Published : 25 Feb 2018 09:34 AM
Last Updated : 25 Feb 2018 09:34 AM

வாட்ஸ்அப்பில் வெளியான ஹெச்டிஎப்சி வங்கி நிதிநிலை: விசாரணை நடத்த செபி உத்தரவு

ஹெச்டிஎப்சி வங்கியின் காலாண்டு நிதி நிலை அறிக்கை பங்குச் சந்தைக்கு தெரியப்படுத்தும் முன்பாக அந்த விவரங்கள் வாட்ஸ்அப் மூலம் வெளியானது. இது குறித்து துறைவாரியான விசாரணை நடத்துமாறு ஹெச்டிஎப்சி வங்கிக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கியின் நிதி நிலை அறிக்கை மிகவும் ரகசியமான விஷயம். இயக்குநர் குழு விவாதித்து அதன் பிறகு பங்குச் சந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் பிறகே ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இந்த விவரம் வாட்ஸ்அப்பில் வெளியானது வங்கி நிர்வாக செயல்பாடுகளில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதை உணர்த்துகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வங்கி செயல்பாடுகளை வலுப்படுத்துமாறு செபி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்றும் அது கசிய யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இயக்குநர் குழு விவாதித்த விவரங்களை குறிப்பெடுத்தவர் யார் அதை விரிவாக வெளிப்படுத்தியவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறு காலக் கெடுவையும் செபி விதித்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கியின் 2017 ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியானபோது அந்த முடிவுகளும் வாட்ஸ்அப்பில் வெளியான முடிவுகளும் ஒரே மாதிரி இருந்ததை செபி கண்டுபிடித்தது. வங்கியின் காலாண்டு அறிக்கை ஜூலை 24-ம் தேதி வெளியானது. ஆனால் இந்த விவரங்கள் அனைத்தும் ஜூலை 21-ம் தேதியே வாட்ஸ்அப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x