Published : 24 May 2018 09:03 AM
Last Updated : 24 May 2018 09:03 AM

எஃப்-16 போர் விமான தயாரிப்பு ஏற்றுமதி மையமாக இந்தியா மாறும்: லாக்ஹீட் மார்டின் தகவல்

எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவில் தாங்கள் தயாரிக்க இருப்பதன் மூலம் போர் விமான ஏற்றுமதி மையமாக இந்தியா மாறும் என லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த முப்பது ஆண்டுகளில் 16,500 கோடி டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள எஃப்-16 போர் விமான சந்தையில் இந்தியா நுழைவதற்கு இது உதவும் எனவும் லாக்ஹீட் மார்டின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த லாக்ஹீட் மார்டினின் உத்தி மற்றும் தொழில் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் விவேக் லால், இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள எஃப்-16 போர் விமானம் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள எஃப்-16 போர் விமானங்களில் மிகவும் அதிக வலிமை உடையதாகவும், மேம்பட்ட தொழில்நுட்பம் உடையதாகவும் இருக்கும் என தெரிவித்தார். எஃப்-16 விமான தயாரிப்பு இந்தியாவில் ஆரம்பிக்கும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் ஏற்றுமதி தொடங்கும் எனவும், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

எஃப்-16 பிளாக் 70 போர் விமானத்தில் மேம்பட்ட ரேடார் தொழில்நுட்பம், புதிய வகை காக்பிட், மேம்பட்ட ஆயுதங்கள், அதிக தூரம் பயணிக்கும் விதத்திலான எரிபொருள் குழாய்கள், தரையோடு மோதுவதை தடுக்கும் வகையிலான ஜிசிஏஎஸ் அமைப்பு, புதிய வகை இன்ஜின் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை எந்த போர் விமான தயாரிப்பு நிறுவனமும் செயல்படுத்தாத புதியவகை தொழில்நுட்பங்கள் எஃப்-16 போர் விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப் படை உட்பட 25 முக்கிய விமானப் படைகளில் 3,000 எஃப்-16 வகை போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றுக்கான தேவை இன்னமும் குறையவில்லை. ஊழியர்கள், எரிபொருள், உதிரி பாகங்கள், கோளாறுகளை சரி செய்தல் மற்றும் செயல்பாடுகள் போன்ற வகையில் எஃப்-16 வகை விமானங்களின் சந்தை மதிப்பு உலக அளவில் அடுத்த முப்பது ஆண்டுகளில் 16,500 கோடி டாலராக இருக்கும்.

எஃப்-16 வகை விமான தயாரிப்பு பொருட்களை `மேக் இன் இந்தியா’ திட்டப்படி இந்தியாவிலுள்ள 100 விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று இருக்கிறோம். ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ், தெர்மா, ஹனிவெல், ஃபோக்கெர், இஸ்ரேலி ஏரோஸ்பேஸ், எல்பிட், யுடிசி, ஈட்ஆன், மூக் மற்றும் பார்க்கர் ஆகிய நிறுவனங்களுடன் எஃப்-16 விமானங்களைத் தயாரிக்க கூட்டு வைத்திருக்கிறோம். லாக்ஹீட் மார்டின் - டாடா கூட்டுறவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பாதுகாப்புத் துறையில் தனியாரை அனுமதிப்பது குறித்த இந்தியாவின் முன்னெடுப்பால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெறுவார்கள். இந்திய தொழில்துறையுடனான எங்கள் உறவை நீண்ட காலத்துக்கு தொடர்வோம். இதன்மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படும் என விவேக் லால் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 18 அன்று லாக்ஹீட் மார்டின் ஏரோஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் (டிஎல்எம்ஏஎல்) மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனங்கள் இணைந்து ஹைதராபாதில் உள்ள அதிபட்லாவில் 4,700 சதுர அடியில் ஒரு ஆலையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் லால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x