்குகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும்.

குழு அளிக்கும் பரிந்துரைகள் கடன் வழங்கிய வங்கிகளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதற்கான திட்டத்தை வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ஏற்க வேண்டும். இதற்காக வங்கிகளில் உருவாக்கப்பட்ட குழு இந்தப் பரிந்துரையை ஏற்காவிடில் அந்த நிறுவனம் திவாலானதாகக் கருதப்பட்டு சொத்துகளை விற்கும் நடவடிக்கை தொடங்கப்படும்.

ரூ. 5.73 லட்சம் கோடி கடன்

பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ. 5,73,682 கோடியாகும். இந்த அளவானது 2016 மார்ச் வரையான நிலவரமாகும்.

இப்போதுதான் நிறுவனங்கள் பெற்ற கடன் தொகைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேசமயம் தனி நபர் பெற்ற கடன் விவர பட்டியலை வெளியிட முடியாது என ஆர்பிஐ தெரிவித்துவிட்டது. 1934-ம் ஆண்டு வெளியான ரிசர்வ் வங்கி சட்டம் இதற்கு அனுமதி தரவில்லை எனக் கூறுகிறது.

பாரபட்சம் கூடாது

வங்கிகளில் கடன் பெற்று அதை ரத்து செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கருத்து தெரிவித்திருந்தார். பொதுவாக விவசாயக் கடன் தள்ளுபடிக்கு அவர் இக்கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் வாராக்கடன் தொகையில் தனி நபர் பலரும் கடனை திரும்பச் செலுத்தும் அளவுக்கு சொத்து இருந்தும் அதைத் திரும்ப செலுத்தாமல் உள்ளனர். இத்தகைய willful defaulter-ஐ அடையாளம் கண்டு அவர்களது சொத்துகளை கையகப்படுத்துவதில் தயக்கம் கூடாது. அப்போதுதான் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும்.

அரசு தற்போது மேற்கொண்டுள்ள திவால் மசோதா மூலமான கடன் வசூல் பலனளித்தால் அது வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்குத் தீர்வு அளிப்பதாக இருக்கும்.

``எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்,’’ என்ற மனோ நிலை தனி நபருக்கு மட்டுமல்ல, அரசுக்கும்தான். வாராக் கடனை வசூலிக்க தற்போது திவால் மசோதா சட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. இது பலன் தருமா? அனைத்து செயலுக்கும் காலம்தான் பதிலாக அமையும். இதற்கும் காலமே பதில் சொல்லட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x