Published : 11 May 2018 08:36 AM
Last Updated : 11 May 2018 08:36 AM

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு; வர்த்தகப் பற்றாக்குறை 6.4%-ஆக உயரும் அபாயம்- இந்தியா ரேட்டிங்ஸ் எச்சரிக்கை

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் 2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் எச்சரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 6.4 சதவீத அளவுக்கு உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியாவின் தங்க இறக்குமதி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பற்றாக்குறை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 சதவீத அளவுக்கு சரிந்து 67 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதை வைத்துக் கணக்கிடும்போது பற்றாக்குறை 6.4 சதவீத அளவுக்கு உயரும் என்று தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உள்நாட்டில் அனைத்து பொருள்களின் விலையும் உயரும். இது தவிர அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். இதனால் டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வர்த்தகம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40.6 சதவீத அளவுக்கு சரிந்தது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் மிகவும் அதிக அளவாக 55.8 சதவீத அளவுக்கு இருந்தது. சர்வதேச அளவில் நிலவும் மந்தமான சூழல் மற்றும் சில நாடுகளில் உள்நாட்டு தொழிலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் காரணமாக ஏற்றுமதி குறைந்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த முறைகேட்டைத் தொடர்ந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கி ஒப்புதல் கடிதம் (எல்ஓயு) அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால் இதன் காரணமாக ஏற்றுமதி பாதிக்கவில்லை என்று இத்துறையினர் தெரிவித்தனர்.

2018-ம் நிதி ஆண்டில் பெட்ரோலியம் பொருள்கள் இறக்குமதி 25 சதவீதமும், தங்கம் இறக்குமதி 32 சதவீதமும் அதிகரித்தது. இதனால் ஒட்டுமொத்த இறக்குமதி 19.7 சதவீதம் உயர்ந்து மொத்த இறக்குமதி மதிப்பு 45,970 கோடி டாலரைத் தொட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x