Published : 20 Feb 2018 08:51 AM
Last Updated : 20 Feb 2018 08:51 AM

நிதி நெருக்கடியில் தவிக்கும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சலுகை: விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகிறது

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிவாரணம் வழங்கும் விதமாக புதிய சலுகைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு செலுத்த வேண்டிய தொகைக்கான கால அவகாசம் நீட்டிப்பது உள்ளிட்ட சலுகைகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பெருமளவு நிதிநெருக்கடியில் உள்ளன. இந்நிறுவனங்கள் தொடர்ந்து தொழிலில் நிலைத்திருக்க எத்தகைய சலுகைகளை அளித்து இவற்றை மீட்கலாம் என்பதை ஆராய அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது.இந்த குழு சில பரிந்துரைகளை தொலைத் தொடர்பு கமிஷனுக்கு அளித்தது. இதன் மூலம் இத்துறையின் கடன் சுமையைக் குறைக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இத்துறையின் கடன் சுமை ரூ. 4.6 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. போட்டி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகைகளை அளித்ததால் நிறுவனங்களின் லாபம் குறைந்து கடுமையான நெருக்கடியில் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்ளன.

அலைக்கற்றையை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அதற்கான தொகையை 10 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். இந்த கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டியை மிகக் குறைந்த அளவான 2 சதவீத அளவுக்கு விதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல நிறுவனங்கள் வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அளவை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீத அளவுக்கு அதிகரித்துக்கொள்ளலாம் என்ற சலுகையை டிராய் அறிவித்திருந்தது. இதுவும் அரசின் சலுகை அறிவிப்பில் இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்த சலுகைகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் ஐடியா, செல்லுலர் இணைப்பு எளிதாகும். ஏனெனில் இரு நிறுவனங்களும் இணையும்போது இதன் வசம் 25 சதவீத அளவுக்கு மேல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை இருக்கும். அதேபோல புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோ கூடுதல் அலைக்கற்றையை வாங்குவதற்கும் வழியேற்படும். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x