Last Updated : 14 Mar, 2018 11:59 AM

 

Published : 14 Mar 2018 11:59 AM
Last Updated : 14 Mar 2018 11:59 AM

‘மினிமம் பேலன்ஸ்’ பராமரிக்காத 41 லட்சம் வங்கி கணக்குகள் ரத்து: எஸ்பிஐ நடவடிக்கை

சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரத்து செய்துள்ளது.

இந்த விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மனுச் செய்தார். அதில், சேமிப்புக் கணக்கில் குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டது. அது முதல் கடந்த ஜனவரி மாதம் வரை குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத எத்தனை சேமிப்பு கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு இருந்தார்.

இந்த கேள்விக்கு ஸ்டேட் வங்கி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மொத்தம் 40 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் 16 கோடி வாடிக்கையாளர்கள் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்கள்.

இதில் ஜன்தன் திட்டத்தின் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களைத் தவிர மற்ற சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மாதம் தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய்  வரை, கிராமம், நகரம்,  பெருநகரம் என குறைந்த அளவு இருப்பு பராமரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரலில் ஸ்டேட் வங்கி உத்தரவிட்டது.

இதன் மூலம் குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக கடந்த ஜுன் முதல் செப்டம்பர் வரை ரூ.1,771.67 கோடி அபராதமாக வசூலித்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் அளித்தது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத்தை ரூ.50 லிருந்து ரூ. 12, ரூ.10 ஆகக் குறைக்கப்படுவதாக ஸ்டேட் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x