Published : 17 May 2018 08:11 AM
Last Updated : 17 May 2018 08:11 AM

மரபுசாரா மின்னாற்றல் திட்டங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

மத்திய அரசு செயல்படுத்த உள்ள மாற்று எரிசக்தி திட்டங்களான காற்றாலை மற்றும் சூரிய மின்னாற்றல் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 3 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கூறியுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் மின்சாரத்தை காற்றாலை, சூரிய ஆற்றல் மூலம் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டும்போது 3 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ 2030-ம் ஆண்டில் சர்வதேச அளவில் 2 கோடியே 40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணித்துள்ளது. இவை அனைத்தும் சரியான கொள்கை வகுப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய வகையில் செயல்படுத்தும்போது இது சாத்தியமாகும். அதேசமயம் தொழிலாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்று குறிப்பிட் டுள்ளது.

2018-ல் உலக மேம்பாடு மற்றும் சமூக வெளிப்பாடு குறித்த அறிக்கையில் இந்தியாவில் பசுமை சூழலில் வேலை வாய்ப்பு குறித்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதில் 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலை மற்றும் சூரிய மின்னாற்றல் மூலம் உற்பத்தி செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சாரம், சுற்றுச்சூழல், நீராதாரம் மற்றும் இயற்கை வளங்களைக் காப்பதற்கான கவுன்சில் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் மின்னுற்பத்தியாளர்கள் உள்ளிட்டவர்களால் 3 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

அரசின் இலக்கை எட்ட வேண்டுமானால் சூரிய பலகை பதிப்பவர்கள், மேற்கூரையில் சூரிய பலகை பதிப்பவர்கள், காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் ஈடுபடுவோர் என பல பிரிவுகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். உள்நாட்டில் ஏற்படும் ஊழியர்கள் தட்டுப்பாட்டை போக்க தொழில்நுட்ப பயிற்சியை அளிப்பதன் மூலமே ஈடுகட்ட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவைப் போன்றே எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த உள்ளன. இதனால் இத்துறை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x