Last Updated : 06 Apr, 2018 02:52 PM

 

Published : 06 Apr 2018 02:52 PM
Last Updated : 06 Apr 2018 02:52 PM

புதிய மாடல் ஹோண்டா அமேஸ் புக்கிங் தொடக்கம்: மாருதி டிசையருக்கு போட்டியாகுமா?

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இரண்டாம் தலைமுறை அமேஸ் காருக்கான முன்பதிவை இன்று தொடங்கியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தொடர்ந்து விற்பனையை அதிகரித்து வருகிறது. புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்வதில், மாருதி, ஹூண்டாய் உட்பட பிற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வரும் ஹோண்டா நிறுவனம், டெல்லி வாகன கண்காட்சியில் மூன்று புதிய வடிவிலான கார்களை அறிமுகம் செய்துள்ளது.

ஐந்தாவது தலைமுறை சிஆர் -வி, 10-வது தலைமுறை சிவிக் மற்றும் 2-வது தலைமுறை அமேஸ் ஆகிய இந்த கார்கள் பழைய வடிவில் இருந்து தரம் உயர்த்தப்பட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஹோண்டா அமேஸ் அடுத்த மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதையொட்டி புதிய காருக்கான புக்கிங் இன்று தொடங்கியது. 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து அமேஸ் காரை முன் பதிவு செய்து கொள்ளலாம் என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா அமேஸ் 2.57 என்ற எண்ணிக்கையில் ஏற்கெனவே விற்பனையாகியுள்ளது. மாருதி டிசையர்,டாடா ஜெஸ்ட், டாடா டீகோர், ஹூண்டாய் எக்ஸென்ட் உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியாக புதிய அமேஸ் கார் திகழும் என தெரிகிறது.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் ராஜேஷ் கோயல் கூறுகையில் ‘‘இந்தியாவில் எங்கள் தயாரிப்புகள் அனைத்துமே நல்லமுறையில் விற்பனையாகி வருகின்றன. வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் நாங்கள் மீண்டும் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளோம்’’ எனக் கூறினார்.

இன்ஜினில் மாற்றங்கள் இல்லாமல், 88 ஹெச்பி பவருடன் கூடிய பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவருடன் கூடிய டீசல் மாடல்களில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக சிவிடி தொழில்நுட்பத்துடன் டீசல் இன்ஜினில் அமேஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் கார் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. கூடுதலான இண்ட்டீரியர் வசதியும் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x